Sunday 4 January 2015

குழந்தைகள் கற்றுத்தரும் பாடம்

நியூ இயர் (NEW YEAR) கொண்டாட்டத்திற்காக வீட்டில் எல்லோரிடமும் காசு வசூலிக்கப் போகிறோம். உங்கள் பங்கு எவ்வளவு? என்றாள் மகள்.  

இந்தப் புத்தாண்டிற்கான செலவை நானே மொத்தமாக ஏற்றுக் கொள்கிறேன். உன் லிஸ்டைச் சொல்லு என்றேன்.  

மகளும், மகனும் சொன்னதைக் கேட்ட மாத்திரத்தில் அவ்வளவு எதற்கு? என ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு இருவரும் ஆளுக்கொரு கேக், பிஸ்கட், சாக்லெட் மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன்

சட்டென மகள் கேட்டாள். டாடி……..வீட்டில் எல்லோரும் நியூ இயர் கொண்டாடுவதற்கு தான் நாங்கள் காசு வசூல் பண்ண நினைச்சோம். எங்களுக்கு மட்டும் வாங்கித் தந்தா மத்தவங்களுக்கு எப்படி கொடுப்பது? என்றாள்.

கூட்டுக்குடும்பமாக வாழும் வீட்டில் என் பிள்ளைகளை மட்டும் நான் கவனத்தில் கொண்டது அப்பொழுது தான் எனக்கு உரைத்தது. குற்ற உணர்வோடு உன் பிளானைச் சொல்லு என்றேன்

நம்ம வீட்டுல மொத்தம் எட்டு பேர். ஆளுக்கொரு கேக் வருகிற மாதிரி ஒரு பெரிய கேக், ஆளுக்கொரு சாக்லெட், ஆளுக்கொரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுங்க. நானும், தம்பியும் அதை நியூ இயர் கிஃப்டா பேக் பண்ணி எல்லோருக்கும் கொடுத்து விஷ் பண்ணிடுறோம் என்றாள்.  

கூட்டுக் குடும்பமாய் இருப்பதில் நாம் பெருமை கொண்டாலும் அதைச் சிதையாமல் நகர்த்திச் செல்வது எப்படி என்பதைப் பல நேரங்களில் குழந்தைகளே கற்றுத் தருகிறார்கள்.