Thursday 8 October 2015

உந்துதல் தந்த உபதேசங்கள் - 2

 

ஒன்றைக் கற்றுக் கொள்வதில் காட்டும் அக்கறை அதை யாரிடம் கற்றுக் கொள்கிறோம் என அறிந்து கொள்வதிலும் இருக்க வேண்டும்

"எப்பொழுதாவது", "எப்பவாது" போன்ற காரணங்கள்எத்தனை தடவைதவறு செய்திருக்கிறீர்கள்? என்பதை மேலதிகாரி அளவிட உதவுமேயொழிய ஒரு போதும் செய்த தவறைச் சரியென மாற்றி விடாது.

உளியும் இருக்கு கல்லும் இருக்கு என்பதற்காக கல்லைக் கொண்டு உளியை அடித்தால் தேர்ந்த சிற்பியால் கூட சிலை வடிக்க முடியாது.

வாங்க வழி இல்லாவிட்டாலும் யாசகமாகவாது வாங்கி வாசிச்சா அது படைப்பு. கைக்காசு கொடுத்து வாங்கி வாசிச்சிட்டு எப்படியாவது, யாருக்காது யாசகமா கொடுத்திடனும்னு நினைச்சா அது வெறும் புடைப்புஎழுத்து எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்து கொள்.

உதிர, உதிரத் (உதிருதல்) தான் கல் சிற்பமாய் உயிர் பெறுகிறது என்பதற்காக உதிர்த்துக் கொண்டே இருந்தால் சிற்பத்திற்குப் பதில் வெறும் சிதைவுகள் தான் மிஞ்சும்.

கல்லுக்குள் ஈரம்என்ற எதார்த்தத்தை நவீனமாய் சொல்வதாய் நினைத்துக் கொண்டுஈரத்திற்கு வெளியே கல்என்று திருகலாய் எழுதாதே.

முத்தமிட்டுச் சென்ற சிலரின் எச்சிலுக்குத் தப்புவதில்லை முத்தம் வாங்கியவனின் முதுகு.

நினைவுப்பரிசு தானே என்பதற்காக கணிதத்தில் முனைவர் பட்டம் வாங்கியவருக்கு வாய்ப்பாட்டைத் தரக்கூடாது.

நாலு நாளா மழை பெய்யுது. வயல் ஈரமாய் இருக்கு. கால்வாயில தண்ணி ஓடுதுங்கிறதுக்காக பருவம் தப்பிய காலத்துல விதை நெல்லை அள்ளிக்கிட்டு வயலுக்கு ஓடக்கூடாது.

மழை வருமா? வராதா? என்பதை தீர்மானிக்க முடியா விட்டாலும் குடையை எடுத்துச் செல்வதா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்க முடியுமில்லையா? செய்யத் தவறிய செயலுக்கு தீர்மானிக்க முடியாதவைகளின் மேல் காரணங்கள் சொல்வது கெட்டிக்காரத்தனமில்லை!