Tuesday 29 November 2016

நழுவும் நங்கூரம்!

காலை வரை தன்னிடமிருந்த சந்தோசம் சர்ப்பமாய் நழுவுவதைப் போலிருந்தது சுமதிக்கு. இப்பவும் கூட அவள் மனம் அதை ஏற்கத் துணியவில்லை.  ஆனால் எல்லா நேரங்களிலும் நிஜம் நினைப்பது போல இருப்பதில்லையே! அப்படித்தான் அவள் விசயத்திலும் இருந்தது. மனம் முழுக்க வெறுமை சூழ்ந்தவளாய் வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்தாள். சோபாவின் ஓரத்தில் இருந்த சிறு அலங்கார மேசையின் மீது சட்டமிடப்பட்ட பலகையில் இளங்கோவும் அவளும் காதலர்களாக இருந்த போது எடுத்துக் கொண்ட புகைப்படமும், திருமணத்தன்று எடுத்துக் கொண்ட புகைப்படமும் ஒரு சேர இருந்தது. அந்த மேசையைச் சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதைக் கையில் எடுத்துப் பார்த்து துடைத்து வைத்தது தான் என்றாலும் இன்று அதை எடுத்த போது அவளை அறியாமலயே கைகள் மெலிதாக நடுங்கத் தொடங்கியது, பெருமழைக்கு முன் விழும் சிறு துளி போல அவளின் கண்களிலிருந்து விழுந்த சிறு துளிகள் கையை நனைத்தது.

தன் முந்தானைச் சேலையால் புகைப்படத்தில் இருந்த இளங்கோவின் முகத்தைத்  துடைத்தாள். ஒரு பட்டுச் சேலையின் முந்தானை தான் அவனுடனான சந்திப்பிற்குக் காரணமாக இருந்தது. அவர்களின் சந்திப்பு நடந்த முதல் தினம் தீபாவளி. தன் அம்மாவின் வற்புறுத்தலால் வழக்கமான ஆடையை அணியாமல் பட்டுச் சேலையைக் கட்டிக் கொண்டு தோழியின் வீட்டிற்குச் செல்லப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாள். யாரோ தன் சேலை நுனியைப் பிடித்து இழுப்பது போல் இருக்க சட்டெனத் திரும்பியவளின் காலருகில் சிரித்த படி கையில் சாக்லெட்டுடன் ஒரு குழந்தை நின்று கொண்டிருந்தது. கன்னத்தில் அதிர்ஷ்டக்குழியும், மலர்ந்த முகமுமாய் நின்ற  அந்தக் குழந்தையைக் கண்ட மாத்திரத்தில்  தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்,

சிபிஎன்ற குரல் அவளின் கவனத்தைத் திருப்பியது. அவளிடமிருந்து தாவிய குழந்தையை இரு கைகளையும் ஏந்தித் தன் பக்கமாக வாங்கிக் கொண்டவன்   இளங்கோ எனச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டான், அவளும் சுமதி என கைநீட்டினாள். தீபாவளி வாழ்த்துகளைச் சொன்னவன் நிறுத்தத்தில் வந்து நின்ற அங் மோ கியோ செல்லும் பேருந்தில் ஏறினான். தான்  செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தம் வழியாகத் தான்  அந்தப் பேருந்தும் செல்வதால் அவளும் அதே பேருந்தில் ஏறினாள்.

விடுமுறை தினம் என்பதால் நிறைய கூட்டம். கிடைத்த இருக்கையில் அமர்ந்தவள் அவன் கையில் இருந்த குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டு அரைகுறையாக பிரிக்கப்பட்டிருந்த சாக்லெட் உறையை நன்றாக நீக்கி  தின்பதற்கு வசதியாய் கையில் கொடுத்தாள். இதைக் கவனித்துக் கொண்டு வந்த இளங்கோ இப்ப மட்டும் ஒரு ஐந்து சாக்லெட்டாது தின்றிருப்பான் என்றான்.

இளங்கோ சிரித்த போது அவனுக்கும் கன்னத்தில் அதிர்ஷ்டக்குழி விழுந்தது. அவனின் வசீகரம் அவளுக்குப் பிடித்திருந்தாலும் இந்தக் குழந்தையின் அப்பாவாக இருப்பானோ? என்ற நினைப்பும் வந்து நின்றது. குழந்தையின் அம்மா வரலையா? எனக் கேட்க மனம் விரும்பினாலும் சிறுநிமிட சந்திப்பில் அப்படிக் கேட்பது சரியல்ல என நினைத்தாள்.

என்ன சிபி ஆண்ட்டி டிரெஸ்சை எல்லாம் அழுக்குப் பண்ணிக்கிட்டு எனச் சொல்லிக் கொண்டே அவள் தோளில் இருந்த குழந்தையின் கையை உயர்த்திப் பிடித்தவன், “சாரி…….சாரி……..சாக்லெட்டை சேலையெல்லாம் இழிவிட்டான். துடைச்சுக்கோங்கஎன தன் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்துக் கொடுத்தான், முதுகுக்குப் பின் கையைக் கொண்டு சென்று துடைக்க அவள் சிரமப்பட கைக்குட்டையை வாங்கி அவனே துடைத்து விட்டதோடு அவளிடமே திருப்பித் தர அவளும் வாங்கிக் கொண்டாள். சாக்லெட் தின்ற வடுவும், வாயுமாய் இருந்த குழந்தையின் கையையும், வாயையும் தன்னிடமிருந்த டிசு பேப்பரால் துடைத்துக் கொண்டே, ”குழந்தை தானே செய்தான். பரவாயில்லைஎன்றாள்,

சில நிறுத்தங்கள் தாண்டி வந்த நிறுத்தத்தில் இளங்கோ குழந்தையுடன் இறங்கினான். அவன் இறங்கிய பின்னரே தன் கையில் அவனுடைய கைக்குட்டை இருப்பதைக் கவனித்தாள். தனக்குள்ளேயே சிரித்த படி கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். சில தினங்களுக்குப் பின் தேக்கா மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தவளின் கவனத்தைச் சுமதி என்ற குரல் திசை திருப்பியது. குரல் வந்த திசையில் அவளுக்கு எதிர்புறத்திலிருந்து கேரி பேக்கோடு இளங்கோ வந்து கொண்டிருந்தான். இரண்டாவது சந்திப்பு எதிர்பாராத சந்திப்பாய் அமைய பரஸ்பர வணக்கங்களுக்குப் பின் சிபி வரலையா? எப்படி இருக்கார்? என்றாள்,

இல்லைங்க. நான் மட்டும் தான் வந்தேன். வாங்களேன் ஒரு காபி குடிக்கலாம் எனத் தொலைக்காட்சி விளம்பர பாணியில் அவன் அழைக்க மறுப்புச் சொல்லாமல் சென்றாள். அவளின் ஆடையை சிபி அழுக்காக்கியதற்காக இன்றும் மன்னிப்புக் கேட்டான். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவனைப் பற்றி அறிந்து கொள்ள நினைத்தாள். அவனோ வேறு பல விசயங்கள் பேசுவதில் ஆர்வம் காட்டினான். ஆனாலும் தன் முயற்சியிலிருந்து பின் வாங்காதவளாய் சிபிக்கு எத்தனை வயசு? என்றாள். இரண்டரை வயசு. எங்கள் குடும்பத்துச் செல்லப்பிள்ளை. தவமிருந்து வரமாய் வந்தவன் என்றான்.

தவமிருந்தா? என்றாள் நக்கலாய்.

ஏங்க அதுக்காக காட்டுக்குப் போய் தவமா இருக்க முடியும்? ஒரு பேச்சுக்கு அப்படிச் சொல்றது தான்! என் அக்காவுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லை. அக்காவும், மாமாவும் மருத்துவத்தை நாட அப்பாவும், அம்மாவும் கோவில், கோவிலாய் நடக்கப் பிறந்தவன். அதனால் எப்பொழுதும் வீட்டில் செல்லப்பிள்ளை.

உங்களுக்குத் திருமணம்………என அவள் முடிக்கும் முன்பே இல்லை என்று இவன் சொன்ன பதிலில் அவளுடைய முகம் கிழக்கு நோக்கிய சூரியகாந்தியானது.

அதன் பின்னர் நாள் தவறாது அலைபேசியில் உரையாடிக் கொண்ட போதும் வார இறுதி நாட்களில் தேக்காவிலோ அல்லது ஏதாவது மால்களிலோ சந்தித்துக் கொண்டனர். பெரும்பாலான விசயங்களில் இருவருக்குமான ரசனைகள் ஒரே மாதிரியாக இருந்ததால் தொடர் சந்திப்புகளும், உரையாடல்களும் அவர்களுக்குச் சுவராசியமாகவே இருந்தது. தவிர, இளங்கோவின் குணம், பழக்க வழக்கங்கள் பிடித்துப் போக ஓராண்டாகப் பழகிய நட்பைக் காதலாக மாற்ற முடிவு செய்தாள், “காதல்எனப் பெயரிட்டு தன் விருப்பத்தை அவனிடம் அவள் கொடுத்த போது அவனும் மறுக்கவில்லை. இரு வீட்டார் சம்மதத்துடன் நிகழ்ந்த திருமணத்திற்குப் பிந்திய இல்லறத்தில் சந்தோசத்திற்கும் குறைவிருக்கவில்லை.

திருமணத்திற்கு முன்பு பணி செய்த நிறுவனத்தில் ஒரு பிரிவிற்கு மட்டுமே மேலாளராக இருந்த இளங்கோவுக்குத் திருமணத்திற்குப் பின் பொதுமேலாளராகப் பதவி உயர்வு கிடைத்தது. அவன் உள்பட எல்லோரும் நீ வந்த நேரம். என அவளைப் புகழ ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் ஷாப்பிங்கிற்காக செலவழித்திருந்த நேரம் தான் அவர்கள் இருவரும் வெளியில் ஒன்றாகச் சேர்ந்து செலவிட்ட அதிகபட்ச நேரமாக இருந்தது. அதன் பின் ஏறக்குறைய ஒன்றரை வருடமாக வேலைப் பளு எனச் சொல்லிக் கொண்டு வீட்டில் செலவிடும் நேரத்தை நான்கு நம்பர் சீட்டின் அதிர்ஷ்டமாய் சுருக்கிக் கொண்டிருந்தான்.

வாரக்கடைசியில் எங்காவது வெளியில் போகலாமா? என்று எப்பொழுதாவது அவள் கேட்கும் சமயங்களில்பார்க்கலாம்என்ற ஒற்றை பதிலை மட்டும் சொல்வான். ”முடியாதுஎன்பதை மென்மையாய் அவன் சொல்லும் விதம் தான் அந்த பதில் என்பது பழகிப் போயிருந்ததால் அவளும் அவனிடம் பெரிதாகக்  குறைபட்டுக் கொள்வதில்லை.

கடந்த இரண்டு மாதங்களாய் எப்படி இருந்த இளங்கோ இப்படி ஆயிட்டானே எனச் சொல்லும் படியாக அவனின் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை உணர்ந்தாள். அலுவலகத்தில் இருந்து விரைவிலேயே வீட்டிற்கு வருவதும், அவளோடு அதிக நேரங்களைச் செலவழிப்பதுமாக இருந்தான். சில நாட்களில் அலுவலகமே செல்லாமல் வீட்டில் இருந்த படியே கோப்புகளைப் பார்த்து வந்தான். பல நேரங்களில் தன் அறைக்குள்ளேயே அமர்ந்திருப்பான். தனிமையில் இசை கேட்கிறேன் என அவன் சொன்னாலும் இசை கேட்பதாய் சொல்லிக் கொண்டு தனிமையில்  இருக்கிறானோ? என்ற சந்தேகம் வரும் படியாகவே அவனுடைய இறுப்பு அவளுக்குத் தோன்றும். கேட்டால் ஒன்றுமில்லை என மழுப்பி விட்டு அவள் அருகில் வந்து அமர்ந்து கொள்வான். வழக்கத்திற்கு மாறான அவனின் நடவடிக்கைகள் உள்மனதில் புலப்படாத கலக்கத்தை அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது.

ஒரு நாள் வருமான வரிப் பிரச்சனைக்காக தன் பெயரில் உள்ள பங்குகளை எல்லாம் உன் பெயருக்கு மாற்ற வேண்டும் எனச் சொல்லி பெயர் மாற்றம் செய்வதற்கான படிவத்தில் அவளின் கையெழுத்தை வாங்கியவன் அதற்கடுத்த நாள் வங்கிக்கு அழைத்துச் சென்று அனைத்துச் சேமிப்புகளிலும் அவளை வாரிசுக்குரியவளாய் உறுதி செய்தான். வேலைக்குச் சேர்ந்த காலத்தில் இருந்தே சுய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்பது அவனுடைய கனவு. பொது மேலாளர்  பதவிக்குத் தேர்வான பின்பும் கூட சுயதொழில் விருப்பத்தை விடாமலே இருந்தான். அதற்காக இந்தியாவில் தன் அப்பா வழி வந்த குடும்பச் சொத்துக்களை எல்லாம் விற்றும், தன் தந்தைக்கு அங்கு கிடைத்த  பணி நிறைவுத்தொகையை டாலராக மாற்றியும் இங்குள்ள வங்கியில் முதலீடு செய்து வைத்திருந்தான்.

முன்பெல்லாம் அதுபற்றி அவளிடம் அடிக்கடிப் பேசுவான். சமீபத்தில் அப்படிப் பேசியது குறைவு என்பதை விட அதில் அவன் ஆர்வம் இல்லாமல் இருப்பது போல அவளுக்குத் தோன்றியது. ஒருநாள் அது பற்றி அவள் கேட்டபோது இப்ப இருக்குற வேலையைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு கொஞ்ச காலம் போகட்டும். செய்யலாம் எனச் சொல்லி இருந்தான். ஆனால் இன்று அந்தப் பெருந்தொகையையும் தன் வங்கிக் கணக்கிற்கு அவன் மாற்றியதைக் கண்டதும்ஏங்க சொந்தக் கம்பெனி ஆரம்பிக்கனும்னு தானே உங்க பேருல சேமிச்சு வச்சீங்க. இப்ப என் பெயருக்கு ஏன் மாத்துறீங்க? வேற எதுவும் பிரச்சனையா? இவ்வளவு அவசரமாய் ஏன் இதெல்லாம் செய்றீங்க?” என்ற அவளின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. தொடர்ந்து அவள் வற்புறுத்திக் கேட்டதும் யார் பெயரில் இருந்தா என்ன? என் பெயர் இருந்த இடத்தில் உன் பெயரும், உன் பெயர் இருந்த இடத்தில் என் பெயரும் இருக்கிறது. அவ்வளவு தான். ஒன்னும் ஒரி பண்ணாதே என அவள் தலையைத் தடவிக் கொடுத்தவனின் முகத்தில் ஏதோ ஒன்றை இறக்கி வைத்த திருப்தி.

மறுநாள் அலுவலகம் சென்றிருந்தவனின் அறையில் திறந்திருந்த அலமாரியைச் சாத்துவதற்காக சென்றவள் கீழ் தட்டில் ஒரு வண்ணக் காகித உறையில் தன் பெயர் எழுதியிருப்பதைக் கண்டாள். ஒட்டப்படாமலிருந்த அந்தக் கடித உறையினுள்  இன்னும் முழுதாய் எழுதி முடிக்கப்படாமல் இருந்த கடிதத்தோடு  வீடு, கார், வங்கி இருப்பு ஆகியவைகளின் விபர அட்டவணையும் இணைக்கப்பட்டிருந்தது. கடிதத்தை வாசிக்க, வாசிக்க அவளின் தொண்டைக் குழிக்குள் தக்கை ஒன்று வந்தமர்வதைப் போல் உணர்ந்தாள், மருத்துவர் சொல்லி இருக்கும் கெடுவுக்கு இன்னும் சில…….. என்ற வரியோடு முடிக்கப்படாமல் இருந்த கடிதத்தின் கடைசி வரியை வாசித்து முடித்தவள் சுனாமியில் சிக்கிக் கொண்டவளைப் போல அலறினாள். அவளின் அலறல் அவளைத் தவிர யாருமற்றிருந்த அந்த வீட்டுச் சுவரில் பட்டு  அவளிடமே திரும்பியது.

கண்களின் வெளிச்சத்தை கண்ணீர் மறைக்க எடுத்த இடத்திலேயே கடிதத்தை வைத்து விட்டுக் கூடத்தில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தாள். மடியில் வைத்திருந்த அவளும், அவனுமாய் இருக்கும் புகைப்படத்தின் மீது அவளின் கண்ணீர் துளி பட்டு நாலாபுறமும் சிதறியது.

அலுவலகத்தில் இருந்து திரும்பும் அவனின் வருகைக்காக எப்பொழுதும் அன்பின் ஈரம் கசியக் காத்திருக்கும் அவளின் கண்கள் இன்று கண்ணீர் கசிய வாயிலை நோக்கிக் கொண்டிருந்தது. தன் முகத்தில் இருக்கும் வழக்கமான புன்னகை இல்லாதிருப்பதைப் பார்த்து அவன் சந்தேகப்பட்டு விடக்கூடாது. தனக்குத் தெரியாது என நினைத்திருப்பவனின் மனதில் சந்தேகத்தை உண்டு பண்ணி அவனை இன்னும் குலைய வைத்து விடக்கூடாது என அவளின் புத்தி எச்சரித்த போதும் மனம் அதற்கு உடன்பட மறுத்து முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. இந்தச் சூழலை வென்று தான் ஆக வேண்டும். அப்பொழுது தான் அவனோடு இன்னும் இணக்கமாய், இயல்பாய் இருக்க முடியும் என நினைத்தவள் புற்றுநோய் முற்றிய நிலையில் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவனை எதிர் கொள்ளும் தைரியத்தைத் தனக்குத் தருமாறு இறைவனைப் பிரார்த்திக்கத் தொடங்கினாள். மயான அமைதி சூழ ஆரம்பித்திருந்த அந்த வீட்டு வாசலில் வந்து நின்ற இளங்கோவின் நிழல் அவளின் மடிவரை நீண்டிருந்தது.. 

நன்றி - தமிழ்வாசல்