Tuesday 15 March 2016

ஒரு சராசரி குடிமகனின் கவலை!

 
மல்லையா அரசாங்கத்திற்கும், வங்கிகளுக்கும் வைத்த ஆப்பை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வங்கிகள் சார்ந்து ஏதாவது ஒரு அனுபவம் கட்டாயம் இருக்கும். அப்படியான ஒரு அனுபவம் எனக்கும் உண்டு.

நண்பன் ஆவின் பால் ஏஜெண்ட் எடுத்திருந்தான். அது சார்ந்த விரிவாக்கத்திற்காகவும், சுய தொழில் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கத்துடனும் சில வருடங்களுக்கு முன் அவனும், நானும் எங்கள் ஊரில் இருந்த ஒரு அரசாங்க வங்கிக் கிளையை அணுகினோம். இதற்கு முன் அதே வங்கியில் சில சுயதொழில் திட்டங்களின் கீழ் அவன் கடன் (லோன்) வாங்கி முறையாகச் செலுத்தி இருந்தான். எங்கள் இருவருக்குமே அந்த வங்கியில் சேமிப்புக் கணக்கும் இருக்கிறது. இருவருக்கும் வேறு எந்த வங்கிகளிலும், கடன் நிறுவனங்களிடமும் லோன் நிலுவைகள் இல்லை. தவிர, இருவரும் பட்டதாரிகள் என்பதால் எங்களின் கல்லூரிச் சான்றிதழ்கள், எங்கள் இருவர் பெயரிலும் இருந்த L.I.C.பத்திரங்கள் ஆகியவைகளை ஈடாகத் தருகிறோம்.(L.I.C.பத்திரங்களுக்கான பிரிமியத்தை தவணைத் தேதி தாண்டாமல் கட்டிவந்திருந்தோம். அதில் லோன் எடுக்குமளவுக்குப் பிரிமியம் செலுத்தி இருந்த போதும் லோன் எதுவும் எடுத்திருக்கவில்லை) என்று விரிவான எங்கள் தரப்புச்சாத்தியங்களைச் சொல்லி அரசு திட்டங்களின் கீழ் எங்களுக்குக் குறைந்த பட்சத் தொகையைக்(!) கடனாகத் தர ஏதும் வாய்ப்பிருக்கிறதா? என்று கேட்டோம்

முடியுமா? என்று கேட்கவில்லை. வாய்ப்பிருக்கிறதா? என்று மட்டுமே கேட்டோம். அவரோ, “அதெல்லாம் சாத்தியமில்லை. வேுறு எதுவும்....”என்று சிம்பிளாக சொல்லி விட்டு ஒரு பார்வை பார்த்தார். உட்காரக் கூடச் சொல்லவில்லை. உடனே என் நண்பனிடம், “மாப்ள இவனுக வேலைக்கு ஆக மாட்டானுக. கிளம்பு போகலாம்என்றேன். அதன் பின் பொருளாதார நெருக்கடிகளால் வேலைக்கான அடியாட்களாக ஆளுக்கொரு தேசம் சென்றோம். இன்றும் அவனின் அந்த பால் பூத் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இருவருக்கும் அந்த வங்கியில் சேமிப்புக் கணக்கும் இருக்கிறது

ஒரு வேளை லோன் அன்றைக்குக் கிடைத்தி்ருந்தால் அதைக் கட்ட வேண்டும்(!) என்ற கட்டாயத்தின் பேரிலாவது போராடிக் காலூன்ற முயன்றிருப்போம். விரும்பிய தொழிலைச் செய்து பார்த்திருப்போம். பள்ளி காலம் தொடங்கிய எங்களின் நட்பில் இன்னும் சில சுவராசியங்கள் இருந்திருக்கும் என நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். அரசுத் திட்டத்தின் கீழ் கடன் பெறக் கூட தகுதியில்லாத நிலையில் இருக்கிறோமே என்றெல்லாம் நினைத்ததுண்டு.

படித்த, பொருளாதார வசதியற்ற இளைஞர்கள் சுய தொழில் செய்வதன் மூலம் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும், ஒரு தொழில் முனைவோராக மாறவும் கடனுதவி கேட்டு  வங்கிகளை அணுகும் போது செய்யும் எகத்தாளங்களைக் காட்டாமல் கடன் என்ற பெயரில் கோடிகளில் அள்ளிக் கொடுத்து விட்டுவராக்கடன்என்ற பட்டியலை மட்டும் வருடா வருடம் சொல்லிக் கொண்டு அதை வாங்க அடியாட்களை அனுப்புவதற்கும் முடியாமல் சட்டத்தின் முன் உட்கார்ந்திருக்கும் வங்கிகளின் பட்டியல்களைப் பார்க்கும் போது எனக்குள் இருந்த வருத்தம் எல்லாம் வடிந்தது போலவே இருந்தது. கூடவே பாரதி சொன்னதைப் போலகாறி உமிழ்ந்து விடவே தோன்றுகிறது,

வங்கிகளில் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்திற்கு ஐந்து காசு கூடுதல் வட்டி கிடைத்து விடாதா? எனக் கவலைப்படும் சராசரி இந்தியக் குடிமகனால் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?