Sunday 3 August 2014

வெகுஜன இதழில் முதல் அங்கீகாரம் தந்தவர்

முகநூலில் நண்பர்களாக தொடர்ந்த போதும் 2013 ல் அவர் பதிந்த ஒரு புகைப்படத்திற்கு நான் போட்ட பின்னூட்டத்தின் வழி முதல் உரையாடல் ஆரம்பித்தது. பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கொஞ்சம் வாசிப்பவன். சராசரிக்கும் கீழாய் எழுதுபவன் என்பதை கண்டுபிடித்து விபரங்கள் கேட்டார். சொன்னதும், “எழுதி அனுப்பு என்று சொல்லி மெயில் ஐடி கொடுத்தார். அனுப்பியவைகள் எல்லாம் வாசிப்பிற்கேற்ற எல்லையில் இல்லை என்று சொல்வதைப் போல இன்னும் முயற்சித்து எழுதப் பாரு என்றதுடன், அப்படி எழுதும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன? என்பதையும் சொல்லித் தந்தவர்.  

அனுப்பியிருந்த கவிதைகளை மீண்டும் சரி செய்து அனுப்பினேன். அவைகள் கவிதை என்ற வட்டத்திற்குள் மிக கச்சிதமாக சிக்காவிட்டாலும் அதன் பரப்பில் நின்ற ஒன்றை எடுத்துகல்கிஇதழில் வெளியிட்டு வெகுஜன இதழில் எனக்கு முதல் மேடை கொடுத்தவர். அதன்பின் சில கவிதைகள் வெளிவந்தன.

படைப்புகள் சார்ந்த துறையில் இயங்கும் முகநூல் நண்பர்களில் ஏறக்குறைய என் வயதை அனுபவமாக கொண்ட ஒருவரிடம் என்  வயதொத்த நண்பனைப் போல் பேசுவது இவரிடம் மட்டும் தான்! என் கவிதை தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கியவர் என்பதை விடவும் அது அச்சுக்கு செல்வதற்கு முன் நான் கேட்டேன் என்பதற்காக கல்கி தீபாவளி மலர் தயாரிப்பு பணியில் பிசியாக இருந்த போதும் இரவு பத்து மணிவரை காத்திருந்து அலைபேசி வழியாக எனக்கு வாசித்துக் காட்டியவர்.

அவருக்கு வாசிக்கத் தந்திருந்த என்னுடைய பிற தொகுப்பிலிருந்து சில விசயங்களை எடுத்து காட்டி ஒரு விழாவில் அவர் பேசிய போது அதற்கு கைதட்டல்கள் கிடைத்தன என்பதை பந்தா இல்லாமல் என்னிடம் பகிர்ந்து கொண்டவர். அவரின் இயல்பை ஒருமுறை சிலாகித்து பேசிய போது என் தலைக்கு பின்னால் ஒளிவட்டமா இருக்கு? நட்புக்கு ஒரு வட்டமெல்லாம் இல்லைடா என உரிமையாகச் சொன்னதோடு இன்றளவும் அப்படியான இடைவெளியின்றி என்னோடு நிற்பவர்