Tuesday 11 August 2015

உங்களிடமிருந்து தொடங்குங்கள்

 
அம்மா அடித்ததால் அந்தச் சிறுவனுக்கு அவள் மேல் கோபம். “நான் உன்னை வெறுக்கிறேன்; நான் உன்னை வெறுக்கிறேன்என கத்தியபடி வீட்டை விட்டு வெளியேறி அருகிலிருந்த பள்ளத்தாக்கை நோக்கி ஓடினான். அதன் பின்பும் அவன் கோபம் தணியவில்லை. பள்ளத்தாக்கில் நின்று கொண்டுநான் உன்னை வெறுக்கிறேன்; நான் உன்னை வெறுக்கிறேன்என்று கத்த பள்ளத்தாக்கும் அதை அவன் குரலிலேயே எதிரொலித்தது. முதன்முதலாக எதிரொலியைக் கேட்ட அந்தச் சிறுவன் பயத்தோடு மீண்டும் அம்மாவிடமே ஓடி வந்து பள்ளத்தாக்கில்நான் உன்னை வெறுக்கிறேன்; நான் உன்னை வெறுக்கிறேன்என ஒரு பையன் என்னிடம் கத்தினான் என்றான்.

நடந்தவைகளை ஊகித்த அந்த சிறுவனின் அம்மா மீண்டும் பள்ளத்தாக்கிற்குச் சென்றுநான் உன்னை நேசிக்கிறேன்; நான் உன்னை நேசிக்கிறேன்என கத்தும் படி சொல்லி அனுப்பினாள். அவனும் அப்படியே செய்ய பள்ளத்தாக்கும் அதே மாதிரியாகவே எதிரொலித்தது. முன்பு போல் இல்லாமல் பயமற்றவனாய் அந்த சிறுவன் அம்மாவிடம் வந்து நடந்தவைகளைச் சொன்னான். இந்த சம்பவத்தில் வரும் சிறுவனைப் போல நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதையே எந்தவித சமரசமுமின்றி திருப்பித் தரக்கூடியது உங்களின் வாழ்க்கை.

வாழ்க்கை மட்டுமல்ல உங்களின் நண்பர்கள், எதிரிகள், உங்களைச் சார்ந்தவர்கள், சாராதவர்கள் மட்டுமின்றி இவர்களைப் போல நீங்கள் அறியாத பலரையும் உள்ளடக்கிய சமுதாயமும் நீங்கள் கொடுப்பதைத் தான் திருப்பித் தர தயாராக இருக்கிறது. இதுவரையிலும் நீங்கள் கடன் கேட்காத ஒருவரிடம் ஒரே ஒருநாள் மட்டும் கடன் வாங்கிப் பாருங்கள். மறுநாளே அவர் உங்களிடம் கடன் வாங்கத் தயாராகி விடுவார். அப்படியாகவே நாம் வாழ்க்கையை வாழப் பழகி விட்டோம்!

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது திபேத்தில் இருந்த தலாய்லாமா காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் திபேத்திய மொழியில் இருந்தது. காந்தியடிகளுக்கும், அவருடன் தங்கியிருந்தவர்களுக்கும் அந்த மொழி தெரியாததால் அந்தக் கடிதத்தை காந்தியடிகளால் படிக்க முடியவில்லை. உடனே காந்தியடிகள் பதிலுக்கு தலாய்லாமாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். தன் தாய்மொழியான குஜராத்தி மொழியில் எழுதிய அந்தக் கடிதத்தை தனது செயலாளர் மகாதேவதேசாயிடம் கொடுத்து தபாலில் அனுப்பி வைக்கச் சொன்னார்.

கடிதத்தைப் பார்த்த தேசாய், “பாபுஜி, இந்தக் கடிதத்தை குஜராத்தி மொழியில் எழுதி இருக்கிறீர்களே…………தலாய்லாமாவுக்கு குஜராத்தி மொழி தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு காந்தியடிகள், “நிச்சயமாக தலாய்லாமாவுக்கு குஜராத்தி மொழி தெரியாது. என்ன செய்வது? திபேத்திய மொழி தெரியாத எனக்கு அந்த மொழியில் கடிதம் எழுதிய தலாய்லாமாவுக்கு வேறுவிதமாகப் பதில் எழுத எனக்குத் தோன்றவில்லைஎன்று பதிலளித்தார். எல்லா உபதேசங்களையும் விட உண்மையான உபதேசம் வாழ்ந்து காட்டுவது எனபதற்கேற்ப வாழ்ந்து காட்டிய காந்தியடிகள் இந்தச் செயலின் மூலம் தலாய்லாமாவுக்கு மட்டுமல்ல நமக்கும் சேர்த்தே மனிதனின் வாழ்க்கை நிலையைமன நிலையை உணர்த்திக் காட்டினார். எனவே பிறரை திறமையாக ஏமாற்றி, வஞ்சித்து உங்களின் வெற்றிகளை அடைவதற்கான முயற்சிகளையோ, செயல்களையோ ஒருபோதும் செய்யாதீர்கள். அப்படி செய்வீர்களேயானால் நீங்கள் எடுத்த அதே அஸ்திரத்தை உங்களுக்கு எதிராக மற்றவர்களும் எடுக்கத் தயங்க மாட்டார்கள். பதிலுக்குப் பதில் என்பதைத் தவிர மற்ற அனைத்துமே இரண்டாம் பட்சம் தான் என நினைக்கும் மனநிலை புரையோடிப் போய்விட்ட சமூகத்தில் வேறு எதையும்  எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் நீங்களோ, நானோ, நம்மைச் சுற்றியிருப்பவர்களோ காந்தியோ, புத்தனோ, ஏசுபிரானோ அல்ல. சராசரிகள் தான்! சராசரி நிலையிலிருந்து சாதனை நிலையான வெற்றியை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருப்பவர்களே! அதற்கு மற்றவர்களிடமிருந்து கிடைக்கும்ஒத்துழைப்புஅவசியம்! அத்தியாவசியம்!! அப்படியான ஒத்துழைப்பு கிடைக்க வேண்டுமானால்  “நான்என்ற எண்ணத்தை அகந்தையை விட்டுக் கொடுக்க வேண்டும். “நான்என்ற அகந்தையை விடும் போதுஒத்துழைப்புஎன்பது உங்களை தானாகவே வந்து சேரும்

எதிலும் நான் சொல்வதும், நினைப்பதும் தான் சரியாக இருக்கும் என வாதிட்டுக் கொண்டிருக்காதீர்கள். வாழ்க்கையை நேசிக்கவும், நேசிக்கின்ற வாழ்க்கையில் பிறருடைய எதிர்ப்பின்றி வெற்றி பெறவும் வேண்டுமானால் உங்கள் வாழ்க்கையை வாத, பிரதி வாதங்களுக்குள் உட்படுத்திக் கொள்ளாமல் மற்றவர்களிடமிருந்து ஒத்துழைப்பை மட்டும் பெற முயற்சி செய்ய வேண்டும். எந்த அளவிற்கு அதிகமான ஒத்துழைப்பு கிடைக்கிறதோ அந்த அளவிற்கு  வாழ்க்கையை சுவராசியமானதாகவும், வெற்றிகரமானதாகவும் அமைத்துக் கொள்ள முடியும்.

உள்நாட்டுப் போரினால் அமெரிக்கா சின்னா பின்னமாகிக் கொண்டிருந்த போது அதிபராக இருந்த ஆப்ரகாம் லிங்கன் தனது போர்த்துறை அமைச்சராக இருந்தஸ்டாண்ட்டன்க்கு முக்கியமான உத்தரவு ஒன்றை அனுப்பினார். அதைப் படித்துப் பார்த்த ஸ்டாண்ட்டன்ஒரு படுமுட்டாள் தான் இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும்என்று சொல்லி அந்த உத்தரவை கிழித்தெறிந்தார். லிங்கனுக்கு இந்தச் செய்தி தெரியவந்தது. “நான் இந்த நாட்டின் அதிபர். என் உத்தரவை ஒரு அமைச்சராக இருப்பவர் மதிக்காதது மட்டுமின்றி கிழித்தெறிவதா? நிறைவேற்ற முடியாது என அவர் எப்படிச் சொல்லலாம்?” என சராசரிகளைப் போல் லிங்கன் எகிறிக் குதிக்கவில்லை. என்ன செய்தார் தெரியுமா?

ஸ்டாண்ட்டன் என்னை படுமுட்டாள் என்று சொல்லி இருந்தால் நான் அப்படிப் பட்டவனாகத்தான் இருக்க வேண்டும். நானே சென்று அவரைப் பார்த்து வருகின்றேன்என்று சொல்லி அவர் இடத்திற்கே சென்று சந்தித்தார். அன்புடன் அவரின் தோள் மீது கை போட்டு விவாதித்தவர் இந்த விசயத்தில் உங்களின் ஒத்துழைப்பு வேண்டும். அபோது தான் பிரச்சனையை சமாளிக்க முடியும்என்றார். நெக்குருகிப்போன ஸ்டாண்ட்டன் எந்தவித எதிர்ப்புமின்றி லிங்கனுக்கு ஒத்துழைப்போடு அவர் சொல்லை மீறாத மரியாதையையும் அள்ளிக் கொடுத்தார்.

ஒத்துழைப்பு கிடைத்ததால் வெற்றி பெற்ற வரலாற்றை தெரிந்து கொண்டதைப் போல ஒத்துழைப்பு கிடைக்காததால் ஒரு மகத்தான வலிமை கொண்ட படை தோல்வியடைந்த வரலாற்றையும் தெரிந்து கொண்டால் ஒத்துழைப்பின் அவசியமும், அருமையும் உங்களுக்கு புரியும். தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே பெற்று வந்த ஹிட்லரின் ஜெர்மானியப் படைகள் இரஷ்யாவிற்குள் நுழைந்தன. குறிப்பிட்ட தூரம் நுழைந்தவுடன் அங்கு நிலவி வந்த தட்பவெப்பநிலை உள்ளிட்ட பல விசயங்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அப்படையின் தளபதி அங்கிருந்த நிலைமைகளை தெளிவாக விளக்கி ஹிட்லருக்கு கடிதம் எழுதியதோடு தொடர்ந்து படைகள் முன்னேறிச் செல்லாமல் இருக்க உத்தரவிடும் படி கோரியிருந்தார். தளபதியின் கடிதத்தைக் கண்ட ஹிட்லர் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என சொல்லாத குறையாய், ”படைகள் தொடர்ந்து முன்னேறி இரஷ்யாவிற்குள் செல்லட்டும்என்று உத்தரவிட்டார். படைத்தளபதியின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அதை முறையாக பரிசீலிக்காமலும், அவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு தராமலும் ஹிட்லர் போட்ட உத்தரவால் ஜெர்மானிய படைகள் இரஷ்யாவிற்குள் முன்னேறிச் சென்றன. இரஷ்யாவின் சீதோஷ்ண நிலை பற்றி முழுமையாக அறிந்திராத நிலையில் முன்னேறி வந்த படைகளை அதே சீதோஷ்ண நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு இரஷ்யப்படைகள் தோற்கடித்தன. அந்த தோல்வி ஒரு மாபெரும் உலக யுத்தத்தின் போக்கையே திசை மாற்றியது. கூடவே ஹிட்லரின் வீழ்ச்சியையும் ஆரம்பித்து வைத்தது. வெற்றியாளனின் தனித்துவம் இது போன்ற சூழ்நிலைகளில் தான் அடையாளமிடப்படுகிறது. ஒத்துழைப்பை பெற்று வெற்றி பெற்ற லிங்கனின் முடிவை விரும்புகிறீர்களா? அல்லது ஒத்துழைப்பை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் நினைப்பதே சரி என நினைத்து தோற்ற ஹிட்லரின் முடிவை விரும்புகிறீர்களா? என்பது உங்கள் சாய்ஸ்!

விட்டுக்கொடுத்தால் மட்டும் உதவி கிடைத்துவிடுமாஎன கேட்கலாம். அதற்கு என் பதில் நிச்சயம் கிடைக்கும்காரணம், விட்டுக்கொடுக்கும் போது தான் நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதோடு அவர்கள் சொல்கின்ற விசயங்களையும், அதன் உணமைச் சூழ்நிலைகளையும் ஏற்றுக் கொள்ள முடியும். தான் சொல்வதை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்ற இந்த மனித இயல்பை செயல்படுத்தி குடும்பங்களில், அலுவலகங்களில், நிர்வாகங்களில் பலரும் வெற்றி பெற்றிருக்கின்றனர். வெற்றி பெற்றும் வருகின்றனர். நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? அவர் விட்டுக் கொடுக்க மாட்டாரா? என சராசரி கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பீர்களேயானால் உங்களால் சாதிக்க முடியாதுஒருநாளும் வெற்றி பெற முடியாது. உங்களின் வெற்றிக்கு, இலக்கு நோக்கிய முன்னேற்றத்திற்கு தான் மற்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறீர்கள். எனவே முதலில் விட்டுக்கொடுக்க நீங்கள் தயாராகுங்கள். இந்த விசயத்தில் சுயநலவாதியாய் இருந்தால் மட்டும் தான் வெற்றி நிச்சயம். உங்களுக்கு எதிரில் நிற்பவர் உங்களுடன் கை குலுக்க கையை நீட்டுவாரா? மாட்டாரா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பதை விட தயங்காமல் உங்கள் கையை நீட்டிப் பாருங்கள். தானாகவே அவருடைய கை உங்களை நோக்கி வரும். அனுபவித்தவர்களின் அனுபவ பாடமானமுன் கையை நீட்டு. முழங்கை தானே நீளும்என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள்.

ஆயிரம் மைகளுக்கு அப்பால் உள்ள இடத்திற்குச் செல்வதற்கான ஆரம்பம் நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியில் தான் இருக்கிறதுஎன்ற சீனப் பொன்மொழியைப் போல உங்களின் வெற்றிக்கான ஆரம்பப் பயணம் விட்டுக்கொடுத்தலில் தான் இருக்கிறது. அதன் மூலம் நீங்கள் பெறும் ஒத்துழைப்பு உங்களின் வாழ்வின் போக்கையை திசைமாற்றும் என்பதால் விட்டுக் கொடுத்தலை உங்களிடமிருந்து தொடங்குங்கள். பிறரிடம் மாற்றம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதற்கு பதில் உங்களிடம் மாற்றம் செய்ய வேண்டிய அல்லது நீங்கள் மாற வேண்டிய விசயங்கள் ஏதுமிருக்கிறதா? என யோசியுங்கள். அந்த யோசனை உங்கள் வாழ்க்கையை சுவராசியமானதாய் - சுகமானதாய் மலர வைக்கும். நதியாய் நடை போட வைக்கும்

நன்றி : முத்துக்கமலம்.காம்