Thursday 16 June 2016

எதற்காக எழுதுகிறேன்?

எதற்காக எழுதுகிறேன்? என்ற கேள்வியை முன் வைத்து விடை தேட முயன்ற போது அதற்கானக் காரணங்களைத் தேடி மனம் கடந்த காலங்களுக்குள் நுழைய ஆரம்பித்தது. பாரதி எடுத்துக் கொண்ட சுய உறுதி போலஎழுத்து எமக்குத் தொழில்என்ற உறுதிப்பாட்டோடு எல்லாம் எழுத வரவில்லை என்ற போதும் எழுத்து எனக்கு வசப்படுவதைக் கண்டடைந்த பருவம் நினைவில் இருக்கிறது. பள்ளிக் காலத்திலேயே வாசிப்புப் பழக்கம் இருந்தது. இலக்கிய வாசிப்பெல்லாம் இல்லை. கையில் கிடைக்கும் புத்தகத்தை, இதழ்களை வாசிப்பது என்ற அளவில் மட்டுமே! கல்லூரியின் இறுதி ஆண்டில் அந்த வருட ஆண்டுமலருக்காக படைப்புகள் கேட்ட போது ஒரு கவிதையை எழுதிக் கொடுத்தது தான் முதல் எழுத்து. அது ஆண்டுமலரில் வந்ததும் நண்பர்கள் சிலாகித்ததைத் தொடர்ந்து எழுதிப் பார்த்த கவிதைகள்  நாட்குறிப்பேட்டிற்குள்ளேயே கிடந்து தவித்தன.

கொஞ்சம் கொத்தாய் சேர்ந்த கவிதைகளை என் தந்தையிடம் வாசிக்கத் தந்த போது அவர் அதை ஒழுங்கு படுத்தி புத்தகமாக்கும் யோசனையைத் தந்ததோடு அவரே அதற்கான முதலீட்டையும் செய்தார். வெளியீட்டு விழா, அறிமுக விழா என அந்த நூல் சார்ந்து அவர் செய்த ஏற்பாடுகளில் கிடைத்த பாராட்டுகளும், பரிசுப் பொருட்களும், கையில் திணிக்கப்பட்ட பணக் கவர்களும் எனக்குள் எழுத்தின் மீது ஒரு வசீகரத்தை உண்டு பண்ணச் செய்திருந்தது.

பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள் எழுத ஆரம்பித்த சமயத்தில் என் வாசிப்பு தன்னம்பிக்கை நூல்களின் பக்கம் சாய ஆரம்பித்திருந்தது. அதன் உந்துதலில் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகள் தொடராக நாளிதழ் ஒன்றில் வந்த போது நண்பர்கள் வட்டத்தில் ஒரு தனித்த அடையாளம் கிட்டியது. போதாதென்று பத்திரிக்கையில் இருந்து வந்த சொற்பத் தொகைக்கான காசோலையும் எழுத்தின் மீதான ஆர்வத்திற்குத் தூபம் போட்ட படியே இருந்தன.

பதிப்பகம் மூலம் புத்தகங்களை வெளியிட்டால் உலகம் முழுக்க நம் பெயர் தெரிந்து விடும் என்ற அந்த வயதிற்கே உரிய ஆசை பதிப்பகங்களைத் தேட வைத்தது. பதிப்பக வெளியீடுகளுக்காகவே புதிய நூல்களை எழுதும் முயற்சியைச் செய்ததில் வெற்றியும் கிடைத்ததுதீராத ஆசையும், திகட்டாத முயற்சியும் பதிப்பகங்கள் வழி நூல்களைக் கொண்டு வர வைத்தது.  புத்தகம் போட்டதில் நட்டம் என எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் பணத்தைப் போட்டுக் கையைச் சுட்டுக் கொள்ளாததும், வெளியாகிய நூல்கள் தமிழக நூலகங்களுக்குத் தேர்வான செய்தியும் ஒரு சேர எனக்கு நிகழ்ந்தது. தொடர்ந்து நான்கு நூல்கள் எழுதி வெளியானதுமே  ”ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்என்ற கதையாய் தொடர்ந்து எழுதும் ஆசை மடை திறந்த வெள்ளம் போல வடிந்து விட்டது. அதன்பின் பல மாதங்கள் ஒன்றுமே எழுதாமல் இருந்தேன்.

அந்தச் சமயத்தில் புதிய வேலை வாய்ப்புகள் தேடியும், பொருளாதாரத் தேவைகளுக்காகவும் நண்பர்கள் வெவ்வேறு ஊர்களுக்கும், அந்நிய நாடுகளுக்கும் செல்லத் தொடங்கினர்வாசிப்பும், நண்பர்களுடனான அரட்டைகளுமே எனக்கான பொழுதுபோக்காக இருந்து வந்த நிலையில்  படித்ததை, கேட்டதை, பாதித்தவைகளைப் பகிர்ந்து கொள்ளப் பயன்பட்டு வந்த நண்பர்களின் இடப்பெயர்வு மனதில் பெரும் பாறையாய் கிடந்து அழுத்திக் கொண்டே இருந்தது. இதற்கு ஒரு மாற்றுத் தீர்வாக என் கோபங்களை, சங்கடங்களை, அழுத்தங்களை, சந்தோசங்களை எழுத்தாக்க ஆரம்பித்தேன். எனக்கே எனக்கான எழுத்துக்களாக அவைகள் இருந்தன. எந்தக் கட்டாயமும், வரையறைகளுமின்றி அவைகள் தன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்த போதும் மனதில் இருந்த அழுத்தம் குறையவில்லை. அப்படிக் குறைய வேண்டுமானால் அதை என்னில் இருந்து வெளியில் கடத்த வேண்டும் என்று தோன்றியது. அப்படிக் கடத்தி விடுவதற்காக படைப்பிலக்கியத்தின் பல்வேறு தளங்கள் எனக்குப் பெரும் உதவியாக இருந்தன. நான் கடந்து போகின்ற, என்னைக் கடத்திப் போகின்ற அனைத்தையுமே கதை, கவிதை, கட்டுரை என பல்வேறு தளங்களில் தொடர்ந்து பதிவு செய்ய ஆரம்பித்ததில் எழுத்து என்னை இன்னும் இறுகப் பிடித்துக் கொண்டது.

என் எழுத்து வெளியீடாக வருமா? வராதா? படைப்பாக அங்கீகரிக்கப் படுமா? அல்லது கேலி செய்யப்படுமா? சன்மானம் கிடைக்குமா? கிடைக்காதா? என்றெல்லாம் நான் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. வாசிக்கிறவனிடம் மாற்றத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்ற. அவஸ்தை எல்லாம் இல்லாமல் என் எழுத்து எனக்கு வடிகாலாக, கொண்டாட்டத்தைத் தருவதாக இருந்தால் போதும் என்ற மனநிலையோடு மட்டுமே எழுதுகிறேன். சில நேரங்களில் என் படைப்புகளின் வழியாக மற்றவர்கள் என்னோடு உரையாட மாட்டார்களா? எனக் காத்திருப்பதும் உண்டு. அவ்வாறே சில புத்தகங்களைப் படிக்கும் போது இந்த நடையில் எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே எனத் தோன்றும். அந்த நடையில் புதிய மற்றும் சரியான தரவுகளைத் தேடி அப்படியாக எனக்கு நானே எழுதி வாசிக்கிறேன். அதையே நூல்களாக்கி மற்றவர்களுக்கும் வாசிக்கத் தருகிறேன். நான் மற்றவர்களோடு உரையாடலுக்கு அமரும் ஒரு திண்ணையாக மட்டுமே இன்றளவும் என் படைப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.  

எழுத்தின் வழியாக வாழ்வாதாரத்துக்குத் தேவையான  பொருளாதாரம் கிடைக்கும் என ஆரம்பகாலத்தில் நான் நம்பியது    தவறு என்பதை எழுத ஆரம்பித்த அடுத்த சில ஆண்டுகளில் கண்டு கொண்டேன். அந்த எதார்த்த நிலையைக் கண்டு கொண்ட பின்பு எழுத்தின் வழி என்ன கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு முற்றிலும் போய் விட்டது. இந்த எதிர்பார்ப்பற்ற நிலை எழுத்தைக் கட்டற்ற சுதந்திரத்தோடு கையாள்வதற்கு உதவியது,

எதற்காகவும், எவர் பொருட்டும் வலிந்து எழுதவில்லை என்றாலும் என் கோபத்தை, இயலாமையை, சந்தோசத்தை, சங்கடத்தை, சலிப்பை பல்வேறு வகைமைகளில் பிரித்து அடுக்கி மற்றவர்களின் வாசிப்பிற்கேற்ற வகையில் கொடுப்பதற்காக நிறைய மெனக்கெடுகிறேன். அந்த மெனக்கெடல் மூலமாக ஒரு வித திருப்தியான, சஞ்சலமற்ற உணர்வைப் பெற முயல்கிறேன். அந்த முயற்சி நூறு சதவிகிதம் வெற்றி தரவில்லை என்ற போதும் இப்போதைக்கு எனக்கு அது போதுமானதாக இருக்கிறது. அதனால் தான் எழுதியே தீர வேண்டும் என்ற வேட்கை இன்றி எழுதவும், மனம் விரும்பாத பட்சத்தில் எதுவுமே எழுதாமல் வாரக் கணக்கில் சும்மா இருக்கவும் என்னால் முடிகிறது. ஒருவேளை எழுத்து எனக்குள் நிகழ்த்தும் மாற்றத்தை அதன் மூலம் நான் கண்டடைந்து கொண்டிருப்பதை வேறு ஏதேனும் ஒன்றின் வழியாக என்னால் பெற முடியும் என்ற நம்பிக்கை வந்து அது வாய்க்கப் பெருமானால் இன்னும் சந்தோசம் அடைவேன். படைப்பாளியாய் இருக்கும் அவஸ்தையில் இருந்து தப்பிப்பதற்கான அற்புத சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொள்வேன். படைப்பாளியும் வாசகனுமாய் பயணிக்கும் இரட்டைக் குதிரைச் சவாரியைக் கைவிட்டு நல்ல வாசகனாய் மட்டும் ஒற்றைக் குதிரைச் சவாரியைச் செய்யவே விரும்புவேன். விரும்புகிறேன்

நன்றி : பதாகை இணைய இதழ்