Monday 7 March 2016

காரணம் சொன்ன கதை!

அம்மா வயித்துக்குள்ள நாம இரண்டு பேருமே ஒன்னா இருந்தோம். மார்ச் 11 ந் தேதி அன்னைக்கு நான் உனக்கு ஒரு ரிங்க் (மோதிரம்) பிரசண்ட் பண்ணி இருந்தேன். அங்கே இருக்கும் போது எப்பவுமே சண்டை போட்டுக்கிட்டே இருப்போம். வயித்துக்குள்ள இருந்தாலும் தூங்குறதுக்கு மட்டும் அம்மாவோட மூளைக்குப் போயிடுவோம். அப்படித் தூங்கப் போன சமயத்துல நான் உனக்கு பிரசண்ட் பண்ணி இருந்த ரிங்கை நீ அங்கேயே வச்சுட்டு வந்துட்ட. அதை நான் எடுத்துக்கிட்டு வருறதுக்குள்ள நீ அங்கே இருந்து கிளம்பி முதல்ல வந்துட்ட. அம்மா வயித்துக்கு வந்த உன்னைய டாக்டர் வெளிய எடுத்துட்டாரு. அதுனால தான் நீ முதல்ல பிறந்துட்டே. வயித்துக்குள்ள இருக்கும் போது நான் உன்னையே அடிச்ச கோபத்துல தான் நான் சின்னப் பயலா தொட்டில தூங்குன போது என் முகத்துல நீ தண்ணிய அள்ளி ஊத்திட்டியாம் என்று தன் தம்பி சொன்ன இந்தக் கதையை மகள் என்னிடம் சொல்லி இருந்தாள். 

நாம இரண்டு பேருமே எப்பவுமே ஏன் சண்டை போட்டுக்குறோம்னு தெரியுமால? என்று கேட்டபடி அவன் சொன்ன இந்தக் காரணக்கதை அக்காவுக்கும், தம்பிக்கும் எப்பவுமே சண்டை தானா? என்ற என் கேள்விக்கும் பதிலாய் அமைந்திருந்தது.

மகனை அழைத்து அக்காக்கிட்ட கதை சொன்னியாம்? என்றேன். கதை எப்பூடி? என்றான். "நல்லா இருக்கு" எனச் சொல்லிய நொடி குழந்தைகளுக்குள் தன்னிச்சையாய் எழும் இப்படியான க்ரியேட்டிவிட்டிகளை பள்ளிக்கூடமோ, வீடோ எதன் பொருட்டும், எந்தக் காரணங்கள் கொண்டும் கலைத்து விடக் கூடாதே என்றும் நினைத்துக் கொண்டேன்.