Wednesday 5 August 2015

அப்துல் கலாமின் இறப்பும், தகர டப்பாக்களின் சப்தமும்

கடந்த 27.07.2015 ல் அப்துல் கலாம் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி எட்டியதும் தங்கள் வீட்டுத் துயரமாக நினைத்து பகிரப்பட்ட துக்க நினைவுகளோடு விமர்சனம் என்ற பெயரில் சில தகர டப்பாக்கள் போட்ட சப்தங்கள் அவர்கள் நினைத்ததைப் போல ஒன்றையும் புரட்டிப் போட வில்லை. அவர்கள் பாசையிலேயே சொன்னால் ஒரு மயிரையும் புடுங்கவில்லை.

 

  •  இறந்த ஒருவரை ஏன் விமர்சனம் செய்யக்கூடாது? 
  • இறந்தவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? 
  • அவரின் செயல்பாடுகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன?

இந்த மூன்று கேள்விகளை மட்டுமே முன் வைத்து எழுதப்பட்ட பெரும்பாலான விமர்சன வாந்திகளை எடுத்தவர்கள் தங்களைச்  செல்வாக்கு மிக்கவர்களாக, தங்களின் எழுத்து மற்றும் அமைப்புகளின் மூலம் சமூகத்தில் ஒரு மாறுதலை உருவாக்கி வருபவர்களாக எப்பொழுதும் நினைத்துக் கொண்டு அதற்காகவே சொம்படி, செருப்படி பட்டவர்களே என்றாலும் அவர்கள்  எழுத இணையத்தில் இடமும், அவர்களுக்கு வடம் பிடிக்க வட்டமும் இருக்கத் தான் செய்கிறது. அந்த இடத்தையும், வட்டத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக என் பார்வைக் கோணமே வேறு என்ற மிதப்பில்   அவ்வப்போது ஊளையிட ஆரம்பித்து விடுவார்கள்.

இறந்த ஒருவரை விமர்சனம் செய்யலாமா? என்ற ஆதரவுக் குரலை ஏன் செய்யக் கூடாது? என்ற கேள்வியின் மூலம் மடக்க முனையும் அறிவுஜீவிகள் அவர் இறந்த போது வைக்கும் தங்களின் கபால அறிவை அவர் உயிரோடு இருந்த போது எங்காவது முன் வைத்திருக்கிறார்களா? முனுமுனுத்திருக்கிறார்களா? என்று தேடினால் இணையம் கூட இளக்காரமாய் பார்க்கிறது. அப்படியே செய்திருந்தாலும் இப்போது மாதிரி உச்சி மயிர் கிளம்ப பிளிறி இருக்க மாட்டார்கள். காரணம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவரோடு அமரும் வாய்ப்போ, பேசும் வாய்ப்போ கிடைத்து விட்டால் அதை வைத்தே தங்களைப் போஸ்ட்டராக்கிக் கொள்ளும் நப்பாசை! தங்களுக்கு அப்படியான வாய்ப்பு இனி இல்லை என்பது  உறுதியாகி விட்ட நிலையில் உஷ்ணத்தின் கடுப்பில் உயரக் கிளம்புகிறார்கள். அப்படியெல்லாம் எங்களை புரமோட் செய்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் தலை எழுத்து இல்லை. நாங்கள் எல்லாம் சுயம்பு என அவர்கள் கூக்குரல் எழுப்பினால் அது எத்தனை பொய் என்பதை அவர்களின் மனசாட்சியே சொல்லி விடும். அப்துல் கலாம் என்ற மனிதரின் பெயரைப் பயன் படுத்தி நாங்கள் அடையப் போவது ஒன்றுமில்லையே எனச் சொல்பவர்கள் தான் இப்போது அதே அப்துல் கலாமை விவாதமற்றபொறுப்பற்ற முறையில் விமர்சித்துத் தங்களின் முகவரியை உறுதி செய்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

அப்துல் கலாம் ஒரு மெக்கானிக் என எதார்த்தத்தை தன் கண்டுபிடிப்பு போலச் சொல்லும் சொம்புகள் எல்லாம் அந்த மெக்கானிக் நாட்டிற்காக புடுங்கிய ஆனியைக் கூட தங்களின் சமுதாயத்திற்கும், வாழும் சமூகத்திற்கும் புடுங்கவில்லை. அவரோடு விழாக்களில் பங்கு கொண்ட காலங்களில் ஓலமிடவில்லை. அப்படியே ஓலமிட்டிருந்தாலும் இன்று போல் அது எல்லோரின் காதுகளையும் எட்டும் சப்தத்தில் இருக்கவில்லை.

இறந்த ஒருவரை விமர்சனம் செய்வது தப்பல்ல. ஆனால் அதை எப்பொழுது செய்வது? என்பது தான் கேள்வி. அவரின் இறுதிச் சடங்கு முடிந்த பின் ஒரு அறிவுப்பூர்வமான தளத்தில் அவர் மீதான விமர்சனத்தை வையுங்கள். பொதுவெளியில் விவாதியுங்கள் என்று சொன்னால் செய்ய மாட்டார்கள். காரணம், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டால் மட்டுமே தங்களின் இறுப்பைக் காட்டிக் கொள்ளவும், அதன் மூலம் தங்களின் கூடாரங்களுக்கு ஆள் பிடிக்கவும் முடியும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இறந்தவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா? என்ற வறட்டுக் கேள்விக்கான பதிலைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. தேசப் பிதாவையே தேக சுகம் தேடுபவனாக விமர்சித்த தேசத்தின் வழித் தோன்றல்களாகிய நாம் அப்துல் கலாமை மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகவா நினைக்கப் போகிறோம்? அப்துல் கலாம் வாழ்ந்த காலத்தில், அவர் பதவி வகித்த காலத்தில் நிகழ்ந்தவைகளின் மூலம் அவரின் செயல்பாடுகளை விமர்சிக்கும் இந்த கொட்டை இழந்த புலிகள் எல்லாம் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அதற்காகக் குடல் இறங்க கத்திக் கூட்டம் சேர்த்து களத்தில் நின்று போராடாதவர்கள் இப்பொழுது மட்டும் கத்துவதால் என்ன பயன்? காது கேட்காதவனிடம் இரகசியம் சொல்லும் தந்திரம் பலிக்கும் என்பதில் அவர்களுக்கு இருக்கும் அபார நம்பிக்கையைத் தான் இந்தக் கத்தல்கள் காட்டுகிறது.

பொக்ரான் அணுகுண்டு வெடிப்பை ஏளனம் செய்து அதுவரையிலும் இருந்த அகிம்சை இந்தியாவை அப்துல் கலாம் தான் மாற்றுப் பாதைக்கு இழுத்துப் போய் விட்டார் என்பதைப் போல பிம்பம் கட்டுகிறார்கள். ஒரே ஒரு கேள்வி தான் கேட்கத் தோன்றுகிறது. இந்தியாவின் பாதுகாப்பிற்கும், அமைதியின்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத பலம் பெற்றிருக்கும் போது அவர்களை எச்சரிக்கவாது நம்மிடம் அதற்கான சக்தி வேண்டாமா? நூறு கோடி மக்கள் சக்தியை காக்க வெறும் வெள்ளைக் கொடி போதும் எனச் சொல்பவர்கள்  நாளை தங்கள் நாக்கின் நிலையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்? அப்பவும் இந்தியாவின் கையாலாகாத தனம் என கட்டை விரலை உயர்த்தி இவர்கள் கூவுவார்களேயொழிய வேறு ஒன்றையும் செய்ய மாட்டார்கள். வாய்ச்சொல் வீரர்களான அவர்களின் விஞ்ஞான விளக்கங்களை தொலைக்காட்சிகளில் கேட்டும், இணையப் பக்கங்களில் படித்தும் வட்டங்களின் வாசிப்பாளன் வேண்டுமானால் கிளர்ச்சியடையலாம். விரல் சூப்பக் கூட அது உதவாது என்பது தான் நிதர்சனம். அணு ஆயுத பலமிக்க நாடு என்ற பலம் தான் இன்றைய இந்திய இறையாண்மையின் பலமாக இருக்கிறது என்பது கடந்தகால நிகழ்வுகள் தந்த படிப்பினை.

கனவு காணச் சொன்னார். களம் காணச் சொன்னாரா? என எதுகை, மோனையாக ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இவர்களின் புரிதல் காஞ்சிக்குப் போனால் காலாட்டிக் கொண்டு சாப்பிடலாம் என்ற ஒருவர் சொன்ன அறிவுரையைக் கேட்டவன் அது எப்படி முடியும்? எனக் கேட்டதைப் போல் தான் உள்ளது. திண்ணையில் அமர்ந்து விட்டதைப் பார்த்து விட்டை ஏதும் விழுமா? இல்லை விட்டமே விழுமா? என நினைத்துக் கொண்டிருக்கும் அறிவு மொன்னைகளுக்கு  இந்த அறிவுரை அபத்தம் தான். ஆனால் தன் வாழ்வை குறிக்கோளை நோக்கி நகர்த்திச் செல்பவனுக்கு அதற்காகப் பயன்படும் துடுப்பு தான் கனவு காணுங்கள். அப்துல் கலாம் சொன்னதை விடுங்கள். மூலக் கடுப்புக் காரனைப் போல கலங்க, கலங்க எழுதும், பேசும் இவர்கள் ஏதாவது இளைஞர் கூட்டத்தைக்  களம் காண வைத்திருக்கிறார்களா? அப்படி அவர்களால் களம் கண்ட காளையர் கூட்டங்கள் களைந்த களைகள் ஏதுமுண்டா? முண்டாசு கட்டியவனெல்லாம் பாரதி என்ற மிதப்பில் உழன்று வரும் இவர்களைப் போன்ற ஜீவன்களை எந்த மாதிரியான தயாரிப்பாய் பார்ப்பது என்றே தெரியவில்லை.

தான் சார்ந்த மதத்திற்காக என்ன செய்தார்? என்பது அடுத்த கோஷம். இந்திய வரலாற்றில் சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள் நிகழும் போதெல்லாம் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்று தான் சக மனிதனாய்சமூகத்தவனாய் ஒவ்வொரு இந்தியனும் நினைக்கிறான். சிலர் அப்படியில்லை என்பதற்காக எல்லோரையும் அந்த வரிசைக்குக் கொண்டு வர முடியாது. விதிவிலக்குகளை எடுத்துக்காட்டுகளாக ஆக்காததால் தான் இன்றும் இந்திய இறையாண்மைக்கு இழுக்கு நேராமல் இருக்கிறது என்பதில் எவருக்கும்  மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதேநேரம் அப்துல் கலாம் மீது மதம் சார்ந்த இந்தக் குற்றச்சாட்டை வைப்பவர்கள் அவர் இஸ்லாமின் பிரதிநிதியாக இல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவின் முதல் குடிமகனாகத் தான் இருந்தார் என்பதை மறந்து விடுகிறார்கள். ஒருவேளை அவர் அப்படிக் குரல் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? சில மதம் சார்ந்த அமைப்புகள்  சந்தோசப்பட்டிருக்கும். சில அமைப்புகள் அக்கிரமம் என அலறி இருக்கும். இதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எழவு வீட்டில் தந்த காப்பியில் சர்க்கரை இல்லாமல் போச்சே என எழுதும் இவர்களைப் போன்றவர்கள் என்ன செய்திருப்பார்கள்? அவர் என்ன இஸ்லாமியானா? இந்தியனா? என ஒரு கேள்வி கேட்டு அரைப் பக்கத்திற்கு எழுதியும், தொண்டை கதறத் தொலைக்காட்சிகளில் பேசியும் தன்னை முன் நிறுத்த மட்டுமே முயன்றிருப்பார்கள். வேறு ஒன்றையும் கிழித்திருக்க மாட்டார்கள்.

குடியரசுத்தலைவர் பதவியில் இருந்த போது இதையெல்லாம் செய்தாரா? என்ற கேள்வியின் மூலம் அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த அரசாங்கங்களின் முறையற்ற செயல்பாடுகளை அப்துல் கலாம் மீது தந்திரமாகத் திருப்பி விட முனைகிறார்கள். அந்தச் செயல்பாடுகளுக்கு காரணமான அரசியல்வாதிகளைத் தட்டிக் கேட்க இவர்களுக்குத் தைரியமில்லை. திராணியில்லை. அப்படிக் கேட்டு விட்டால் அவர்களின் அண்டியைப் பிடித்து தனக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியாது என்ற பயம். இப்படியான தொடைநடுங்கிகள் தான் எய்தவனை விட்டு விட்டு அம்பை நொட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

வீதி சரியில்லாமல் சாக்கடை அடைப்பெடுத்து கிடந்த போது அப்துல் கலாம் என்ன செய்தார்? என்பது போல சந்தில் சிந்து பாடி எழுதப்பட்ட விமர்சனங்களை வாசிக்கும் போது அதை எழுதிய புத்தி சுவாதீன ஜீவிகளை நிந்திக்கத்தான் சொல்கிறது மனது. தனிமனித ஒழுங்கு முறைகளால் சரி செய்ய வேண்டிய விசயத்தில் அப்துல் கலாம் என்ன செய்திருக்க வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

அப்துல் கலாம் தாய் மொழிக் கொள்கை பற்றி தங்களின் எழுத்தில் எழுதித் தள்ளும் தமிழ் இலக்கிய உலகின் தாவா கட்டைகள் மொழிக்காக என்ன செய்திருக்கிறார்கள்? அப்படி ஏதேனும் செய்து அதற்காக அப்துல் கலாம் தன் பேச்சாலும், எழுத்தாலும் முட்டுக்கட்டை போட்டிருந்தால் அவர்களின் வாதத்துக்கு கொடி தூக்கி எல்லோரும் கோசம் போடலாம். எதுவுமே செய்யாத விட்டில் பூச்சிகள் அவரின் மொழிக் கொள்கையை சாதியத்தோடு ஒப்பிட்டும், மொழி வளர்ச்சிக்காக அவர் கூறிய வழிமுறைகளைச் செயல்படுத்த வேண்டுமானால் தமிழகம் இந்தியாவில் இருந்து பிரிய வேண்டும் என வாதிட்டுக் கொண்டும் இருப்பதைப் பார்க்கும் போது அறுக்க மாட்டாதவனிடம் ஐம்பத்தெட்டு கருக்கருவாளைக் கொடுத்த கதை தான் நினைவுக்கு வருகிறது. ஒரு மனிதரின் இழப்பில் தங்களின் சுயம் சார்ந்த கோட்பாடுகளின் சாயங்களை, கொள்கைகளை வீசிப் பார்க்கும் இந்த அட்டைக் கத்தி வீரர்களின் சித்தாந்த சாயங்கள் கழுத்தறுத்த கோழியின் கடைசித் துள்ளலாக மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

 தங்களின் இரவும், பகலும் ஒழுங்கின்மையின் கூடாரங்களில் தான் கழிகிறது என்பதை உணராத பித்தர்கள் கலாமின் தனிப்பட்ட வாழ்வியல் முறையை பிழைப்பு வாதமாக சித்தரித்துக் காட்ட முயல்கிறார்கள். கற்றுக் கொடுக்கச் சில நமத்துப் போன சித்தாந்தங்களையும் சிதைந்த கோட்பாடுகளையும் வைத்துக் கொண்டு கொல்லைப் புற வேலை பார்ப்பவர்கள் எல்லாம் ஐந்து இலட்சம் மக்களைத் தன் மயானக் களத்தில் திரள வைத்த வலிமைக்குச் சொந்தக்காரரிடமிருந்து கற்றுக் கொள்ள ஏதுமில்லை என்கிறார்கள்.

எந்த ஒரு மனிதனும், அவன் வழியான செயலும் விமர்சனத்திற்கும், விவாதங்களுக்கும் அப்பாற்பட்டதல்ல, அதுவும் பொது வாழ்வில் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் அது இன்னும் அதிகம் என்ற வகையில் அப்துல் கலாமையும், அவரின் செயல்பாடுகளையும் விமர்சனம் என்ற பெயரில் துக்க தினத்திலேயே அசைபோட்டு சாக்குகளிலாவது தங்களை அறுவடை செய்து கொள்ள வேண்டும் என்ற நினைப்போடு சில தகர டப்பாக்கள் களம் இறங்கின. வெற்றுச் சப்தங்களை எழுப்பி அதன் மூலம் போர் முரசறைந்து விட்ட லயிப்பில் இருந்தன. ஆனால், அந்த டப்பாக்களின் சப்தங்கள் அவர்கள் நினைத்தது மாதிரியான எதையும் நிகழ்த்திக் காட்டவில்லை. அதில் அவர்களுக்கு ஒன்றும் வருத்தமிருக்காது. ஏனென்றால், அடுத்து எங்கு, எவர் சாவில் ஊளையிடலாம். கல்லடி படலாம் என்பதில் தான் அவர்களின் கவனமெல்லாம் இருக்கும்

நன்றி : மலைகள்.காம்