Tuesday 11 July 2017

கனவை நனவாக்குங்கள்

கனவு காணாத மனிதர்களே இல்லை. கனவு என்பது நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த விசயமாகி விட்டது. அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருக்கவே செய்கிறது. இலக்கின் இன்னொரு பெயர் தான்கனவு”. அதை அவரவர் மொழிக்கேற்ப ஆசை, விருப்பம், தேவை என அழைத்துக் கொள்கிறோம். அதன் காரணமாகவே மறைந்த அப்துல் கலாம் தன்னுடைய வாழ்நாள்; முழுக்கப் பள்ளிக் குழந்தைகள் தொடங்கி இளையோர்கள் வரைகனவு காணுங்கள்என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார். ஒரு இலக்கை எட்டுவதை முன் கூட்டியே மனதிற்குள் காட்சிப் படுத்திப் பார்த்து மகிழ்ச்சி கொள்வதையே கனவு என்று மனவியலாளர்கள் வரையறுக்கின்றனர்

கனவுகளை நிலை நிறுத்துவதற்கான பிளாட்பார்ஃம் (BASEMENT) நம்முடைய மனம். மனமானது வெளி மனம், உள்மனம் என்ற இரண்டு அடுக்குகளாக இருக்கிறது. வெளிமனமானது எப்பொழுதும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கும். சரி என நீங்கள் தீர்மானிக்கும் விசயத்தை இல்லை என்றும், இல்லை என்றால் சரி என்றும் முரண்டு பிடிக்கும். மனதைக் குரங்காக வர்ணித்த கவிஞர் கண்ணதாசனின் வாக்கு பொய்யில்லை. மனதை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் மட்டுமே வெளி மனதைத் தாண்டி உங்களால் இயங்க முடியும். அதனால் தான் தியானம், யோகா போன்ற பயிற்சி வகுப்புகளில் முதலில் மனதை ஒழுங்கு செய்யவும், கட்டுப்படுத்தவும் கற்றுத் தருகிறார்கள்.

வெளிமனதைத் தாண்டி உள்மனதில் உங்களின் கனவைப் பதிவு செய்வதில் வெற்றி பெறுதலுக்கான முதல் படி நிகழ்கிறது. அதன் பின் அந்தக் கனவை எட்டுவதற்காக நீங்கள் வகுத்து வைத்திருக்கும் திட்டங்களை காட்சிகளாகத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு உங்களின் இலக்கு, திட்டமிடல், அதில் அடைந்திருக்கும் முன்னேற்றங்கள், அதற்காகச் செய்து வரும் ஏற்பாடுகள் என எல்லாவற்றையும் எழுத்து வடிவமாக்கி நீங்கள் அதிகம் பயன்படுத்தும், புழங்கும் இடங்களில் கண்ணில் படும் படியாக வையுங்கள். ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்து அதை எப்போதும் உங்களோடு வைத்திருங்கள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதைப் பார்த்து மனதிற்குள் உள்வாங்கிய படியே இருங்கள். அப்படி உள்வாங்க முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும் வெளிமனமானது தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்எதிர் கேள்விகள் வழியாக உங்களின் நம்பிக்கைகளை உடைக்க முயலும். சிலந்தி வலையாய் பிடித்து இழுக்கும். இதுபோன்ற வெளிமனத் தடைகளை உடைத்து உள்மனதில் தொடர்ந்து பதியம் போட முயலுங்கள். இதைத் தான் புத்தர் எல்லோரிடமும் நிகழ்த்திக் காட்டினார். அவர் எதையும் மூன்று முறை சொல்வது வழக்கம்.அதற்குக் காரணம் கேட்ட போது, “முதல் முறை நீங்கள் கேட்பதே இல்லை. இரண்டாம் முறை ஏதாவது ஒரு பகுதியைத் தான் கேட்பீர்கள். மூன்றாம் முறை தான் நான் கூறுவதைச் சரியாகக் கேட்கிறீர்கள்என்றார். அவர் நமக்குச் சொன்னதை அப்படியே மனதுக்கு மடை மாற்றுங்கள். இலக்காகிய கனவு உள்மனதில் காட்சிகளாகப் பதியும் வரை மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டே இருங்கள்.

உள்மனதிற்கு இப்படித் திரும்பத் திரும்பத் தரும் போது தன்னிச்சையாகவே மனம் அதை ஏற்கத் தயாராகி விடுகிறது. அதனால் தான் போர்க்காலங்களில் உண்மையாகவே தங்கள் நாட்டுப் படைகளுக்கு பெரும் சேதம் நிகழ்ந்தாலும் அதைப் பற்றி எதுவும் கூறாமல் எதிரி நாட்டுப் படைகளைத் தங்கள் நாட்டுப் படைகள் தாக்கி அழித்த நிகழ்வுகளை மட்டுமே மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டும், காட்சிப்படுத்திக் கொண்டும் இருப்பார்கள். அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல நாட்டின் மற்ற பகுதிகளில் காவல் காக்கும் வீரர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்கும் இப்படிச் செய்வது அவசியம். இந்த உளவியல் செயல்பாடு வெற்றியை எட்டுவதற்கான ஒரு யுக்தி. நேர்மறைத் தன்மையைத் தக்க வைக்கும் தந்திரம். எதிர்மறைத் தன்மையை நோக்கி மனம் நகர வாய்பே தராமலிருக்கும் போது அங்கு வெற்றிக்கான முன் தயாரிப்புகள் தானாகவே நிகழ ஆரம்பித்து விடும்

கூறியது கூறல்என்று எளிமையாகச் சொல்லப்படும் இந்த யுக்திக்கு மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் திறன் உண்டுஒரு விசயத்தை மீண்டும், மீண்டும் சொல்வதன் மூலமும், காட்சிகளாக மனதில் பதிய வைப்பதன் மூலமும் எதிர்மறைத் தன்மையை நோக்கி இயங்க எத்தனிக்கும் மனதை நேர்மறைத் தன்மையிலேயே அதாவது நமக்குக் கட்டுப்பட்டு இயங்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட முடியும். இந்த யுக்தி தான் ஹிட்லரை ஜெர்மனியின் தலைவனாக்கியது. சர்ச்சிலை இரண்டாம் உலக யுத்தத்தின் கதாநாயகனாக்கியது

இத்தனை மெனக்கெடல்களோடு வெளிமனதை வென்று கனவை உள்மனதில் பதிந்து விட்டால் மட்டும் போதுமா? அதை நனவாக்க வேண்டும். அது தான் மிக முக்கியம். அதற்கு இலக்கு நோக்கி இயங்க வேண்டும். காட்சி வடிவமாக உள்மனதிற்குள் பதிவு செய்ததைச் செயல் வடிவமாக்க வேண்டும். செயலாக்கம் பெறாத கனவுகள் செத்த பாம்பிற்குச் சமம். இதுதான் இலக்கு என முடிவு செய்து திட்டங்கள் தீட்டி அதை மனதின் வழியாக தினமும் காட்சிகளாகக் கண்டு வருவதை மற்றவர்களுக்கும் பார்க்கத் தரும் போது மட்டுமே உங்களின் வெற்றி அங்கீகாரமாக மாறும். அங்கீகாரத்திற்குத் தராமல் நீங்கள் மட்டும் மனக் கண்களால் பார்த்துக் கொண்டும், மற்றவர்களிடம் வாய் வார்த்தைகளால் பேசிக் கொண்டும் இருந்தால் ஒருநாளும் உங்களின் கனவை நனவாக்கிப் பார்க்க முடியாது. ”எதிர்காலத்தில் நீங்கள் செய்யப் போவதை இன்று சொல்லக்கேட்டு யாரும் மதிக்கப் போவதில்லைஎன்கிறார் ஹென்றி போர்டு.

இரண்டுங்கெட்டான் மனநிலையோடு நீங்கள் இருக்க, இருக்கச் செயல் சார்ந்த குழப்பங்களும், அச்சமும் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அச்ச உணர்வானது பிரச்சனைகளை எதிர் கொள்ளும் போது அதற்கான மாற்றுவழிகளைத் தேடுவதற்குப் பதிலாக அதிலிருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலையை உருவாக்கி விடும். பல முயற்சிகள் பாதியிலேயே கைவிடப்படுவதற்கு இத்தகைய மனநிலை தான் காரணம் என்பதாலயே, ”முடிவெடுத்து விட்டால் செயல்படத் துவங்கி விடு. பின் விளைவுகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால் பலமிழந்து கோழையாகி விடுவாய்என்கிறார் நேரு. அச்ச உணர்வோடு நாம் செயல்படத் தயங்கி நிற்கும் தருணங்களில் வெற்றிக்கான முகவரிகள் இடம் மாறி விடுகின்றனஉங்களின் வெற்றி முகவரி இன்னொருவருக்குச் செல்லாமல் இருக்க வேண்டுமானால் உங்களின் கனவை இன்றே நனவாக்கும் முயற்சியைத் தொடங்குங்கள்

நன்றி : அச்சாரம் மாத இதழ்



2 comments: