Monday 4 August 2014

அறிந்திராத போதும் அரவணைத்தவன்

கடல் கடந்து மொழி தெரியாத தேசம் நோக்கி முதன் முதலில் பரதேசியாய் சென்ற போது தன்னுடைய அறையில் இடம் கொடுத்தவன் என்பதை விட எனக்கான படுக்கை கிடைக்கும் வரை தன் படுக்கையை எனக்கு விட்டு தந்து விட்டு  தரையில் உறங்கியவன். அந்நிய மண்ணில் வேலையிடத்தில் தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டு இன்னொருவர் துணையின்றி எழ முடியாமல் மருத்துவமனையில் இருந்த போது பகல் முழுவதும் மற்ற நண்பர்கள் உதவி செய்ய இரவில் மிகுந்த சிரமமாக உணர்ந்த போது மருத்துவமனையில் இரவில் மற்றவர்கள் தங்க அனுமதி இல்லாத போதும் எப்படியோ வந்து என் பெட்டிற்கு அருகில் இரவெல்லாம் விழித்திருந்து உதவியவன்.

தன் திருமணத்தில் சொந்த உறவுகளை விட என்னையும், என் குடும்பத்தையும் முன்னிறுத்தியவன். என்  மாப்பிள்ளை என பலரும் அறிய அறிவித்து அதற்கான உரிமையை இன்றும் அள்ளி அள்ளி தருபவன். எப்பொழுதும், எங்கும் அவனாலோ, அவனைச் சார்ந்தவர்களாலோ எந்த குறைவும் எனக்கு வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவன்.

என் பணத்தேவைகளின் போதெல்லாம குபேரனாயிருந்து உதவியவன். எல்லோருக்கும் அவன் சக்தி. எனக்கு மட்டும் குண்டன்! குண்டா என அழைக்கும் போதெல்லாம் மலர்ந்த முகத்தோடு அணைப்பவனின் நட்பு 1997 ல் தொடங்கி அன்பால் நகர்ந்து கொண்டே இருக்கிறது.