Thursday 30 July 2015

புரட்சித் தலைவி “ஒளவையார்”!

சிங்கப்பூர் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் இவ்வாண்டு ஒளவையார் விழாவை நடத்தியது. கம்பன் விழா, கந்த சஷ்டி விழா, அண்டா, குண்டா அக்கப்போர்களுக்கு விழா எனப் பார்த்தே பழகி இருந்த எனக்கு முகநூலில்ஒளவையார் விழா 2015” என்ற அழைப்பிதழை பார்த்ததும் சற்றே ஆச்சர்யமாகத் தான் இருந்தது.

இதற்கு முன் இப்படியான விழாக்களுக்கு சென்றதில்லை என்பதால் இவ்விழாவில் என்ன மாதிரியான அங்கங்கள் இருக்கும் எனத் தெரிந்திராத நிலையில் இவ்விழாவிற்காக உருவாக்கப்பட்டிருந்த முகநூலின் சிறப்புப் பக்கத்தில் நான் அறிந்திருந்த நண்பர்களில் சிலர் அவர்களின் வருகையை உறுதி செய்திருந்ததாலும், நிகழ்வை ஏற்று நடத்தும் அமைப்பில் இருந்த தோழி அன்றைய தினம் மறு நினைவூட்டல் அழைப்பைக் கொடுத்திருந்ததாலும் நிகழ்விற்குச் செல்லும் துணிவு வந்தது.

அச்சரம் பிசகாது சொன்ன நேரத்திற்கு தொடங்கியிருந்த நிகழ்ச்சி அரங்கில் பள்ளிச் சீருடையிலும், சீருடை அணியாமலும் நிறைய குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் அமர்ந்திருப்பதைக் கண்டதும் ஒருவிதகிலியோடு அரங்கின் கடைசி இருக்கைக்கு ஓடினேன். கடைசி இருக்கைகள் தங்களை என்னிடம் ஒப்புக் கொடுக்க எப்பொழுதும் தயங்கியதே இல்லை என்பது மீண்டும் நிருபணமானது. அரங்கத்தை முழுமையாக பார்க்கும் படியாக ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

சம்பிரதாய நிகழ்வுகளுக்குப் பின் ஒளவையாரின் ஆத்திச்சூடி,, கொன்றை வேந்தன் ஆகியவைகளைக் கருப்பொருளாகக் கொண்டு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அமைப்புகளின் தலைவர்கள் தொடங்கி சிறப்பாளர்கள் வரை அக்குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ப தங்களை வளைத்துக் கொண்டு வாழ்த்துகளை வழங்கி பரிசு கொடுத்து கெளரவித்தனர். கருப்பொருளுக்குத் தாங்கள் வடிவம் கொடுத்த விதத்தை அவர்கள் பார்வையாளர்களுக்குப் படைத்துக் காட்டியதைக் கணட போது சிங்கப்பூர் போன்ற பல்லின மக்கள் வாழும் நாடுகளில்தமிழ் மெல்லத் தேயும்என்ற சொல் தேய்வழக்காகி வருவதை உணர முடிந்தது. மொழியை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திச் செல்ல இது போன்ற போட்டிகளும், ஊக்குவிப்புகளுமே அஸ்திரம்..

ஒளவையார் விருதைப் பெற்ற உள்ளூர் பிரபலம் டாக்டர். உமாராஜன் தன் ஏற்புரையின் முடிவில்வாழைப்பழம்என்ற சொல்லை மிகச் சரியாக உச்சரிக்க குழந்தைகளைப் பழக்குங்கள் என்று வந்திருந்த பெற்றோர்களிடம் வேண்டுகோள் வைத்தார். பலரின் உச்சரிப்பில் வாழைப்பழம் வாலைப்பழமாய் வழுக்கிக் கொண்டு இருக்கும் நிலையில் அந்த வேண்டுகோள் சாலப் பொருத்தம். “”, “”, ”கரங்கள் தான் உச்சரிப்பை உயிர்ப்பிக்கின்றன. சொல்லாடல்களுக்கு சொல்லின் மீதான உச்சரிப்பு முக்கியமில்லையா?

தமிழகத்தில் இருந்து வந்திருந்த சிறப்புப் பேச்சாளர் முனைவர் .விஜய சுந்தரியின் உரை கானமும், கருத்துமாய் அரங்கை நிறைத்தது. கே.பி.சுந்தரம்பாளை ஒளவையாராக திரையில் காட்டியதைப் போல ஒளவையாரை ஒன்பது அவதாரங்களாய் மேடையில் தன் பேச்சின் மூலம் கொண்டு வந்து காட்டினார். ஒளவையார் நிகழ்த்திய புதுமைகளைச் சுட்டிக்காட்டி இவள் அல்லவாபுரட்சித்தலைவிஎன்ற போது அதன் பொருள் உணர்ந்த அரங்கம் சகஜமாக சில நிமிடங்களானது. கல்லூரியில் மொட்டை மனனம் செய்திருந்த ஒளவையின் பாடல்களுக்கு  நல்ல தொரு விளக்கம் அவர் பேச்சின் வழி எனக்குக் கிடைத்தது. அவரிடம் கற்றுக் கொள்பவர்கள் கொடுத்து வைத்த ஆத்மாக்கள். தமிழ் பாட வகுப்பு என்றாலே கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பெட்டிக்கடையில் அடைக்கலமாகி விடும் என் கல்லூரி கால வாழ்வியல் அவர் கற்றுத் தரும் கல்லூரியிலும் ஈரம் காயாமல் இருப்பதை ஆதங்கமாகவே குறிப்பிட்டார்.

அறிவுக்கு விருந்தாய், செவிக்கு உணவாய் அமையும் இப்படியான நல்ல நிகழ்வுகளில் செல்ஃபி எடுப்பது, வாங்கி வந்த வார, மாத இதழ்களை மேய்ந்து கொண்டிருப்பது, முகநூல் பக்கங்களில் உலாவித் திரிவது, நண்பரிடம் பேசும் சங்கதியை தனக்குச் சம்பந்தமில்லாதவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் உரக்கக் கதைப்பது என பார்வையாளர்கள் அரங்கேற்றும் சிறப்பு அங்கங்களுக்கும் அரங்கில் பஞ்சமில்லை.. இப்படியான மனநிலை மாற வேண்டும்.

ஆறு மணிக்குத் தொடங்கி கச்சிதமாக எட்டரை மணிக்கு நிகழ்ச்சி முடிய செவிக்கு விருந்து கிடைத்த மகிழ்வோடு ஏழரை ஏதுமில்லாமல் வயிற்றிற்கு உணவிட பத்தரை மணிக்கு விடுதிக்கு வந்து சேர்ந்தேன்