Thursday 9 June 2016

பிரச்சனைகள் தரும் தீர்வுகள்

தன்னுடைய கடன் சுமை, நோய், வாழ்க்கைச் சிக்கல், தனக்கு பிறர் செய்த நம்பிக்கைத் துரோகம் என எல்லா பிரச்சனைகளையும் மூட்டையாக கட்டிக் கொண்டு அவ்வூரிலிருந்த மகானிடம் ஒருவன் வந்தான். தன் மூட்டையிலிருக்கும் பிரச்சனைகளைச் சொல்லி அவரிடம் அழுது புலம்பினான்.

அவன் கூறியவைகளைக் காது கொடுத்துக் கேட்ட அந்த மகான், “அன்பனே! என்னால் உன் பிரச்சனைகளைக் கேட்க மட்டும் தான் முடியுமேயொழிய வேறு எந்த உதவியும் செய்ய முடியாது. வேண்டுமானால் உனக்கு ஒரு யோசனை சொல்கிறேன். அதோ அந்த அறைக்குள் உன்னைப் போலவே பிரச்சனை மூட்டைகளோடு வந்தவர்கள் தங்கியிருக்கிறார்கள். அங்கு சென்று உன் பிரச்சனை மூட்டையை யாரிடமாவது கொடுத்து விட்டு அவர்களிடமிருந்து வேறு ஒரு சிறிய மூட்டையை பெற்றுக்கொள்ள முயற்சி செய்என்றார்.

அவனும் அவர் சொன்னபடி செய்வதற்காக அந்த அறைக்குள் நுழைந்தான். அங்கோ இவன் மூட்டையை விடப் பெரிய மூட்டையைத் தலைக்கு வைத்துக் கொண்டு பலரும் படுத்திருப்பதைக் கண்டான். அடுத்த விநாடி எவரிடமும் எதுவும் கேட்காமலே தன் மூட்டையைத் தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். பிரச்சனைகளே இல்லாமல் இவ்வுலகில் யாரும் இல்லை. பிரச்சனைகளே இல்லாமல் வாழ வேண்டுமென நீங்கள் நினைப்பீர்களேயானால் உங்களால் மிகச் சாதாரண வாழ்க்கையைக் கூட வாழ முடியாது.

பல ஆண்டுகள் அனுபவத்தில் மூத்த விஞ்ஞானிகள் இருந்த போதும் எஸ்.எல்.வி. ப்தாஜெக் என்ற மிகப்பெரிய திட்டத்தின் திட்டஇயக்குனர் பொறுப்பை பேராசிரியர் சதீஷ் தவான் அந்த முப்பத்தொன்பது வயது இளைஞனிடம் கொடுத்தார். ஒரு இராக்கெட்டை உருவாக்குவதும், செயற்கைக்கோளை உருவாக்குவதும் எளிய பணியில்லை என்பதால் என்னால் இதை சரியாக செய்ய முடியுமா? என்ற அச்சம் அந்த இளைஞனிடம் ஏற்பட்டது. அந்த இளைஞனின் தயக்கத்தை புரிந்து கொண்ட தவான், “உனக்கு பிரச்சனைகள் வரக்கூடாதென்றால் நீ எந்த வேலையையும் செய்யாமலிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உனக்கு பிரச்சனைகள் வராது, மிகப்பெரிய பணிகளில் எப்போதும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதை எதிர்கொண்டு பிரச்சனைகள் உன்னை ஆளாமல் அவற்றை நீ ஆளப்பார்க்க வேண்டும். அச்சமின்றி அதை எதிர் கொள்ள வேண்டும்என்று அறிவுரை கூறினார். அந்த அறிவுரையைப் பெற்ற அந்த இளைஞன் அதன்பின் தன்னுடைய முயற்சிகளை நோக்கி வந்த பிரச்சனைகளை எல்லாம் தூள் தூளாக்கி அளவிட முடியாத உயரங்களை தொட்டான். அந்த இளைஞன்அக்னிதந்த அப்துல்கலாம்!

உங்களுடைய இலக்கை அடையும் முன்னேற்றத்தில் ஏற்படக்கூடிய தடைகளைக் கண்டு தேங்கி விடாமல் தொடர்ந்து முன்னேறுங்கள். ஒருபோதும் அத்தகைய முயற்சிகளிலிருந்து பின்வாங்காதீர்கள். இத்தகைய செயல் சார்ந்த நடவடிக்கைகள் தான் உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். நவகாளி யாத்திரையின் போது காந்தியும், நேருவும் சென்று கொண்டிருந்த பாதையில் ஒரு சிறு கால்வாய் குறுக்கிட்டது. நேரு சற்று தூரம் பின்னால் சென்று ஓடிவந்து கால்வாயைத் தாண்டினார். ஆனால் காந்தியோ அப்படி செய்யாமல் கால்வாயின் நடுவில் கிடந்த ஒரு கல்லின் மீது காலை வைத்து கால்வாயைக் கடந்தார். இதைக் கண்ட நேரு காந்தியிடம், பாபுஜி…..இந்த கால்வாயை உங்களால் தாண்ட முடியவில்லையே என்றார். அதற்கு காந்தி நான் நினைத்திருந்தால் தாண்டி இருக்க முடியும் என்றார். ஏன் நினைக்கவில்லை? என்று நேரு கேட்டதும்நீ இந்த மூன்றடி கால்வாயைத் தாண்ட ஆறடி பின் வாங்கிச் செல்ல வேண்டி இருந்தது. நான் பின்வாங்கவில்லை. போர் முனையில் பின்வாங்குவது கூடாதல்லவா?” என்றார் காந்தி. வெற்றிக்கான போராட்டமும் ஏறக்குறைய போர்களம் தான்! அதில் ஜெயித்தால் மட்டும் தான் கொண்டாடப் படுவீர்கள். எனவே பிரச்சனைகளை முதலில் இனம் காணுங்கள். பெரும்பாலான பிரச்சனைகள் நீரின் மேல் மிதக்கும் நீர் குமிழிகள் போன்றவை தான். அதை நீங்கள் ஊசியால் குத்தி உடைக்கிறீர்களா? அல்லது வாயால் ஊதி காற்றைக் கொண்டு உடைக்கிறீர்களா? என்பது அந்த நேர மனநிலையை, சூழ்நிலையை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் அந்த நீர்குமிழிகளை உடைத்துக் கொண்டு முன்னேறிச் செல்வதில் தான் உங்களின் அடையாளமும், வெற்றியும் அடங்கி இருக்கிறது.

கப்பல் வேலைக்கு ஒரு இளைஞன் விண்ணப்பித்திருந்தான். நேர்காணல் அன்று அவனை நேர்காணல் செய்தவர்புயல் வருமானால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன்நங்கூரத்தை நாட்டுவேன்என்றான். அதைவிட பெரிய புயல் வந்தால் என்ன செய்வீர்கள்? என்றார் நேர்காணல் செய்தவர். அப்பொழுதும் நங்கூரத்தை நாட்டுவேன் என்றான் அந்த இளைஞன். இப்படியே அவர்களுக்குள் தொடர்ந்த கேள்வி பதில் உரையாடல் முடிவிற்கு வந்ததன் அடையாளமாய் நேர்காணல் செய்தவர் இவ்வளவு நங்கூரத்தையும் எங்கிருந்து பெறுவீர்கள்? என்றார். அசராத இளைஞன் சட்டென சொன்னான் நீங்கள் எங்கிருந்து அத்தனை புயல்களையும் பெற்றீர்களோ அங்கிருந்து தான் நானும் பெறுவேன். இந்த இளைஞனைப் போன்ற மனநிலை கொண்டவர்களுக்கு செயல் சார்ந்த பிரச்சனைகள் எப்பொழுதும் தடைக்கற்களாக இருப்பதில்லைசாதிக்க வேண்டும்வெற்றி பெற வேண்டும்தன் வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கி விட வேண்டும் என நினைப்பவர்களுக்கு பிரச்சனைகள் புதிய, புதிய  வாசல்களை திறக்கும் சாளரங்களாகின்றன. அவர்கள் தங்களுக்கு வருகின்ற பிரச்சனைகளுக்கான தீர்வுகள் அந்த பிரச்சனைகளுக்குள்ளேயே ஒளிந்திருப்பதாக நம்புகின்றனர்.

பிரச்சனைகளுக்குள் சிக்கும் போது தான் அதுவரையிலும் சும்மா இருந்த மனம் தேடல்களை துவங்குகிறது. அந்த தேடல்கள் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வைக்கிறது. பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ இந்த அணுகுமுறை தான் காரணமாக இருந்திருக்கிறது. இருந்தும் வருகிறது.

அந்தக்காலத்தில் மக்கள் சவரக்கத்தி கொண்டு தங்களுக்குத் தாங்களே சவரம் செய்து கொண்டிருந்தனர். அப்படி சவரம் செய்யும் போது ஏற்பட்ட வெட்டுக் காயங்கள் கில்லெட்டிற்கு ரணவேதனையைக் கொடுத்தது. அதேநேரம் சவரம் செய்யாமலும் அவரால் இருக்க முடியாது. வெட்டுக்காயமில்லாத வகையில் சவரம் செய்வதற்கான வழியை அவரது மனம் தேடத் தொடங்கியது. விளைவு - சேப்டிரேசர் என்ற புதிய கண்டுபிடிப்பு உருவானது. இன்று உலகம் முழுக்க விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் கில்லெட்டின் சேப்டிரேசர் ஒரு பிரச்சனைக்கான தீர்வால் உருவானது தான்!

ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக மதிக்கப்பட்டு இன்று எல்லோர் வீட்டிலும் அவசியம் இருக்கின்ற பொருளாக மாறிப்போன ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள். இதைக் கண்டுபிடித்தவர் சோய்ச்சிரோ ஹோண்டா. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் ஜப்பானில் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் வாகனங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருளுக்கு எங்கே போவது? தன்னிடம் ஒரு மோட்டார் வாகனமிருந்த போதும் எரிபொருள் இல்லாததால் அதைப் பயன்படுத்த முடிய வில்லையே என்ற வருத்தம் ஒருபுறமிருக்க, வாகனமில்லாமையால் தினமும் மார்க்கெட்டிற்கு சென்று வருவதும் ஹோண்டாவுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. என்ன செய்யலாம்? என யோசித்தார். வீட்டில் நின்ற பழைய சைக்கிள் கண்ணில் பட்டது. தன்னிடமிருந்த புல் வெட்டும் இயந்திரத்தில் பொருத்தி பயன் படுத்தக்கூடிய மோட்டரை எடுத்து சைக்கிளில் மாட்டினார். இயக்கி பார்த்தார். மோட்டார் சைக்கிள் உருவானது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு தான் இன்றைய ஹோண்டா பைக்!

நம்மில் பலரும் பிரச்சனைகளைக் கண்டு அஞ்சுகிறோம். எனக்கு மட்டும் இப்படி வருகிறதே என் புலம்பிக் கொண்டு மற்றவர்களிடம் பச்சாதாபம் தேட முயல்கிறோம். எப்படியும் அதிலிருந்துந்து தப்பி விட வேண்டும் என மெனக்கெடுகிறோம். ஆனால், உண்மையில் நமக்கு மட்டும் என நாம் நினைப்பதைப் போல இல்லாமல் பிரச்சனைகள் எல்லோருக்குமே இருக்கத்தான் செய்கிறது. அதிலிருந்து நாம் தப்பிப்பதற்கு செய்யும் முயற்சிகளை வெற்றியாளர்கள் அதற்கு தீர்வு காண்பதற்காக செய்கிறார்கள். சராசரிகள் பிரச்சனைகளைக் கண்டு அஞ்சுகின்றனர். சாதிக்க நினைப்பவர்கள் அதை எதிர்கொள்கின்றனர். நீங்கள் எப்படி?

நன்றி : பாக்யா வார இதழ்