Saturday 31 October 2015

வலைப்பதிவர் திருவிழாவும், வியாக்கானங்களும்!

 

மழை விட்டும் தூவானம் விடாத கதையாய் வலைப்பதிவர் திருவிழா முடிந்து இருபது நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அது சார்ந்த பதிவுகள் வலைப்பக்கங்களை நிரப்பிக் கொண்டே இருக்கின்றன. இதுவே அந்நிகழ்வின் வெற்றியைச் சொல்வதற்கான சாட்சியாகிறது. இருந்த போதும் ஆதரவும், எதிர்ப்புமாய் எழுந்த குரல்கள் சில முன்னெடுப்புகளுக்கும், அடுத்த நிகழ்விற்கான தயாரிப்புகளுக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த வழிமுறைகளை முன் நிறுத்தியவர்கள் அதை எவருக்கும் உறுத்தலின்றிச் செய்திருந்தால் எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்திருக்கும். ”வலைப்பதிவர்களும் குழு மனப்பான்மையோடு செயல்படுகின்றவர்கள்என்ற வாதத்தை வதங்கிப் போகச் செய்திருக்கும்.

தனிவிழா நடத்தினாலே தகர டப்பாக்களின் சப்தங்களுக்குப் பஞ்சமிருக்காது. இந்த நிலையில் இப்படியான பொதுவிழா என்றால் கேட்கவே வேண்டியதில்லை, தாரை தப்பட்டைகளின் முழக்கம் இருக்கத் தான் செய்யும். இருந்து விட்டுப் போகட்டும். அப்படியேனும் சிலர் தங்களின் இறுப்பைக் காட்டிக் கொள்ளும் ஆசைகள் பூர்த்தி பெறட்டும்.

மகாபாரத யுத்தக்களத்தில் கிருஷ்ணர் யார் பக்கம் இருப்பது? என்ற கேள்வி எழுந்த போது நான் வேண்டுமா? என் படைகள் வேண்டுமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார். பாண்டவர்கள் கிருஷ்ணரைத் தேர்வு செய்தனர், கிருஷ்ணர் தனி மனிதர். அவரின் படைகளோ பல ஆயிரம் வீரர்களை உடையது என நினைத்த கெளரவர்கள் அவரின் படைகளைத் தேர்வு செய்தனர். ஆனால், போரில் பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது. அதற்காகக் கிருஷ்ணரின் படைகள் சிறப்பற்றவை. பலமற்றவை என்று சொல்லி விட முடியுமா? வாழ்வியலின் சூட்சுமம் இதில் தான் இருக்கிறது. எத்தனை வீரம் செறிந்த படை என்றாலும் அதை ஒருங்கிணைக்க சிறந்த வழிகாட்டி அவசியம். அவனின் வழிகாட்டுதல் சரியாக இருந்தால் படைகள் நிச்சயம் வென்றே தீரும். அப்படி இல்லாது போனால் பெரும் படையைச் சிறு பாம்பு சிதறடித்து விடும். இந்த நியதிக்குப் பகவான் கிருஷ்ணரின் படைகள் கூட விதி விலக்கல்ல என்னும் பட்சத்தில் புதுக்கோட்டை வலைப்பதிவர் குழுவினர் எல்லாம் எம்மாத்திரம்! தனக்குக் கிடைத்த திறமையான குழுவை வழி நடத்திச் செல்ல பொறுப்பேற்ற முத்துநிலவன் அவர்களின் அனுபவம் அந்தக் குழுவை சிறப்பாக இயங்க வைத்து நிகழ்வை முன் மாதிரியாக்கியது.

பாய்ந்து சிதறி வந்த நீரை மடை மாற்றி விட்டது மட்டுமே என் பணி. விளைச்சலுக்கு நான் காரணமல்லஎன அவ்வப்போது தன் பதிவுகளில் தனக்கே உரிய நடையில் அவர் சொல்லி வந்த போதும் தன்னை முன்னிலைப்படுத்தவே அவர் இந்த விழாவைப் பயன்படுத்திக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு பின்னூட்டங்கள் மூலமாக பின்னப்பட்டது. அவைகளைப் படிக்கும் போது கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவருக்கு வாய்ப்பாடு ஒன்றைப் பரிசளிப்பது போல் இருந்தது.

போட்டிகள் குறித்த எதிர்குரல்களும், பின்னூட்டங்களும் கூட குற்றச்சாட்டுகளின் குடை பிடித்தே நிற்கின்றன. நடுவர் தீர்ப்பே இறுதியானது என்ற விதிமுறைக்கு உட்பட்டு படைப்புகளை அனுப்பிய பின் அந்தத் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அதற்காகத் தான் எல்லாப் போட்டிகளிலும் அந்த விதி எழுதப்படாத விதியாக இருக்கும். அப்படியிருக்கும் போது படைப்பின் தேர்வு முறைகள் குறித்துக் கட்டாயக் கேள்விகளை எவரும் எழுப்ப முடியாது. இதழுக்கு அனுப்பிய படைப்பு  பிரசுரத்திற்குத் தேர்வாகவில்லை எனத் தகவல் வந்தால் தேர்வு முறை குறித்த உங்களின் அஜண்டாவை அனுப்புங்கள் எனச் சம்பந்தப்பட்ட பத்திரிக்கை ஆசிரியரிடம் கேட்க முடியுமா? நம்முடைய படைப்பு நமக்குச் சிறப்பானதாகத் தெரியலாம்.. அது பொதுவான நிலையில் இருந்து செயல்படும் நடுவர்களுக்கும் அப்படியே தெரிய வேண்டும் என நினைப்பது அத்தனை உசிதமல்ல. அவர்களுக்குள் தரப்பட்ட வரையறைக்குள் படைப்புகள் இருந்தால் நிச்சயம் தேர்வாகி இருக்கும் என்பதைப் போட்டிகளுக்கு நடுவராக இருந்த புதியமாதவி, ஹரணி ஆகியோரின் பதிவுகளை வாசித்தலே புரிந்து விடும்.

தன்னுடைய நேரத்தைச் செலவிட்டு அவரவர் வலைப்பக்கத்தில் பதிவேற்றிய படைப்புகளை அடுத்த சில மணி நேரங்களில் வலைப்பதிவர் விழாவின் பிரத்யேகப் பக்கத்தில் பதிவேற்றிய வலைச்சித்தர் டி.டி. யின் பெரும்பணியை எவரும் மறுக்க மாட்டார்கள் என நம்பலாம். எளிதில் வாசிக்கவும், சம்பந்தப்பட்ட பக்கங்களுக்குச் செல்லவும் உயர் தொழில் நுட்ப வசதிகளோடு உருவாக்கப்படிருந்த அந்தப் பக்கங்களில் பகிரப்பட்ட போதே கட்டுரைகளை வாசித்துத் தலைப்பை ஒட்டி படைப்புகள் அமையவில்லை எனச் சுட்டிக் காட்டி இருந்தால் அடுத்தடுத்து எழுதுபவர்களுக்கு விழாக்குழு அதைக் கோடி காட்டி இருக்கும். முடிவு அறிவிக்கப்பட்டதும் எதுவுமே சரியில்லை என எழுதுவதால் என்ன பயன்? விதைக்கிற காலத்தில் விதைக்க மறந்து விட்டு அறுவடைக்கு ஆட்களைக் கூட்டிக் கொண்டு வருவதால் என்ன நிகழப் போகிறது?

முதல் முயற்சிகளைச் செய்யும் போது அதில் சில தவறுகள் இருக்கும். அவைகள் மீண்டும் நிகழாமல் இருக்கத் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது அவசியம். அத்தியாவசியம். அதில் மறுப்பில்லை, ஆனால், இப்படியல்லவா செய்திருக்க வேண்டும்? ஏன் இப்படிச் செய்துள்ளீர்கள்? இதனால் முழுமை பெறாமல் போய் விட்டதே? என்பன போல எழுதிச் செல்வது தவறைச் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக செய்த செயலே தவறு எனச் சொல்வது போல் அல்லவா இருக்கிறது. தவறுக்கான விளக்கங்கள் விழாக்குழு சார்பில் சொல்லப்பட்ட பின்பும் அதை ஏற்க மறுத்து விவாதம் செய்ய முனையும் நாம் குறைகளை எல்லாம் குற்றச்சாட்டுகளாகச் சொல்லித் திரிகிறோம்!

நிதிப்பற்றாக்குறை, விமர்சனப் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட பணம் போட்டியாளர்களுக்கு வழங்கப்படாமல் போனால் அது யாருக்குச் செல்ல வேண்டும்? என்பவைகள் குறித்து எழுதப்பட்ட பதிவுகளும், அதனையொட்டிய பின்னூட்டங்களுக்கும் பேசிச் சென்றால் இன்னும் பல பக்கங்கள் நீளும். எனவே குறைகளைக் களைந்து மேம்படுவதற்கான ஆலோசனைகளை, கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பெறப்பட வேண்டிய பாடங்களை நோக்கம் மாறாத வகையில் வழிகாட்டுதலாக மட்டும் கொடுங்கள், அதையே குற்றச்சாட்டுகளாக நீட்டும் போது அதற்கென உழைத்தவர்களின் அர்ப்பணிப்பை அலட்சியப்படுத்துவது போலாகி விடும். துளிர்க்க நினைக்கும் புது முன்னுதாரணங்களின் முனைகளை முறித்தெறிவது போலாகி விடும்.

செயல்பாட்டளவில் வலைப்பதிவர்களை இணைப்பது கடினம் என்ற பரவலான நம்பிக்கையை அவநம்பிக்கையாக்கச் செய்ய வேண்டுமானால் முதல் மாற்றம் வலைப்பதிவர்களாகிய நம்மிடமிருந்து தான் தொடங்க வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை ஏற்காமல் நான் மாற மாட்டேன் என பிடிவாதம் பிடித்துக் கொண்டே இருப்பவர்களை தயவு தாட்சண்யமின்றி புறந்தள்ளலாம். கடலை உமியாய் உதறி விட்டு முன்னோக்கி நகரலாம். தேர் வீதிக்கு வர தேரை நகர்த்த வேண்டும் என்பதல்ல. வடத்தை இழுத்தாலே போதும்.

வாருங்கள் வலைப்பதிவர்களே......வடத்தில் இன்னும் இடமிருக்கிறது. தேர் செல்ல வேண்டிய தொலைவும் அருகிலேயே இருக்கிறது.