Tuesday, 5 December 2017

காலபைரவரின் அனுமதி இருக்கா?நவக்கிரக வழிபாட்டை முடித்த பின் நேராக இராமேஸ்வரம் போய் இறங்கி விடக் கூடாது. இராமேஸ்வரத்திற்குள் நுழையும் முன் காவல் தெய்வமாக பாம்பனில் இருக்கும் பைரவரிடம் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெறா விட்டாலும் நிகழும் என்ன நிகழும்? 

இராவண வதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோசம் நீங்க சிவபூஜை செய்ய இராம நினைத்தார். அதற்காக ஒரு சிவலிங்கத்தை கொண்டு வரச் சொல்லி அனுமனை அனுப்பி வைத்தார். லிங்கத்தை தேடி வானில் பறந்தவர் காசி எல்லைக்குள் நுழைந்தார். சிவபூஜைக்கு வேண்டிய சுயம்பு லிங்கத்தை தேடி வந்தவருக்கு காசி முழுக்க லிங்கங்களாய் இருப்பது தெரிந்தது. இதில் எது சுயம்பு லிங்கம் என அவரால் அடையாளம் காண முடியவில்லை. களவாடியோ, கவர்ந்தோ போக வந்த அனுமனுக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. கருடன் ஒரு லிங்கத்தை மட்டும் தன் பங்குக்கு வட்டமிட்டுக் காட்ட பல்லியோ அந்த லிங்கத்தின் மீது அமர்ந்து வாலாட்டிக் காட்ட சுயம்பு லிங்கத்தை அடையாளம் கண்டு கொண்ட அனுமன் ஆனந்தமடைந்தார். தன் பலம் பொருந்திய கரங்களால் அந்த லிங்கத்தை தூக்க முயன்றார். 

அதுவரையிலும் அமைதியாய் இருந்த காலபைரவர் அனுமன் முன் வந்து நின்றார்.  யாரைக் கேட்டு என் எல்லைக்குள் நுழைந்தாய்? நுழைந்ததோடு இல்லாமல் இந்த லிங்கத்தை யாரைக் கேட்டு எடுக்க முயற்சித்தாய்? இத்தனை லிங்கங்கள் இருக்கும் போது இந்த சுயம்பு லிங்கத்தை உனக்கு அடையாளம் காட்டியது யார்? என அடுக்கடுக்கான வேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தார். அனுமனும் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார். காலபைரவரிடம் எதுவும் பலிக்கவில்லை. என் கேள்விகளுக்கு விடை சொல்லாமல் உன்னால் இங்கிருந்து செல்ல முடியாது என தடை உத்தரவு போட்டார். அனுமனும் விடுவதாய் இல்லை. வாய்ச் சண்டை கைச் சண்டையாகும் சூழலில் தேவர்கள் தலையிட்டு விபரம் சொல்லி அனுமனை சுயம்பு லிங்கத்தோடு அனுப்பி வைத்தனர். தேவர்களுக்காக அனுமனை அனுப்ப சம்மதித்த காலபைரவர் சும்மா இருந்து விடவில்லை. என் அனுமதியின்றி நுழைந்தவனுக்கு உதவி செய்தவர்கள் யார்? என விசாரிக்க ஆரம்பித்தார். கருடனும், பல்லியும் என தெரிய வர தன் எல்லைக்குள் இனி கருடன் பறக்கக் கூடாது. பல்லி கத்தக் கூடாது என தடை உத்தரவுகளை பிறப்பித்தார். ஆளானப்பட்ட அனுமனுக்கே இந்த நிலை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? அதனால் தான் இராமேஸ்வரத்திற்குள் நுழையும் முன் அதன் காவல் தெய்வமான காலபைரவரிடம் அனுமதி பெற வேண்டும். இந்த இறை நியதியை மதித்து இராமரும் காலபைரவரை வணங்கி அனுமதியும், ஆசியும் பெற்ற பின்பே இராமேஸ்வரம் சென்றார்.

தேவிபட்டணத்தில் இருந்து இராமநாதபுரம் வழியாக பாம்பனுக்கு வர இப்போது கடல் மேல் அமைந்த இரயில் பாலம், சாலைப் பாலம் இரண்டும் இருக்கிறது. முன்பு இந்த வசதிகள் இல்லை. இப்போது இருக்கும் பாம்பன் கடற்கரை ஒரு ஓடையாக இருந்திருக்கிறது. முன்பு பாம்பன் இராமேஸ்வரத்தோடு இணைந்தே இருந்திருக்கிறது. பாம்பனின் ஒரு கரையில் வந்து இறங்கி ஓடம் மூலமாக மறுகரையில் ஏறி அதன் பின் இராமேஸ்வரம் சென்று வந்துள்ளனர். இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் தினமும் இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதசுவாமியை இவ்வாறே வழி பட்டு வந்தததற்கான குறிப்புகள் வரலாற்று நூல்களில் காணக்கிடைக்கின்றன. அக்காலத்தில் பாம்பனில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சாலை “மங்கம்மாள் சாலை” என்றழைக்கப்பட்டது. இப்போது அது தேசிய நெடுஞ்சாலை என்றழைக்கப்படுகிறது.

பாம்பன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சில அடி தூரத்தில் இருக்கும் இக்கோவிலுக்கு நடந்தே சென்று விட முடியும். ஆரம்பத்தில் இவ்வூர் ”பாம்படை” என்றே அழைக்கப்பட்டது. பின்னர் மருவி “பாம்பன்” என்றானது. இந்த பைரவர் கோவிலை ஒட்டி ஒரு புறம் பைரவ தீர்த்தமும், இன்னொரு புறம் கபி தீர்த்தமும் உள்ளது.

வானரங்கள் இராவண யுத்தத்தின்  போது தங்களுக்கு ஏற்பட்ட காயங்களை கபி தீர்த்தத்தில் நீராடி நீக்கிக் கொண்டதால் ரண விமோசனம் தீர்த்தம் என இத்தீர்த்தம் அழைக்கப்படுகிறது. தவிர, 64,000 வருடங்கள் ஒருவன் தவம் செய்தால் உண்டாகும் பலன் ஒருநாள் கங்கையில் நீராடுவதால் கிடைக்கும். அப்படி ஆயிரம் தடவை நீராடும் போது கிடைக்கும் பலன் அவன் சிம்ம ராசியில் குரு வரும்போது கோமதி நதியில் ஒரு முறை நீராடினால் கிடைக்கும். இத்தகைய கோமதி நதியில் பலமுறை நீராடுவதற்கு சமமான பலனை ஒருமுறை மட்டும் நீராடினாலே தந்து விடக்கூடியது “கபி தீர்த்தம்”. இத்தீர்த்தத்திற்கு அருகிலேயே தங்கிச் செல்ல ஒரு சத்திரமும் உண்டு.

அக்காலத்தில் இப்பைரவரை இலங்கையில் இருந்து வந்து வழிபட்டு சென்றுள்ளனர். அப்படி வழிபட வந்தவர்களால் கொண்டு வரப்பட்ட முருகன் சிலை பைரவர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. முருகனுக்கு நடைபெறும் பல்வேறு விழாக்களால் இம்முருகன் ஆலயம் பிரபலமடைய பைரவர் ஆலயம் முருகன் ஆலயம் என்ற பெயராலயே தற்போது அழைக்கப்படுகிறது.

முருகருக்கும், பைரவருக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. பைரவர் ஆலயம் பழைமை மாறாத வகையில் தனி சந்நிதியில் அமைந்துள்ளது. இராமேஸ்வரத்தின் காவல் தெய்வம் என்பதைக் குறிக்கும் முகமாக காலபைரவர் கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்த இடத்தில் வீற்றிருக்கிறார். பைரவ, கபி தீர்த்தத்தில் நீராடி பைரவரை வணங்கி விடைபெற்ற பின் செல்ல வேண்டிய தலம் ”தனுஷ்கோடி”
 

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்

Monday, 20 November 2017

நன்மைகள் நல்கிடும்(ராம) நவக்கிரகங்கள்!அசுரர்களின் அரசனான ரம்பா என்ற அசுரன் ஒருநாள் நதிக்கரையோரம் வந்து கொண்டிருந்தான். அந்நதியில் ஒரு பெண் எருமைமாடு குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். முற்பிறவியில் அழகிய இராஜகுமாரியாக இருந்து சாபத்தால் எருமையாக மாறியிருந்த அந்த பெண் எருமையின் மேல் மையல் கொண்டு தன்னை ஒரு ஆண் எருமையாக மாற்றிக்கொண்ட ரம்பா அதனுடன் கூடி மகிழ்ந்தான். உருவில் எருமை மாடுகளாக இருந்த அவ்விருவருக்கும் பிறந்தவன் மகிஷாசுரன். மற்றவர்களை துன்புறுத்திப் பார்ப்பதிலேயே சுகம் காணும் அசுரகுலத்தில் பிறந்திருந்த போதும் அவனுக்குள்ளும் நல்ல குணங்கள் இருந்தது. படைப்புக் கடவுளான பிரம்மாவை நோக்கி கடும் தவமிருந்து மனிதனாலும், மிருகத்தினாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான். வரம் பெற்றவுடன் அவனுக்குள் இருந்த பிறவி அசுரகுணம் வெளியே வர ஆரம்பித்தது. அசுரர்களுக்கு தேவர்களைக் கண்டாலே ஆகாது. சமயம் வாய்க்கும் போதெல்லாம் தேவர்களை வச்சு செஞ்சு விடுவதில் அசுரர்களுக்கு அலாதி பிரியம். அந்த குலத்தில் இருந்து வந்தவன் என்பதால் வானுலக தேவர்களை வதைக்க ஆரம்பித்தான். இந்திரலோகத் தலைவன் இந்திரன் மீது படையெடுத்து அவனை ஓடி ஒளியச் செய்தான். இந்திரனையே விரட்டியடித்தவனுக்கு தேவர்கள் எல்லாம் எம்மாத்திரம்? தினமும் அவனுக்கு அஞ்சி, அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்தனர். 

ஆண்களின் கண்களுக்குப் புலப்படாமல் தங்களைத் தொல்லை தந்து கொண்டிருக்கும் மகிஷாசுரனின் கொட்டத்தை அடக்கி அழிக்கக்கூடிய சக்தி பராசக்தியான அகிலாண்டேஸ்வரி தேவிக்கு மட்டுமே உள்ளது என்பதை தேவர்கள் அறிந்தனர். உடனடியாக தேவியின் பாதத்தில் சரணடைந்தனர். சரணாகதிக்கு மிஞ்சியது ஏது?  தன்னைச் சரணடைந்தவர்களின் துயரங்களைப் போக்க  தேவி முடிவு செய்தாள். 

மகிஷாசுரனை நேருக்கு நேர் களத்தில் சந்தித்தாள். இருவருக்கும் கடும் போர் நடந்தது. ஒரு கட்டத்தில் தேவியை எதிர்த்து நிற்க முடியாமல் மகிஷாசுரன் பின்வாங்க ஆரம்பித்தான். பின்வாங்கி சென்றவன் திருமால் தன் பக்தனான காலவரிஷி முனிவரை கொடிய அரக்கனிடமிருந்து காக்க தன் சக்ராயுதத்தை ஏவி அவருக்கு காவலாக அதை நிறுத்திய இடமான சக்கரதீர்த்தத்திற்குள் சென்று பதுங்கிக் கொண்டான். 

கரையில் இருக்கும் தேவியால் தன்னை எதுவும் செய்ய முடியாது என நினைத்த மகிஷாசுரனின் நினைப்பு பொய்யாகிப் போனது. தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற முதுமொழி மகிஷாசுரனின் விசயத்தில் பொய்யாகிப் போனது. தேவியோ, சக்கரதீர்த்தத்தை வற்றச் செய்து அதனுள் பதுங்கி இருந்த மகிஷாசுரனை வெளியோ கொண்டு வந்து கொன்று தேவர்களின் துயரை துடைத்தாள். அதன்பின் சக்கரதீர்த்தத்தை மீண்டும் அங்கு தோன்றச் செய்தாள். சக்கரதீர்த்தம் ஆரம்பத்தில் தேவிபட்டிணத்திலிருந்து திருப்புல்லணை (திருப்புல்லாணி) வரை நீண்டிருந்தது. பிறகு இடையில் மண் மேவி நிலமானதால் திருப்புல்லணையில் இதன் ஒருபகுதியாக எஞ்சி இருக்கும் தீர்த்த பகுதியும் சக்கரதீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.

மகிஷாசுரனை வதம் செய்த தேவி குடிகொண்ட ஊர் (பட்டணம்) என்பதால் “தேவிபட்டணம்” என அழைக்கப்பட்டது.  ஆரம்பத்தில் “தேவிபுரம்” என்றழைக்கப்பட்ட இவ்வூர் புராணங்களில் ”தேவிப்பூர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உப்பூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன் விநாயகர் வழிபாடு, நவக்கிரக பூஜை செய்ய வேண்டும் என்பது வேதசாஸ்திரங்கள் வகுத்தளித்த விதி முறையாகும். விதிமுறைகளை தன் விருப்பத்திற்கேற்ப வளைப்பதும், மீறுவதும் மனித குணம். இராமரோ அமனித உருவில் இருக்கும் அவதார புருஷரல்லவா? மூத்தோர் வகுத்தளித்த வழிமுறைகளை பின்பற்ற நினைத்தார். அதன்படி உப்பூரில் விநாயகர் வழிபாட்டை முடித்தவர் நவக்கிரக வழிபாட்டை இங்கு செய்ய முடிவு செய்தார். 

மனிதர்கள் வாழும் கோளான (கிரகம்) பூமியின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய பிற கோள்கள் உள்ளன. அக்கிரகங்களின் மாற்றங்கள் மனிதனுடைய செயல்பாடுகளிலும், வாழ்வியலிலும் மாற்றங்களை நிகழ்த்துகின்றன. நேரடியான பலன்களை தரக்கூடியவை. “கெரகம் சரியில்லை என்றால் கிரகம் சுற்றி வா” என்பது சொலவடை. கிரகம் என்பது நவக்கிரகத்தைக் குறிக்கும். நவம் என்றால் ஒன்பது. இந்த ஒன்பது கிரகங்களையும் வானியலார் வரிசையாக முறையே சூரியன், சந்திரன், செவாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என அமைத்துள்ளனர். இந்த ஒன்பது கிரகங்களின் ஆசி கிடைக்கப் பெற்ற ஒருவன் எல்லாக் காரியத்திலும் வெற்றி பெறுவான். அந்த வெற்றி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதாலயே முன்னோர்கள் எல்லா ஆலயங்களிலும் விநாயகர் வழிபாட்டோடு நவக்கிரக வழிபாட்டையும் வைத்தனர். 

சீதையை மீட்பதற்கான முயற்சியில் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என நினைத்த இராமர் நவக்கிரகங்களின் மூலம் கிடைக்கக் கூடிய சக்தியை பெறவும், தனக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நீங்கவும் நவக்கிரக வழிபாட்டை செய்ய நினைத்தார். அதற்காக ஒன்பது நவக்கிரகங்களையும் குறிக்கும் வகையில் ஒன்பது கல்தூண்களை கடலுக்குள் பிரதிஷ்டை செய்தார். அந்த இடம் “நவபாஷாணம்” (நவம் – ஒன்பது; பாஷாணம் – கல்) என்றழைக்கப்படுகிறது. தேவிபட்டிணம் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில்  அமைந்துள்ளது.

இராமர் கல்தூண்களை கடலுக்குள் ஸ்தாபித்த போது அவை கடலின் சீற்றத்தாலும், கொந்தளிப்பாலும் அழிந்து விடக்கூடாது என எண்ணினார். கடலரசனுக்கு சீற்றமில்லாது இருக்குமாறு உத்தரவுகள் பறந்தன. இராம கட்டளையே சாசனமாய் ஏற்றவன் அப்பகுதியில் அலைகளை எழுப்பாமல் அமைதியானான். ஆழமற்ற நவபாஷாணத்திற்குள் இருள் சூழும் நேரத்திற்கு முன்பாக சென்று வழிபட்டு வரலாம்.  இருள் சூழும் மாலை நேரத்தில் மற்ற நேரங்களை விட கடலின் நீர் மட்டம் உயர்ந்து விடும் என்பதால் காலையில் சென்று வழிபடுதல் நல்லது.

இங்குள்ள நவக்கிரகத்திற்கென கட்டிடங்கள் ஏதுமில்லை. பூஜைகளைக் கூட அவரவரே செய்து கொள்ளலாம். தொட்டு வழிபடலாம். கரையிலிருந்து நவபாஷாணத்திற்கு சென்று வர பாலமும், நவக்கிரகத்தை வலம் வர ஏதுவாக அதைச் சுற்றிலும் இரும்பு கிராதி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் நீராடி நவக்கிரகத்தை வணங்கி வழிபட்ட பின் செல்ல வேண்டிய தலம் “பாம்பன்”

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்


                                                                                                                                                     
 

Tuesday, 31 October 2017

வெற்றிக்கு அச்சாரமிட்ட வெயிலுகந்த விநாயகர்பல வீடுகளில் மாமியாருக்கும், மருமகளுக்கும் ஒத்துப் போகாது. இருவருக்குமான உரசலில் அம்மா பக்கமா? மனைவி பக்கமா? என முடிவெடுக்கத் தெரியாமல் ஆண் விழி பிதுங்கிப் போவான். சில வீடுகளில் இந்த நிலை அப்படியே தழைகீழாக இருக்கும். மாமனாருக்கும், மருமகனுக்கும் ஒத்துப் போகாது. அப்பாவா? கணவனா? என முடிவெடுக்க முடியாமல் பெண் பரிதவித்துப் போவாள். மனித குலத்துக்கு மட்டுமே வாய்த்த இப்படியான சிக்கல்களில் சில சமயம் இறைவனும் சிக்கிக் கொள்வதுண்டு. 

சிவபெருமானுக்கும், அவருடைய மாமனார் தட்சனுக்கும் எப்பொழுதும் ஒத்துப் போகாது. ஒரு கட்டத்தில் மருமகனை மட்டம் தட்ட முடிவு செய்த தட்சன் மாபெரும் யாகத்திற்கு ஏற்பாடு செய்தான். தேவர்கள், முனிவர்கள், அரசர்கள், சித்தர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்தவன் மருமகனை மட்டும் அழைக்கவில்லை. சிவபெருமான் தட்சனுக்கு மருமகனாய் இருக்கலாம். ஆனால் தங்களுக்குத் தலைவனில்லையா? ஈசனுக்கே அழைப்பில்லாத போது நாம் மட்டும் சென்றால் நன்றாக இருக்காதே எனத் தயங்கி நின்றனர். ஆனால், தட்சனின் செல்வாக்கும், முன் கோபமும் அவர்களின் தயக்கத்தை உடைத்தெறிந்தது. தட்சனின் அழைப்பை ஏற்று யாகத்திற்கு செல்ல முடிவு செய்தனர். பிரம்மா, சூரியன் உள்ளிட்ட பெருந்தலைகள் சூழ்ந்திருக்க தட்சன் யாகத்தை நடத்தினான்.
தன் கணவனைப் புறக்கணித்து தந்தை நடத்தும் யாகசாலைக்குள் நுழைந்த பார்வதி தேவியை மகள் என்றும் பாராமல் தட்சன் அலட்சியப் படுத்தினான். அவமானத்தோடு பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குத் திரும்பிய மனைவிக்கு ஆதராவாக சிவபெருமான் வந்தார். கோபத்தின் உச்சத்தில் யாகத்தை கலைத்து எறிந்தவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கோபத்தால் துளைத்தெடுத்தார். சூரியன் தனக்குக் கிடைத்த பாவத்திற்கு பரிகாரம் வேண்டி வன்னி மந்தார மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்த இடத்தில் தவமிருந்தான். அந்த இடம் உப்பூர்!

வடமொழியில் இவ்வூர் “லவணபுரம்” என்றழைக்கப்படுகிறது. ”லவணம்” என்ற வடமொழி சொல்லுக்கு ”உப்பு” என்று பொருள். அதனால் இத்தலம் ”உப்பூர்” என்று அழைக்கப்படுவதாகவும், உப்புத்தொழில் அதிகமாக நடைபெறும் ஊர் என்பதால் ”உப்பூர்” என பெயர் பெற்றதாகவும் ஊருக்கான பெயர் காரணங்கள் கூறப்படுகின்றன. சூரியன் தவமிருந்து பாவ விமோசனம் பெற்ற தலம் என்பதால் ”சூரியபுரி”, ”தவசித்தி புரி”, ”பாவ விமோசனபுரி” என்றும், வன்னி, மந்தார மரங்கள் நிறைந்த காடாக ஆரம்பத்தில் இருந்ததால் ”வன்னி மந்தார வனம்” என்றும் இத்தலத்திற்கு வேறு பெயர்களும் உண்டு.வாகன வசதிகள் இல்லாத காலத்தில் வழிப்போக்கர்கள், பக்தர்கள் தங்கிச் செல்ல ஆங்காங்கே சத்திரங்கள் கட்டப்பட்டிருக்கும். அப்படி இவ்வூரில் அமைந்திருந்த சத்திரத்தில் வந்து தங்கிச் செல்பவர்களின் மீது விழும் வெயிலை தானும் பிரியப்பட்டு வாங்கிக்கொள்ள விநாயகர் விரும்பினார். அதற்காகவே பக்தர்கள் தங்கிச் செல்லும் சத்திரம் அருகிலேயே மரத்தடியில் எழுந்தருளினார். அதனால் “வெயில் உகந்த விநாயகர்” எனப் பெயர் பெற்றார். 

சூரியனின் தவத்தால் மகிழ்ந்த விநாயகர் அவன் பாவத்தை போக்கி அவனுக்கு அருள் புரிந்தார். அப்போது சூரியன் தன் முழுகதிர்களும் விழுந்து வணங்குமாறு தனக்கு அருள் புரிய வேண்டும் என கேட்டுக்கொள்ள விநாயகரும் அதற்கு சம்மதித்து ஆசி வழங்கினார். அவன் விருப்பபடியே தட்சிணாயன காலத்தில் தெற்கு பக்கத்தில் இருந்தும், உத்தராயண காலத்தில் வடக்கு பக்கத்தில் இருந்தும் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகரின் மேல் சூரிய ஒளிபடுகிறது. அதனால் ”வெயில் உகந்த விநாயகர்” என்றழைக்கப்படுகிறார் என்று தலபுராணம் கூறுகிறது.

இராமநாதபுரத்திலிருந்து தொண்டி செல்லும் வழியில் அமைந்துள்ள இத்தலம் இராமாயண காலத்திற்கு முந்தைய பழமை வாய்ந்தது. 1905 ம் ஆண்டில் இராமநாதபுரத்தை ஆண்ட சேதுமன்னர் பாஸ்கர சேதுபதியால் கட்டப்பட்டது என்றும், பாஸ்கர சேதுபதியின் அனுமதியுடன் தேவகோட்டை ஜமீன்தார் இராமசாமி செட்டியாரால் 1885 ம் ஆண்டு முதல் 1990 ம் ஆண்டு வரை ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது என்றும் வெவ்வேறு குறிப்புகள் உள்ளன.  இந்த விநாயகர் ஆலயத்தில் சூரிய ஒளி சன்னிதியில் விழுமாறு உட்பிரகாரத்திற்கும், கருவறைக்கும் இடையே மேல்தளம் இல்லாதவாறு திறந்தவெளியாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் எல்லா கோவில்களையும் போல் கர்ப்பகிரகத்தின் மீது சூரியஒளி படாதவாறு கட்டப்பட்டதால் அது இடிந்து தரைமட்டமானதாகவும் மரத்தடியில் வீற்றிருந்த விநாயகர் ஒரு அர்ச்சகர் வடிவில் மன்னரின் கனவில் தோன்றி அர்த்த மண்டபத்தின் மேல்கூரையை மூடாமல் தனக்கு ஆலயம் கட்டுமாறு கூறியதால் அவ்வாறு கட்டப்பட்டதாகவும் செவிவழிக்கதைகள் கூறப்படுகிறன.

அதன் பின்னர் விநாயகர் அருளியபடி சூரியக்கதிர்கள் படுமாறு அமைக்கப்பட்டதாகவும், வேதவியாசகர் பதிணென்கீழ்கணக்கு நூல்களை வகைப்படுத்த முடியாமல் திணறி நின்ற போது அதை சிறப்பாக செய்து முடிக்க உதவியவரும், திரிபுராவதிகளை சிவபெருமான் அழிக்க செல்லும் முன் சிவபெருமானே வணங்கி சென்ற வல்லமை மிகுந்தவருமான விநாயகரை இராமரும் வணங்கினார். இராவண யுத்தத்திற்காக இலங்கைக்கு செல்ல தான் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என வேண்டி நின்றார். முழு முதற்கடவுளையும், தன் சூரிய குல தெய்வத்தையும் ஒரு சேர வணங்கிய திருப்தியோடு சேது பந்தனம் நோக்கிக் கிளம்பினார். இராமரின் பயணம் தொடங்கிய இத்தலத்தில் இருந்தே இராமேஸ்வர யாத்திரையும் தொடங்குகிறது.

சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், லெட்சுமி தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தங்களுடன் நான்கடி உயர கம்பீர உருவத்தில் நாலுகால் மண்டப கருவறையில் வீற்றிருக்கும்  விநாயகரை அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வணங்கி வழிபட்ட பின் செல்ல வேண்டிய தலம் “தேவிபட்டிணம்”.

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்