Tuesday 13 January 2015

மெளன அழுகை - 3

(திண்ணை  இதழில்மெளன அழுகைகவிதை நூல் குறித்து கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை)


கிட்டத்தட்ட 15 நூல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார் கோபி. அதில் ஒன்று "மௌன அழுகைகவிதைத் தொகுதி. முன்னுரை வழங்கியவர் கல்கியின் தலைமைத் துணையாசிரியர் அமிர்தம் சூர்யா. அணிந்துரை ஈரோடு சம்பத்.

புலம் பெயர் வாழ்வின் துயரங்கள் அங்கங்கே கவிதையாகி இருக்கின்றன. ஈழத் தமிழரின் அவல வாழ்வும் பாலசந்திரனின் மரணமும் கவிதையாகி அவஸ்தைப்படுத்துகின்றன. "எழுந்து வருவோம் உன்னிலிருந்து" என்ற கவிதையில்

    புறமுதுகு காட்டா புறநானூற்றுத் தமிழன்

    என அறிந்து மார்பில் சுட்டார்களோ ?

 இத்தொகுதியில் மிகப் பாதித்த கவிதை "வன்மம்"

இடறிவிழும்

உன் ஆசைகளுக்கான

காரண ஈறுகளை

பேனாய்

பெருமாளாய்ப் பருமனாக்கி

எப்பொழுதும்

என்மீது

உமிழ்ந்து செல்ல

உனக்கு கிடைத்துவிடுகிறது

நீ ராசியில்லாதவள்

என்ற ஒற்றை வரி.

பெருநகர வாழ்வில் இயற்கையாய் நாமிழந்துவிட்ட பலவிஷயங்களைப் பேசிச் செல்கின்றன கவிதைகள். "தடம்" அப்படியான ஒன்று.

புறநகரின்

மனைகள் தோறும்

புதைந்து கிடக்கிறது

உழுது விதைத்து

உயிர் வளர்க்க

உணவு தந்தவனின்

வறுமை தடவிய

வியர்வை ரேகைகள்.

 "நினைவுகள் குழைந்த தருணம்" கண்ணீர் விட வைத்த கவிதை.

பெற்றோர்

மனைவி

பிள்ளைகள்

நண்பர்கள் என

எல்லோருக்கும் ஏதோ ஒரு

நினைவுகளைத் தருபவனாகவே

துயில்கொண்டிருந்தான்

சடங்கேந்தி வந்த உறவினர்கள்

பொணத்த எப்ப தூக்குறீங்க ? என

விசாரிக்கும் வரை.

"மௌன அழுகை"யும் அப்படியான ஒன்று. மனைவியாகவும் கூடு பாய்ந்து அந்த உணர்வுகளைக் கவிதையாக்கி உள்ளது சிறப்பு.

"கடவுளுக்கு வந்த சோதனை" கண்டதேவித் திருவிழாவை நினைவுறுத்தியது. வெளிநாட்டில் வசித்து வந்தாலும் கோபியின் நினைவுகளில் சூல்கொண்டிருப்பது தாய்நாடேஅதன் பிரதிபலிப்பாகவே கவிதைகள் வெளிப்படுகின்றன. மிக யதார்த்தமான கவிதைகள் படித்துப் பாருங்கள்.

நன்றி : திண்ணை.காம்