Monday 28 September 2015

நினைக்க மட்டுமே முடிகிறது!

தமிழில் இன்னும் நான்கு போர்சன் (PORTION) நடத்தவே இல்லை. அதற்குள் காலாண்டு தேர்விற்கான டைம் டேபிள் சொல்லிட்டாங்க என மகள் சொல்லி வருத்தப்பட்டதாக மனைவி என்னிடம் சொன்னதும், ”இதுல வருத்தப்பட என்ன இருக்கு? நடத்துனதை மட்டும் படிக்கச் சொல்லு. அது போதும்என்றேன். மகளோ, ”அது எப்படி டாடி.? நூறு மார்க்குக்கு கொஸ்டின் வரும்ல. அப்ப நடத்தாத போர்சன்ல கொஸ்டீன் வந்தா எப்படி அட்டண்ட் பண்றது? என்றாள். இப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது?ன்னு நினைத்துக் கொண்டே, ”தேர்வுக்கு முன்னாடி நடத்திடுவாங்கம்மாஎன்று சொல்லி வைத்தேன். அதன்பின்னர் அதைப் பற்றி அவளிடம் எதுவும் கேட்காமல் இருந்தேன்

நேற்று வழக்கம் போல பேசிக் கொண்டிருந்த போது, ”டாடி, தமிழ்ல நடத்தாம இருந்தாங்கன்னு சொல்லி இருந்தேன்ல. அந்தப் போர்சனை எல்லாம் நடத்தி முடிச்சிட்டாங்கஎன்றாள், ஆச்சர்யம் மேலிட பதினைந்து நாளைக்குள்ளையா? என்றேன். அதாவது பரவாயில்லை டாடி. அந்த நான்கு போர்சனையும் நாளைக்கே படிச்சிட்டு வரச் சொல்லிட்டாங்க என்றாள். உன்னால என்ன முடியுமோ அதை மட்டும் படிச்சிட்டு போம்மா. ரொம்ப ரிஸ்க் எல்லாம் வேணாம் என்றேன். கடமைக்காக பாடங்களை நடத்தி முடித்து கட்டாயமாய் மதிப்பெண்கள் வாங்க வைக்கும் முயற்சியில் ஆசிரியர்களும், பள்ளிக்கூடங்களும் இறங்கி விட்டது என்ற குற்றச்சாட்டு பொய்யில்லை போலும்  என்ற நினைவோடு படுத்து எழுந்து காலையில் வேலைக்கு வந்ததும் அழைத்த மகளிடம் அதற்குள் எழுந்து விட்டாயா? என்றேன். ஐந்தரைக்கே எழுந்துட்டேன் டாடி. அம்மா கூட இருந்து சொல்லித் தந்ததால ஒருவழியா நான்கு போர்சனையும் படிச்சிட்டேன் என்றாள். குழந்தைகளை நிர்பந்திக்கும் இந்தக் கல்வி முறை குறித்து வருத்தப்படும் அதே நேரம் ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களைக் காப்பாற்றும் வேகத்தில் குழந்தைகளை கிழித்தெறிந்து விடக் கூடாதே என்றும் நினைத்துக் கொண்டேன்இப்படி நினைக்க மட்டுமே முடிகிறது!

நன்றி : பாக்யா வார இதழ்