Thursday, 29 June 2017

தன் அனுபவமாக்குங்கள்இன்றே -  இப்பொழுதே - இக்கணமே என்பது வெற்றியாளர்களின் வேதவாக்கு, இதன் உட்பொருள் உங்களின் செயலைத் தாமதிக்காமல் ஆரம்பியுங்கள் என்பதாகும். இதைப் படித்ததும் நானும் உடனே ஆரம்பிக்க வேண்டும் எனக் கிளம்பினீர்களேயானால் சுவற்றில் அடித்த பந்தாகத் திரும்பி புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்து விடுவீர்கள். நடைமுறையில் உணர்ச்சி வயப்பட்டெல்லாம் எதையும் செய்து சினிமாக் கதாநாயகன் போல் ஒரே நாளில் வெற்றியைச் சுவிகரித்து விடமுடியாது. அதற்கு நிறைய முன் தயாரிப்புகள் தேவையாக இருக்கிறது. 

புதிதாக ஒரு தொழில் தொடங்கி நடத்த வேண்டும்  என்பது  உங்களின் இலக்கு என வைத்துக் கொள்வோம். அதைச் செயலாக்குவதற்கு முன் அந்தத் தொழில் பற்றிய அடிப்படை அறிவு (BASIC KNOWLEDGE)  உங்களுக்கு இருக்க வேண்டும்.

ஒரு இளைஞன் இரயில் தடங்களை மாற்றி விடும் வேலைக்குச் சேர்ந்திருந்தான். முதல் நாள் பயிற்சி ஆரம்பமானது. இரண்டு இரயில்கள் வந்து கொண்டிருந்தன. அதன் தடங்களை மாற்றி விட வேண்டியவனோ தலை தெறிக்க ஒரு பெயரை உரக்கச் சொல்லிய படியே ஓடினான். காரணம் புரியாமல் நின்ற அதிகாரிகள் அவனைப் பிடித்து வந்து விசாரித்தனர். அதற்கு அவன் இதுவரை என் அண்ணனும் இரண்டு இரயில்கள் நேருக்கு நேர் மோதிப் பார்த்ததில்லை சார். அதான் அவனையும் அழைத்து வர ஓடினேன் என்றானாம். அடிப்படை அறிவு இல்லாவிட்டால் என்னவாகும் என்பதற்கு இந்தக் கதையை நிர்வாக மேலாண்மை வகுப்புகளில் அடிக்கடிச் சொல்வார்கள். அடிப்படை அறிவு என்பது அனைத்திற்கும் முக்கியம். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முன் அனுபவம் என்ற அதற்கு அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

அடிப்படை அறிவின் மூலமாகப் பெற்ற பயிற்சியை அனுபவமாக்க வேண்டும். அதற்கு நீங்கள் சிலகாலம் உங்கள் தொழில் சார்ந்த வேறு நிறுவனங்களில் பணி செய்து அனுபவங்களைத் திரட்ட வேண்டும். ஊழியத்திற்கு ஊதியம் என்ற நிலையில் கிடைக்கும் இந்த அனுபவம் பின்னாளில் நீங்கள் உங்களின் இலக்காக இருக்கக்கூடிய தொழிலைச் சுயமாகத் தொடங்கும் போது ஏற்படும் இடர்களைச் சமாளிக்க உதவும். 

அனுபவங்களுக்காக இப்படிக் காத்திருக்கும் காலத்தில் தான் பலரும் தங்களின் இலக்குகளை தவற விட்டு விடுகின்றனர். செய்து கொண்டிருக்கின்ற வேலையில் கிடைக்கும் ஊதியம், சலுகைகள், பாதுகாப்பு உணர்வு ஆகியவைகளால் இலக்குகளை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அனுபவங்களைப் பெறுவதற்காக மட்டுமே இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள். இலக்கில் இருக்க வேண்டிய கவனம் அதிலிருந்து விலக ஆரம்பித்து விடுகிறது. ஆனால் வெற்றியாளர்கள் இந்தத் தவறைச் செய்வதில்லை, துறைமுகத்தை நோக்கி மட்டுமே நகரும் கப்பல்களைப் போல தங்களின் இலக்கு நோக்கியே நகர்ந்து கொண்டிருப்பார்கள்,

உங்களின் இலக்கைச் சென்றடைவதற்கு உதவக்கூடிய அடிப்படையான பயிற்சிகளைப் பெற எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். ஆனால் அதற்கு ஈடான அளவில் அனுபவங்களைப் பெற காத்திருக்க வேண்டியதில்லை என்பது வெற்றியாளர்களின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் அனுபவப் பாடம்! இதில் உண்மை இல்லாமல் இல்லை. காரணம் அனுபவம் என்பது தொடர் செயல்பாடுகளால் சேகரிக்கபட வேண்டிய ஒரு நிகழ்வாகும், அதை நீங்கள் முன் அனுபவமாக மட்டும் பெற்றுக் கொண்டே இருந்தால் சுய அனுபவங்களை ஒருநாளும் பெற முடியாது. முன் அனுபவம் (PRIOR EXPERIENCE) என்ற நிலையில் இருந்து எப்பொழுது சுய அனுபவம் (SELF EXPERIENCE) நோக்கி நீங்கள் நகர ஆரம்பிக்கிறீர்களோ அப்பொழுது உங்களின் வெற்றிக்கான பயணமும் ஆரம்பமாகி விடுகிறது.

அனுபவம் போதவில்லை எனச் சொல்லிக் கொண்டு காத்திருப்பதற்குப் பதிலாக கிடைத்தவரைக்குமான அனுபவங்களை வைத்துக் கொண்டு செயல்களை ஆரம்பியுங்கள். பல நல்ல வாய்ப்புகள் இப்படியான காத்திருப்பு சமயங்களில் தான் கடந்து போய் விடுகின்றன. ”காத்திருப்பவர்களுக்கு துரிதமாகச் செயல்படுபவர்கள் விட்டுச் சென்ற மிச்சங்கள் மட்டுமே கிடைக்கும்” என்கிறார் ஆப்ரகாம் லிங்கன்.

அனுபவ அறிவை நூற்றுக்கு நூறு என்ற முழுமையான அளவில்; பெற்ற பின்பே செயல்பட நினைப்பீர்களேயானால் அது ஒரு நாளும் சாத்தியமாகாது. மாறாக, இருக்கின்ற அனுபவ அறிவைக் கொண்டு வெற்றியை சாத்தியமாக்குவதற்கான முயற்சிகளைத் தொடங்குங்கள். முடிவில் உறுதியாக இருப்பீர்களேயானால் தொடக்கம் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. தானாகவே அது உங்களை நகர்த்த ஆரம்பித்து விடும். காத்திருப்பதை விட ஓரடி முன்னே நகர்வது உத்தமமில்லையா? 

இத்தனைக்குப் பிறகும் ஒரு செயலைச் செய்ய முடியாமல் போகிறதென்றால் அதற்குக் கடந்த காலங்களில் சந்தித்தவர்களின், உறவினர்களின் வாழ்க்கையில் இப்படியான தருணங்களில் நிகழ்ந்தவைகளைக் கேட்டும், அறிந்தும் அதுபோல தனக்கும் ஆகிவிடுமோ? விரும்பியதைச் செய்ய முயன்று இருக்கின்ற வேலையவும் பறி கொடுத்து விடுவோமா? நினைத்த படி நடக்காமல் தோல்வி அடைந்து விட்டால் மற்றவர்கள் எதுவும் செல்வார்களோ? என்ற அடுக்கடுக்கான கேள்விகளின் வழி எழும் அச்ச உணர்வே காரணமாக இருக்கிறது. செயல் தடைகளை உருவாக்குகின்ற இப்படியான  கேள்விகள் வெற்றியாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கவே செய்யும். ஆனால் அவர்கள் அதைத்  தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டனர். இலக்கில் இருந்து விலகி நிற்பதற்கான காரணிகளாகப் பார்க்காமல் அவைகளை எதிர் கொள்ளத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டனர். 

நீங்கள் எதன் பொருட்டு அச்சம் கொள்கிறீர்களோ அதற்குள் தான் அதற்கான தீர்வுகளும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையான திறன், ஆரம்ப ஆயத்தப் பணிக்கான அனுபவம் ஆகிய இரண்டையும் பெற்ற பிறகு காரியத்தை ஆரம்பியுங்கள். உங்களிடமிருக்கும் முன் அனுபவத்தைச் சுய அனுபவமாக மாற்றப் போகும் அந்த ஆரம்பம் உங்கள் வெற்றிக்கான ஆரம்பமாக இருக்கும். 

நன்றி : அச்சாரம் மாத இதழ்


Saturday, 24 June 2017

மனநிலையை மாற்றுங்கள்
எல்லோரும், எப்பொழுதும் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம் செயல்களை அங்கிகாரம் செய்ய வேண்டும் என நினைப்பது மனித இயல்பு. உண்மையில் அப்படி எதுவும் நிகழ்வதில்லை. உறவுகளுக்கிடையேயான பெரும்பாலான  விரிசல்கள் இப்படியான நிராகரிப்புகளாலயே உருவாகின்றன. சாதாரண விசயங்களுக்கே இப்படியான நிலை என்கின்ற போது வெற்றி சார்ந்த முயற்சிகளுக்கு கேட்கவே வேண்டாம். ஆனால் இப்படியான மறுப்புகளைக் கடந்து வெற்றியை வசப்படுத்துவதில் தான் உங்களுடைய அடையாளம், தனித்தன்மை அடங்கி இருக்கிறது.

ஒருவர் தன்னுடைய அனுமானம், அபிமானம் அல்லது அவருக்கு அது சார்ந்து முன்னர் கிடைத்த அனுபவம் மூலமாக மட்டுமே உங்களையும்,  உங்கள் செயல்களைப் புறக்கணிக்கிறார். அவருக்குள் இருக்கும் சில முன் முடிபுகள் அப்படியான புறக்கணிப்புகள் உருவாகக் காரணமாக அமைகின்றன. இந்த எதார்த்த நிலையை உணராமல் உங்களின் செயல் அங்கீகரிக்கப்படவில்லை என்று சொல்லிக் கொண்டு அதைக் கைவிட்டு விட்டால் ஒருநாளும் உங்களால் வெற்றி பெற முடியாது. மற்றவர்களின் விருப்பத்திற்குத் தன்னை வளையக் கொடுப்பவர்களால் ஒருநாளும் சாதிக்க முடியாது.

கலிலியோ உலகம் உருண்டை எனச் சொன்ன போது அவரை எவரும் அங்கீகரிக்கவில்லை. அந்த நிஜத்தை அதைப் புறக்கணித்தவர்கள் புரிந்து கொள்ள சில வருடங்கள் தேவையாக இருந்தது. அதுபோல உங்களுடைய வெற்றிக்கான ஆரம்பச் செயல்களை, முன்னெடுப்புகளை மறறவர்கள் ஆரம்பத்தில் புறக்கணிக்கலாம், நிராகரித்துப் பேசலாம். அவைகளை எல்லாம் புறக்கணித்து நீங்கள் வெற்றி பெறும் போது அவர்கள் உங்களைத் தானாகவே அங்கீகரிக்க ஆரம்பித்து விடுவார்கள். 

”ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்” என்பதில் இருக்கும் நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் நீட்டி இன்னொரு கதவும் திறக்காவிட்டால் புதிய கதவைத் திறக்க வைக்க என்ன செய்யலாம்? என யோசியுங்கள். இலக்குகளை தீர்மானித்து அதற்கெனத் திட்டங்களை உருவாக்கும் போதே இப்படியான யோசனைகளையும் அதில் இணைத்துக் கொள்ளுங்கள்.

வெற்றியை அடைவதற்கான போராட்டத்தில் எப்பொழுதும் ஒர் தொடர் முயற்சியாளனாக இருக்க வேண்டியது முக்கியம்.  தொடர்ந்து……..தொடர்ந்து…..…தொடர்ந்து என நீங்கள் செய்யும் முயற்சிகளை ஒரு கட்டத்தில் வெற்றி என்ற புள்ளியில் வந்து முடிக்க வேண்டுமானால் ஒரு விற்பனை பிரதிநிதியின் மனநிலைக்கு உங்களை உள்ளாக்கிக் கொள்ள வேண்டும். இன்று இத்தனை நபரிடம் தன்னுடைய நிறுவனத்தின் பொருட்களை விற்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு செல்லும் விற்பனைப் பிரதிநிதி எடுத்த எடுப்பிலேயோ அல்லது ஆரம்பித்த சில மணி நேரங்களிலோ தன்னுடைய முதல் விற்பனையை முடித்து விடுவதில்லை. 

ஒரு வாடிக்கையாளர் தன்னையும், தன் பொருளையும் புறக்கணித்து விடுகிறார் என்பதற்காகச் சுருங்கிப் போவதில்லை. ஒருவர் மறுத்து நிராகரிக்கும் போது அடுத்த ஒருவரைச் சந்திக்கிறார். இப்படியே அவருடைய சந்திப்பு அன்றைய தன் இலக்கை எட்டும் வரைக்கும் நீண்டு கெண்டே போகிறது. ஒரு கட்டத்தில் தனக்கும், தான் விற்பனை செய்யும் பொருளுக்குமான சரியான வாடிக்கையாளரைக் கண்டடைந்து முதல் விற்பனையை முடிக்கிறார். ஒரு விற்பனையை நிகழ்த்திக் காட்டவே இத்தனை போராட்டம் தேவையாக இருக்கும் போது அன்றைய இலக்கை அடைய அவர் எத்தனை புறக்கணிப்புகளை புறந்தள்ளி இருக்க வேண்டும்; நிராகரிப்புகளை நிராகரித்திருக்க வேண்டும். 

அன்று அவரால் ஒரு விற்பனையைக் கூட முடிக்க முடியாமல் போனாலும் அதற்காக அவர் கவலைப்படுவதில்லை. மறுநாளும் அதைத் தொடர்கிறார். இந்தத் தொடர் ஓட்டத்தில் சளைக்காமல் ஓடுகிறவர்கள் சாதிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் முதன்மை விற்பனையாளராக முடிசூட்டப்பட்டு உயர் பதவிகளுக்குச் செல்கிறார்கள். 

என் சொந்த வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவம் சொல்கிறேன் ”சங்கே முழங்கு -  நல்லாசிரியர்களுக்கான டிப்ஸ்” என்ற நூலை எழுதி முடித்ததும் அதை ஒரு பதிப்பாளரிடம் பதிப்பிக்கக் கேட்டிருந்தேன். அதை வாசித்து முடித்திருந்த பதிப்பாளர் ”பொதுவாகவே ஆசிரியர்களுக்கு யோசனைகள் சொல்ல மட்டுமே பிடிக்கும். கேட்கப் பிடிக்காது. அதனால் இதைப் பதிப்பித்தாலும் விற்பனை என்பது எதிர்பார்த்த அளவில் இருக்காது” என்ற குறிப்போடு அதைத் திருப்பி அனுப்பினார். இந்தப் பதிப்பகம் மூலம் இந்த நூல் வந்தால் மிகச் சரியான கவனிப்பைப் பெறும் என நான் நினைத்திருந்த பதிப்பகம் நிராகரித்து விட்டது என்பதற்காகச் சும்மா இருந்து விடவில்லை. இன்னொரு பதிப்பாளருக்கு அனுப்பினேன். அவரும் அதே பொருள் படும்படியான குறிப்போடு திருப்பி அனுப்பினார். ஆனால் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் மற்றும் என் எழுத்தின் மீது இருந்த நம்பிக்கை மட்டும் எனக்குக் குறையவில்லை, 

அதன்பின் கல்வித்துறையில் இருக்கும் சிலரிடம் கையெழுத்துப் பிரதியை வாசிக்கக் கொடுத்துவிட்டு புதிய பதிப்பாளரை தேடும் வேலையையும் செய்து கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் வாசிக்கக் கொடுத்தவர்களிடமிருந்து  நூலில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள், விசயங்கள் குறித்துச் சாதகமான ஊக்குவிப்புகள் வர அதேநேரம் பதிப்பாளரும் கிடைத்தார். மூன்று பதிப்பகங்கள் புறக்கணித்திருந்த நிலையில் அருணா பப்ளிகேஷன் பதிப்பாளரிடம் தொகுப்பை பதிப்பிற்காக கொடுத்த போது முந்தைய பதிப்பாளர்கள் சொல்லி இருந்தவைகளையும் சொன்னேன். அவரோ நாம ஏன் அப்படி நினைக்கனும்? எங்கள் பதிப்பகம் மூலம் கொண்டு வருகிறேன் என்றார். இன்று என்னை அடையாளப்படுத்தும் நூல்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. எனவே நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் புறக்கணிப்புகளைப் புறந்தள்ளுங்கள். நிராகரிப்புகளை நிராகரியுங்கள். அவமானங்களை அலட்சியப்படுத்துங்கள். இலக்கை அடையும் வரை விடாது முயலுங்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். முயன்றால் முடியாததில்லை என்பது பழமொழி மட்டுமல்ல உங்களை வெற்றியாளராக்கும் மொழியும் கூட என்பதை மறந்து விடாதீர்கள்.

நன்றி : அச்சாரம் மாத இதழ்

Wednesday, 21 June 2017

கொஞ்சம் கவனியுங்கள் ஆசான்களே!விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பிய மகள் விடுமுறையில் செய்து வர வேண்டும் என பள்ளியில் சொல்லி அனுப்பி இருந்த "அசைன்மெண்ட்" களை செய்து முடித்து கத்தை கத்தையாக அடுக்கி வைத்திருந்தாள்.


"லீவுக்கு தந்த எல்லா அசைன்மெண்ட்டையும் முடிச்சிட்டேன் டாடி. இந்தி மட்டும் படிக்க முடியல. ஜி திட்டுவாங்க" என வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தாள்

லீவுன்னா படிக்கனுமா? ஜி கேட்டா ஊருக்கு போயிருந்தேன்னு சொல்லு" எனச் சொல்லி அனுப்பி இருந்தேன்.

"பள்ளியில் இருந்து திரும்பியவளிடம் முதல் நாள் வகுப்பு எப்படி? அசைன்மெண்டெல்லாம் .கே.யா? "என்றேன்.

அவளோ மிகுந்த சலிப்புடன்," அடப்போங்க டாடி. எல்லாமே வேஸ்ட்டாயிடுச்சு. மிஸ் எதுவுமே கேட்கவில்லை. அபி (அவள் தம்பி) சொன்ன மாதிரி மிஸ் மறந்துட்டாங்க போல" என்றபடி பள்ளிக்கு உற்சாகமாய் எடுத்துச் சென்ற அசைன்மெண்டுகளை தன் அலமாரியில் வைத்துக கொண்டிருந்தாள்.

ஆசான்களே......ஆசிரியப் பெருந்தகைகளே......விடுமுறைகளை பிள்ளைகள் முழுமையாகக் கொண்டாட விடுங்கள். அல்லது அந்த விடுமுறையில் பிள்ளைகளுக்குத் தந்த திட்டங்களை பெயரளவிற்காவது பார்த்து உற்சாகப் படுத்துங்கள். அதன் வழி அவர்கள் பெறும் சந்தோசம் இன்னும் சிறப்பாய் அவர்களை இயங்க வைக்கும்.

உங்களின் பாராமுகம் அவர்களின் இயல்பூக்கத்திற்கு தடையாக இருக்க வேண்டாமே