Monday 10 August 2015

உயிர்த்தெழுந்த நாடு

சிங்கப்பூரின் ஐம்பதாவது சுதந்திர தினத்திற்காக (09/08/2015) எழுதப்பட்ட கவிதை

 

 

உதவா நகரம் என்ற

உபரிச் சொல்லில் இருந்து

பீனிக்ஸாய் உயிர்த்தெழுந்தாய்.

 

சாதிப் பாகுபாடுகளைக் கழைத்து

பல்லினச் சமூகத்தை நாட்டின்

ஒருமுகமாக்கினாய்.

 

லீயின் தலைமைத் துவத்தில்

தரணி போற்றும் திட்டங்களோடு

ஏற்றம் காண முனைந்தாய்.

 

சிங்கப்பூர் என்ற ஆறெழுத்தின்

நான்கெழுத்து மந்திரமாய்

உழைப்பை அறிவித்தாய்

 

உறுதியான உள்கட்டமைப்பாலும்

உயர் தொழில் நுட்பத்தாலும்

உய்ப்பித்துக் கொண்டாய்

 

திறமையானவர்களைத் தக்கவைத்தும்

தகுதியானவர்களைத் தனதாக்கியும்

தலைநிமிர்ந்தாய்

 

வளங்கள் ஏதுமில்லாத போதும்

பற்றாக்குறையில்லா சந்தைகளின்

கேந்திரமானாய்

 

சுற்றுலாவிலும், சுத்திகரிப்பிலும்

உகல நாடுகளோடு சமர் புரியும்

வல்லரசானாய்.

 

இளையோர் ஒலிம்பிக்கை நடத்தி

உலகின் முதல் நாடாய்

முத்திரை பதித்தாய்

 

முன்னேற்றப் பாதை வேண்டி

ஆதாரம் நாடி வந்தோருக்கு

கலங்கரை விளக்கானாய்

 

நாடு உதறிய நகரம் என்ற சொல் உரித்து

உலகம் வியக்கும்நகரநாடாய்

உருக் கொண்டாய்.

 

பொன்விழாவில் கால்பதிக்கும் உன்னில்

எம்மைப் பதியமிட்டுக் கொண்டதில்

பெருமை கொள்கிறோம் எந்நாளும்!