Sunday 18 October 2015

தூண்டலைத் தரும் அகல் விளக்குகள்!

இரண்டு தினங்களுக்கு முன் பள்ளியிலிருந்து திரும்பிய மகன் இன்னும் இரண்டுவாரம் கழித்து வரும் பிரேயர் அசெம்பிளிக்கு (PRAYER ASSEMBLY) எங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அன்றைய ஆங்கிலச் செய்தித்தாள்களிலிருந்து முக்கியச் செய்திகளை வாசிப்பதற்கு என் பெயரைச் சேர்த்திருக்கிறார்கள் என்றான்.  

அடுத்த வாரம் அம்மா யுனிவர்சிட்டிக்குப் படிக்கப் போயிடுவா. உன்னால எப்படிப் பிரிப்பேர் பண்ண முடியும்? அதுனால மிஸ்கிட்ட முடியாதுன்னு சொல்லிடு என்றேன். அவனோ முழு பிரேயர் அசெம்பிளியும் நாங்க மட்டும் தான் டாடி செய்யப் போறோம். அதுனால நியூஸ் இல்லைன்னா வேற எதுக்காது பெயரை மாற்றிக் கொடுக்கலாம். மிஸ்கிட்ட நீங்க பேசுங்க. இல்லைன்னா இலக்கியா பிள்ளையப் பேசச் சொல்லுங்க என்றான்

அவனவன் பசிக்கு அவனவன் தான் சாப்பிடனும்உனக்கு மாற விருப்பம் இருந்தால் நீ தான் மிஸ் கிட்ட கேட்கனும் என அறிவாளித்தனமாய்(!) சொன்னேன். இரண்டொருமுறை தயங்கித் தயங்கிச் சொல்லிப் பார்த்தவன் இவன் கதைக்கு ஆகமாட்டான்னு நினைச்சானோ என்னவோ? சரி……பேசிப்பார்க்கிறேன் எனச் சொல்லிவிட்டு அலைபேசியை வைத்து விட்டான். ஆனால், அன்றிரவே தன் அம்மாவிடம் சொல்லி மிஸ்ஸிடம் பேசி தொகுப்பாளராகச் (COMPERE) செயல்பட ஒப்புதல் பெற்றிருந்திருக்கிறான்

மறுநாள் காலை பணிக்கு வந்ததும் முதல் அழைப்பு மகனிடமிருந்து வந்தது. டாடி……..நான் சொல்வதைக் கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்றவன் பிரேயர் அசெம்பிளியில் COMPERE ஆகத் தான் பேச இருப்பவைகளை ஏற்ற, இறக்கங்களோடு சொல்லிக் காட்டினான். சிறு, சிறு வார்த்தைத் தடங்கள் தவிர சிறப்பாகத் தயார் செய்திருந்தான். ”நல்லா இருக்குஎன்று சொல்லி விட்டு இன்னும் இரண்டு வாரம் இருக்குல, அதுக்குள்ளயே தயார் ஆகணுமா? என்றேன். ஆமாம் டாடி. அசெம்பிளியில சரியாச் செய்யலைன்னா நல்லா இருக்காதுல. அதான் இப்ப இருந்தே பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறேன் என்றான்.  

அதைக் கேட்டதுமே, இன்னும் இரண்டு நாட்கள் கழித்து நண்பரின் நூலுக்கான விமர்சன உரை நிகழ்த்த வேண்டி இருக்கிறது, ஒரு வாரத்திற்கு முன் அமைப்பின் பொறுப்பாளரை சந்தித்த போது ஒருமுறை பேசிப் பார்த்துத் தயாராகி வாருங்கள் என அவர் கோடி காட்டிய பின்னும் அதற்கான அடிப்படை ஆயத்தங்களைக் கூடச் செய்து பார்க்காமல் இருப்பதும், குழந்தைகள் எப்பொழுதும் அகல் விளக்குகளாக இருந்து நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், பெரியவர்களாகிய நாமோ அந்தத் தூண்டலின் வழி துலங்காமலே இருக்கிறோம் என்று வாசித்திருந்ததும் தான் நினைவுக்கு வந்தது.