Friday 28 July 2017

மாற்றம் – முன்னேற்றம் - வெற்றி

பிரபஞ்சத்தின் கோடான கோடி உயிர்களில் நீங்களும் ஒருவர்நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? என்பதை நீங்கள் தான் தீர்மானம் செய்ய முடியும். மற்றவர்கள் வேண்டுமானால் வழிகாட்டலாம். ஆலோசனை தரலாம். ஆனால் மாற்றிக் கொள்வதும், மாறுவதும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. அரசியல் முழக்கம் போலமாற்றம்முன்னேற்றம்வெற்றிஎன்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மட்டுமல்ல உங்களின் இலக்கினை நோக்கியும் முன்னேற வைக்கும்.

எத்தனை திறனுள்ள கப்பலாக இருந்தாலும் அதில் ஏற்படும் சிறு ஓட்டை கப்பலை மூழ்கடித்து விடும். அதேபோல நீங்கள் என்ன தான் திறனுடையவராக இருந்தாலும் சில புற, அகக் காரணிகளால் அதுவரையிலும் உங்களுக்குப் பழக்கபட்டிருக்கும் விசயங்களிலிருந்து வெளிவந்து அதில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளும் போது உங்களின் செயல்பாட்டிற்கான ஊக்கம் இரு மடங்காகும். பத்தோடு பதினொன்று என்றில்லாமல் பத்தில் ஒன்றாய் இருக்க வேண்டுமானால் கீழ் உள்ள விசயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். அத்தியாவசியம்.

1.முன் மாதிரியாக இருங்கள்:-

பொதுவாக வேலையிடங்களில் தலை எப்படியோ அப்படித் தான் வாலும் என்றும் அரசியல் களங்களில் தலைவன் எப்படியோ அப்படித் தான் தொண்டனும் என்று சொல்வார்கள். இதன் உள்ளாந்த பொருள் தலைமைத்துவத்தில் இருப்பவன் முன் மாதிரியாக இருக்க வேண்டும். நான் தலைமைத்துவத்தில் இல்லையே! பின் எதற்கு நான் இப்படி இருக்க வேண்டும்? என்று நீங்கள் கேட்டால் தவறில்லை. ஆனால், இந்த மாற்றம் உங்களை அந்த நிலைக்கு எடுத்துச் செல்லும். இந்த விசயத்தில் தான் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை, மிகச் சாதாரண விசயங்களில் கூட இருக்கலாம். பிரபலமான ஒருவரின் இல்லத் திருமணம், தலைவாழை இலை போட்டு அறுசுவை உணவோடு நடந்த விருந்தின் முதல் பந்தி முடிந்தது. அடுத்த பந்தியில் அமர மற்றவர்கள் காத்திருக்கிறார்கள். சாப்பிட்ட இலைகளை எடுப்பதற்கு ஆட்களை நியமிக்க மறந்து போனதால் சாப்பிட்ட இலைகள் பந்தியிலேயே இருந்தது. எடுக்கச் சொல்லி ஆளாளுக்குச் சொன்னார்களேயொழிய காரியம் ஆகவில்லை. இதைக் கவனித்த ஒருவர் தான் சாப்பிட்டு முடித்த இலையைத் தானே எடுத்துக் கொண்டு போய் அதற்குரிய இடத்தில் போடுகிறார். அவரைப் பார்த்த மற்றவர்களும் அவ்வாறே செய்ய அடுத்த பந்திக்கு இடம் தயாரானது. அப்படிச் செய்தவர் ஜெமினி ஸ்டுடியோ அதிபராக இருந்த எஸ்.எஸ். வாசன். அந்த திருமண வைபவம் .வி. மெய்யப்ப செட்டியார் வீட்டு திருமணம். முன் மாதிரி மனிதர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இதை விட என்ன உதாரணம் வேண்டும்

2.தீர்மானிப்பவராக இருங்கள்:-

சரியோ, தவறோ நீங்கள் சார்ந்த விசயங்களில் தீர்மானிக்கும் நபராக நீங்களே இருங்கள். மற்றவர்களிடமிருந்து ஆலோசனை, அறிவுரைகளைப் பெறும் அதே நேரம் முடிவுகள் உங்களைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்கவும் அதைத் திருத்திக் கொள்ளவும் முடியும்,. இல்லையென்றால் திருத்திக் கொள்ள வேண்டிய தவறுகள்  குற்றச்சாட்டுகளாக திசை மாறிவிடும். குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் இன்னொரு பிரச்சனைக்கான வசலாக இருக்குமேயொழிய தீர்வுகளுக்கான வாசல்களாக அமைவதில்லை. அதனால் தீர்மானிப்பவராக இருப்பதன் வழி தீர்வுகளைத் தேடுபவராகவும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள்

3.விலகி ஓடாதீர்கள்:-

பிரச்சனைகளைக் கண்டு விலகி நிற்காதீர்கள். தட்டிக் கழிக்கும் போக்குக் கொண்டவராக இருப்பதன் மூலமாக உங்களுக்கு நீங்களே சுய மதிப்பற்றவராக மாறி விடுவீர்கள். அது  மற்றவர்களின் முன் உங்களை நம்பிக்கையற்றவராகவே அடையாளப் படுத்தும். துணிந்து முடிவெடுப்பவர். அவரை நம்பிச் செய்யலாம். பிரச்சனைகளைச் சமாளிக்கும் சாதுர்யம் கொண்டவர் என்பது போன்ற அடையாளங்கள் எப்பொழுதும் உங்களை ஒரு வெற்றியாளராக காட்டிக் கொண்டே இருக்கும். உங்களின் இலக்கை முழுமையாக அடையாத நிலையிலும் கூட இப்படியான அடையாளங்கள் உங்களை மற்றவர்களால் வெற்றியாளராகவே பார்க்கச் செய்யும்.

4.பெறுவதை விட அதிகம் கொடுங்கள்:-

மற்றவர்களின் உதவி இன்றி எதுவும் சாத்தியமில்லை. உங்களுக்குச் சாத்தியமாக்கித் தந்தவர்களுக்கு அந்த வெற்றி தந்ததைத் விட இன்னும் ஒரு மடங்கு அதிகம் கொடுங்கள். புதிதாக வேலைக்குச் சேரும் நீங்கள் அதற்கு உங்களைத் தகுதிப் படுத்திக் கொள்ளும் வரை தரப்படும் சம்பளம், இதர சலுகைகள் அங்கு பணி செய்து கொண்டிருப்பவர்களின் உழைப்பில் இருந்து தரப்படுகிறது என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள். இதைத் தொழில் முறை ஆலோசகர்கள்ஊதியத்திற்கு மேல் ஊழியம் செய்யுங்கள்என்கின்றனர். வேலைக்குச் சேர்ந்த சமயத்தில் வேலையில் காட்டி வந்த அக்கறையை பதவி உயர்வு கிடைத்த பிறகு காட்டாமல் இருப்பவர்கள் நம்மில் பலர் இருக்கத்தானே செய்கிறோம்! ஆனால், வெற்றியாளர்கள் கூடுதலான அக்கறை, அர்ப்பணிப்பு மூலம் இன்னும் உயர்ந்த வெற்றிகளைத் தங்கள் வசப்படுத்திக் கொள்கின்றனர்.

5.விதிகளைப் புறந்தள்ளுங்கள்:-

இப்படித்தான் என்று வரையறுக்கப்பட்ட விதிகளோடு இயங்காதீர்கள். விதிகளை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் போது மட்டுமே  இலக்குகளை மிகச் சரியாக உங்களால் சென்றடைய முடியும், போக வேண்டிய இடம் முக்கியம். அதில் மாற்றங்கள் இருக்கக் கூடாது, அனால் பயணிக்க வேண்டிய பாதைகளும், முறைகளும் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அவைகளை அந்தந்தச் சூழல்களே தீர்மானம் செய்கின்றன. சூழலுக்கேற்பச் செயல்படாத போது வெற்றிக்கான சாத்தியங்கள் குறைந்து போகின்றது. எல்லாம் விதி என்ற மனப்போக்கு கொள்ளாமல் முயற்சித்துப் பார்ப்பதன் மூலம் அவைகளை மீறுபவராக இருங்கள்

6. பரந்த மனப்பான்மையோடு இருங்கள்:-

எல்லாம் தனக்கே என்ற மனப்போக்கு அற்றவராக இருங்கள். கிடைத்த வெற்றியின் சதவிகிதத்தை எல்லோருக்கும் பொதுவானதாக ஆக்குங்கள், ”என்னால் சாத்தியமானதுஎன்று சொல்வதற்குப் பதிலாகநம்மால் சாத்தியமானதுஎன்று சொல்லிப் பாருங்கள். அது தரும் பலன் இன்னும் பல வருடங்களுக்கு உங்களை தொடர் வெற்றியாளர் என்ற நிலையிலேயே தாங்கி நிற்கும். உலகப் புகழ்பெற்ற காஃபிக்கடையான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் ஊதியம் என்பதையும் தாண்டி வேலைக்குச் சேர பலரும் விரும்பக் காரணம் அதன் அதிபர் ஹோவர்ட் ஸ்கல்ஸ் தன் ஊழியர்களிடம் காட்டும் மதிப்பும், அக்கறையுமே என்பது  அவரின் வெற்றிக்கதை நமக்குச் சொல்லும் செய்தி.

மாற்றம் - முன்னேற்றம் என்பதைச் சொன்னால் மட்டும் போதாது. செய்தும் காட்ட வேண்டும். அப்படிக் காட்டினால் நீங்களும் வெற்றியாளராகலாம்.

நன்றி : அச்சாரம் மாத இதழ்

No comments:

Post a Comment