Tuesday, 6 March 2018

பிள்ளைப்பேறு அருளும் பர்வதவர்த்தினிமூன்றாம் திருச்சுற்றை முடித்து இரண்டாம் திருச்சுற்றுக்குள் வந்தால் பத்து கைகளும், துதிக்கையும் கொண்டு மேற்கு நோக்கிய நிலையில் அபூர்வ பிள்ளையார் அமர்ந்திருக்கிறார். இந்த பிள்ளையாருக்கு தெற்கே சக்கர தீர்த்தம் உள்ளது.

310 அடி நீளமும், 59.5 அடி அகலமும், 18.5 அடி உயரமும் கொண்டு விளங்கும் இரண்டாம் திருச்சுற்றின் வட கிழக்கில் சங்கு தீர்த்தம், பிரம்மஹத்தி தீர்த்தம், சூரிய புஷ்கரினி தீர்த்தன், சந்திர தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம் என எட்டு தீர்த்தக் கிணறுகள் உள்ளன. வடமேற்கில் “கோடி தீர்த்தம்” அமைந்துள்ளது. இராமர் வில் நுனியால் குத்தி ஊற்று உண்டாக்கி நீர் எடுத்து லிங்கத்திற்கு முழுக்கு செய்த இந்த கோடி தீர்த்தத்தோடு இரண்டாம் திருச்சுற்று முடிவடைகிறது.

இரண்டாம் திருச்சுற்று முடிந்து உள்ளே நுழையும் போது அதைக் கடக்கும் மண்டபத்தின் வடபுறம் சிறிய குளம் போல சிவதீர்த்தம் அமைந்துள்ளது. இதைக் கடந்து சென்றால் நவசக்தி மண்டபம் வரவேற்கும். அதன் தென்கிழக்கே கல்யாண சுந்தரர் காட்சி தருகிறார். தென்மேற்கு மூலையில் சாத்தியாமிர்த தீர்த்தம் கிணறு வடிவில் அமைந்துள்ளது.

கருவறை இராமநாதருக்கு வலப்புறம் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு தனிச்சன்னிதி உள்ளது. பர்வதவர்த்தினி மீது தாயுமானவர் “மலைவளர் காதலி” என்ற பதிகத்தை தமிழில் பாடியுள்ளார். இவை அம்பாள் சன்னிதியின் தென்புற சுவரில் வெள்ளைச் சலவைக்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.

அம்பாளின் உருவம் அடி முதல் முடி வரை நேரியதாய் நெளிவின்றை அமைந்திருக்கிறது. இதை “நிர்பங்க வடிவம்” என்றழைப்பார்கள். அம்பாள் சன்னிதிக்கு கிழக்கு மூலையில் கண்ணாடியாலான மாடத்தைக் கொண்ட பள்ளியறை அமைந்துள்ளது. இங்கு இராமநாதரும், அம்பாளும் இரவில் திருப்பள்ளி கொள்வதையும், காலையில் திருப்பள்ளி எழுச்சி பெற்று மீள்வதையும் பூஜையாகவே தினமும் கொண்டாடுகின்றனர். பள்ளியறை நாயகியின் அழகை தாயுமானவர்

தெட்டிலே வலியமட மாந்தர்வாய் வெட்டிலே

சிற்றிடையிலே நடையிலே

சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே

சிறுபிறை நுதற்கீற்றிலே

பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனைகந்த

பொடியிலே அடியிலே மேற்

பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே

புந்திதனை நுழையவிட்டு

நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே

நின்னடியர் கூட்டத்திலே

நிலை பெற்ற அன்பிலே மலைவற்ற மெஞ்ஞான

நேயத்திலே உன் இருதாள்

மட்டிலே மனது செல நினதருளும் அருள்வையோ

வளமருவு தேவையரசே!

வரை ராசனுக்கு இரு கண்மணியா யுதித்த மலை

வளர் காதலிப் பெண் உமையே!
எனப்பாடி உள்ளார்.

அம்பாளின் காலுக்கு பாஸ்கர சேதுபதி மன்னர் காணிக்கையாக கொடுத்த வைரக் கொலுசு அணிவிக்கப்படுகிறது. ஒருமுறை பாஸ்கர சேதுபதி தன் மகளுக்கு வைரக்கொலுசு அணிவித்து இக்கோவிலுக்கு அழைத்து வந்தாராம். அன்று கனவில் மலைவளர் காதலி சேதுபதியிடம், “உன் மகளுக்கு மட்டும் தான் கொலுசா?” என்று கேட்டிருக்கிறாள். தான் கடவுளுக்கு வைரக்கொலுசு பூண வேண்டும் என விரும்பியது தான் கனவாக வந்துள்ளது என சேதுபதி முதலில் நினைத்தாராம். ஆனால் மறுநாள் காலையில் தன் மகள் தடுக்கி விழுந்ததைக் கண்டதும் தன்னிடம் மலைவளர் காதலி தான் கனவில் வந்து கேட்டிருக்கிறாள் என முடிவு செய்து தன் மகளுக்கு அணிவித்த வைரக்கொலுசையே சேதுபதி காணிக்கையாக கொடுத்து விட்டாராம்.

இந்த அம்பாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது இன்றும் நம்பிக்கையாக உள்ளது. இராமநாதருக்கு வலப்புறம் பர்வதவர்த்தினி இருப்பதைப் போல இடப்புறம் அன்னை விசாலாட்சி இருக்கிறாள். இந்த இருலிங்க கோவில் இங்கு மட்டும் என்பது சிறப்பு.

அம்பாளின் சன்னிதியில் உள்ள ஸ்ரீ சக்கரத்தை தரிசித்து ஆசிபெற்று கருவறை நோக்கி வரும் வழியில் நந்தி மண்டபம் உள்ளது. சிவதீர்த்தம் வழியாகவும் வரலாம். எல்லா சிவாலாயங்களிலும் நந்தி கருங்கல்லினால் அமைக்கப்படிருக்கும். ஆனால், இங்கு உள்ள 22 அடி நீளமும், 12 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட நந்தி செங்கல் மற்றும் சுண்ணாம்பினால் ஆனது. வாயிலிருந்து நாக்கு எழுந்து சுழன்று வரும் தோற்றத்தில் நந்தியின் சிற்பம் அமைந்துள்ளது.

மதுரை விசுவநாத நாயக்கர் காலத்து குறுநில மன்னராக இருந்த உடையான் சேதுபதி கட்டத்தேவர் இந்த நந்தி மண்டபத்திற்கான திருப்பணியைச் செய்தார். விசுவநாத நாயக்கரும், கிருஷ்ணப்ப நாயக்கரும் உருவ வடிவில் நந்தியின் இருபுறமும் நின்று இராமநாதரையும், விசுவநாதரையும் வணங்குகின்றனர்.

நந்தி மண்டபத்திற்கு எதிர்புற வாயிலின் தென்புறம் மகா கணபதி பெரிய உருவில் இருக்கிறார். நந்திக்கு குறுக்கே புகுந்து செல்லக் கூடாது. சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அப்படி சுற்றி வந்தால் வடக்கே முருகன் கோவிலும், கிழக்கே நவக்கிரக சலவைக்கல் மேடையும் உள்ளது. கோவிலுக்கும், நவக்கிரக மேடைக்கும் இடையே ஒரு மேடையில் பெரிய எண்ணெய் கொப்பரை சட்டி உள்ளது. நரக வேதனைய தவிர்க்கும் பொறுப்பு முருகனுக்கு உரியதாய் அவன் முன் வைக்கப்பட்டுள்ளது.

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்

Saturday, 3 March 2018

மாயவனைக் கட்டிப் போட்ட மன்னவன்!பிரகாரங்களைக் கடந்து உள்ளே நுழைந்ததும் அனுப்பு மண்டபம் எனப்படும் முழுக்க கருங்கல்லினாலான சேதுபதி மண்டபம் வரவேற்கும். அதைக் கடந்து உள்ளே நுழைந்ததும் தெற்கு முகமாக பெரிய அனுமன் தன் வலக்கையை உயர்த்தியபடி காட்சி தருகிறார். அனுமன் கோவிலுக்கு எதிரில் மகாலட்சுமி தீர்த்தம் உள்ளது. தீர்த்தத்தில் நீராடிய பின்பு தான் சன்னிதிக்குள் சென்று வழிபட வேண்டும். இத்தீர்த்தத்தில் நீராடிய பின் அதே வழியாக மகாலட்சுமி சன்னிதிக்கு வரலாம்.

அனுமன் கோவிலுக்கு மேற்கு பக்கத்தில் “சேதுபதீசம்” (சேதுபதி ஈஸ்வரம்) உள்ளது. சேதுபதி மன்னர்களில் ஒருவரான விஜயரகுநாத சேதுபதி நாள்தோறும் குதிரையில் வந்து இராமநாதரை வழிபட்ட பின்னரே இரவு உணவை உண்பது வழக்கம். ஒருமுறை அவர் வருவதற்குள் அர்த்தசாமபூஜை முடிந்து விட்டது. அதனால் இனியும் தரிசனம் தடைபடக்கூடாது என்பதற்காக இந்த சேதுபதீசத்தை உருவாக்கினார். இங்கு எழுந்தருளியிருக்கும் இராமநாதர், விசுவநாதர் இருவரும் “சேதுபதியம்மன்” என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் விஜயரகுநாத சேதுபதி குதிரை மீது சவாரி செய்யும் பாவணையில் அமைந்த உலோகச் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சேதுபதீசத்தின் தெற்கே உள்ள சிறிய நடைமண்டபம் வழியாகவும் மகாலட்சுமி தீர்த்தத்தையும், மகாலட்சுமி சன்னிதியையும் அடையலாம்.

பொருள் முதலிய மங்கள செளபாக்கியங்களுக்கும் தலைவியான மகாலட்சுமியை தீர்த்தத்தில் நீராடி வழிபட்ட பின் நடைமண்டபம் வழியாக தெற்கு நோக்கிப் போனால் பர்வதவர்த்தினியின் சன்னிதியில் அமைந்த கல்யாணமண்டபம் வரும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு கல்யாண உற்சவ வைபவம் இந்த மண்டபத்தில் நடைபெறுவதால் இதற்கு ”கல்யாணமண்டபம்” என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கல்யாண மண்டபத்தின் இருபக்கத்திலும் விநாயகர் மற்றும் முருகன் சன்னிதிகள் உள்ளன.

மகாலட்சுமி தீர்த்தத்தை அடுத்து சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்கள் உள்ளன, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட மிகப்பெரிய தொட்டியில் இம்மூன்று தீர்த்தங்களும் உள்ளன.

மேற்கு சுற்ற்றின் மேற்கு திசையில் ஸ்ரீ கோதண்டராமசாமி கோவில் கருவறையில் இருப்பதைப் போலவே கோதண்டராமர் கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் பகுதியில் கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன, இத்துடன் பத்து தீர்த்தங்கள் நிறைவு பெறும்.

இதற்கடுத்து வெள்ளை சலவைக்கல்லால் வடிவமைக்கப்பட்ட சேதுமாதவர் கோவில் உள்ளது. கிழக்கு பார்த்து மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவைகளோடு அமைந்துள்ள இக்கோவிலில் சேதுமாதவராக எழுந்தருளியிருப்பவர் விஷ்ணு! அவர் இங்கு சேதுமாதவராக வந்ததற்கு ஒரு தனி கதை உண்டு.

மதுரையை ஆண்டு வந்த புண்ணியநாதி என்ற மன்னன் இங்குள்ள இராமநாதர் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான். அவன் தனுஷ்கோடி சென்று விதிப்படி நீராடி விஷ்ணுவை முன்னிட்டு ஒரு யாகம் செய்தான். இராமநாதரையும் தரிசித்து வந்தான். இதனால் அவனுடன் விளையாடிப் பார்க்க நினைத்த விஷ்ணு மகாலட்சுமியை ஒரு சிறுமியாக அங்கே அனுப்பி வைத்தார். தனக்கு மகள் இல்லாத குறையை போக்கவே இப்பெண்குழந்தை கிடைத்திருப்பதாக நினைத்த மன்னன் அவளை அரண்மனைக்கு அழைத்துச் சென்று வளர்த்து வந்தான். பருவ வயதை அடைந்த மகாலட்சுமி அழகு தேவதையாய் விளங்கினாள். ஒருநாள் அவள் அரண்மனை தோட்டத்தில் பூக்கள் பறித்துக் கொண்டிருந்த போது வயதான அந்தணர் ஒருவர் அவளின் அழகில் மயங்கி கையை பிடித்து இழுப்பதைக் கண்ட காவலர்கள் பதறிப்போயினர். பாய்ந்து வந்தவர்கள் அந்தணரை பிடித்துக் கொண்டு போய் மன்னன் முன் நிறுத்தினர்.

நடந்தவைகளைக் கேட்டு கோபம் கொண்ட மன்னன் இராமநாதசாமி கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் கயிற்றாலும், சங்கிலியாலும் அந்தணரை கட்டிப்போட உத்தரவிட்டான். மன்னனின் உத்தரவு காவலர்களால் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் விடியும் நேரம் தான் கட்டிப்போட உத்தரவிட்ட வயதான அந்தணர் சங்கு, சக்கரம் ஏந்தி ஆதிசேஷன் மீது படுத்திருப்பதைப் போல மன்னன் கனவு கண்டான். பதறி எழுந்தவன் விடிந்ததும் தன் வளர்ப்பு மகளோடு இராமநாதசாமி கோவிலுக்கு வந்தான். அங்கு மண்டப தூணில் தன் கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் விஷ்ணு அவனுக்கு காட்சியளித்தார்.

இதைக்கண்டு செய்வதறியாது திகைத்து தன்னை மன்னித்தருளும்படி பாதம் பணிந்து வனங்கி நின்ற மன்னனிடம் விஷ்ணு தன் விளையாட்டைப் பற்றி கூறினார். அதோடு தான் இங்கேயே “சேதுமாதவர்” என்ற பெயரில் தங்கப் போவதாகவும், இங்கு என்னை தரிசிப்பவர்களின் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் என்று கூறியும் அருளினார். மன்னனின் வளர்ப்பு மகளாய், அழகு தேவதையாய் அதுவரை அங்கு நின்றிருந்தவள் மகாலட்சுமியாய் மாறி விஷ்ணுவோடு இணைந்தாள். சேது மாதவர் “ஸ்வேத மாதவர்” என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். “ஸ்வேதம்“ என்பதற்கு “வெள்ளை நிறம்” என்று பொருள்.

”ஹரியும் (விஷ்ணு), சிவனும் ஒன்னு” என்பதை உலகிற்கு உணர்த்தும் விதமாக இவ்விருவரும் இத்தலத்தில் வீற்றிருகின்றனர். சேதுமாதவர் சன்னிதிக்கு அருகிலேயே சேதுமாதவ தீர்த்தம் அமைந்துள்ளது. தெப்பக்குளம் போன்ற அமைப்புடைய இத்தீர்த்தத்தில் நீராடி சேதுமாதவரையும், மகாலட்சுமியையும் தரிசிக்க வேண்டும்.

மேற்கு சுற்றும், மேற்கு கோபுர வாசலிலிருந்து சேதுமாதவர் சன்னிதிக்கு வரும் வழியும் கூடும் இடம் பெருக்கல் குறி போல இருக்கும். சொக்கட்டான் பலகையை நினைவுபடுத்தும் வகையில் அதன் தோற்றம் அமைந்துள்ளதால் “சொக்கட்டான் மண்டபம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தில் ஒரே கல்லில் உருவான மூன்று ஜன்னல்களும், அதில் பசுவின் முகமும் அமைந்திருப்பது பார்க்க கண்கொள்ளா காட்சியாகும்.

மூன்றாம் திருச்சுற்றின் வடமேற்கு மூலையில் “ஸ்ரீ இராமலிங்க பிரதிஷ்டை” நிகழ்ச்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மூலையில் நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது. மற்ற கோவில்களில் உள்ளதை விட நடராஜர் விக்கிரகம் உயரமாகவும், சன்னிதியின் விமானம் ருத்திராட்ச மணிகளால் அமைக்கப்பட்டும் இருப்பது சிறப்பு. கணங்களுக்கெல்லாம் அதிபதியாய், சபாபதியாய் சிவகாமியோடு வீற்றிருக்கும் நடராஜரை வணங்கி வழிபடுவதோடு மூன்றாம் திருச்சுற்று முடிவடையும்.

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்


Wednesday, 28 February 2018

மன அழுக்குகளை நீக்கும் தீர்த்த நீராடல்!ஆலய வாயில் கடந்ததும் கருவறைக்குச் செல்வதற்கு முன் ஆலயங்களுக்குள் இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும். எல்லா தண்ணீரையும் “தீர்த்தம்” என்று சொல்வதில்லை. கோவிலின் கருவறையில் உள்ள இறைவனுக்கு படைத்து பூஜிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே “தீர்த்தம்” என்போம். அத்தகைய போற்றுதலுக்குரிய தீர்த்தங்கள் இராமேஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிறைய இருந்திருக்கிறது. இருக்கிறது. அதனாலயே சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது இத்தலத்தின் சிறப்பாக போற்றப்படுகிறது.

பூர்வ, புண்னிய பாவங்களை போக்கிக் கொள்ளவும், இறந்தவர்களுக்கு பிதுர் காரியங்கள் செய்யவும் மட்டும் இந்த தீர்த்தங்களுக்கு வந்து மக்கள் நீராடுவதில்லை. மக்கட்பேறு கிடைக்க வேண்டியும் இங்கு வந்து தீர்த்தமாடுகின்றனர். நீண்டகாலமாக குழந்தை இல்லாமலிருந்த இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர் வங்கத்தில் இருந்து நடந்து வந்து இங்கு தீர்த்தமாடிய பின்பு தான் குழந்தை பிறந்ததாம்! இன்றும் இராமேஸ்வரத்தில் தீர்த்தமாடினால் குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

தீர்த்தங்களின் எண்ணிக்கை குறித்து நூல்களில் ஒவ்வொரு விதமாக கூறப்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 64 தீர்த்தங்களில் 51 மட்டுமே அறியப்பட்டுள்ளது. எஞ்சி உள்ள 13 தீர்த்தங்கள் அறியப்படாமலே உள்ளது. 51 தீர்த்தங்களில்

 • மகாலட்சுமி தீர்த்தம்
 • சாவித்திரி தீர்த்தம்
 • காயத்ரி தீர்த்தம்
 • சரஸ்வதி தீர்த்தம்
 • சக்கர தீர்த்தம்
 • சேதுமாதவ தீர்த்தம்
 • நள தீர்த்தம்
 • நீல தீர்த்தம்
 • கவய தீர்த்தம்
 • கவாட்ச தீர்த்தம்
 • கந்த மாதன தீர்த்தம்
 • பிரம்ம ஹத்தி தீர்த்தம்
 • சூர்ய புஷ்கரினி தீர்த்தம்
 • சந்திர தீர்த்தம்
 • சாத்தியாமிர்த தீர்த்தம்
 • சிவ தீர்த்தம்
 • சர்வ தீர்த்தம்
 • சங்க தீர்த்தம்
 • கயா தீர்த்தம்
 • கங்கா தீர்த்தம்
 • யமுனா தீர்த்தம்
 • கோடி தீர்த்தம் 


ஆகிய 22 தீர்த்தங்கள் இராமநாதசாமி கோவிலுக்குள்ளேயே இருக்கின்றன. மற்ற தீர்த்தங்களான…

  
 • நவபாசண தீர்த்தம்
 • சக்கர தீர்த்தம் (தேவிபட்டிணம்)
 • வேதாள தீர்த்தம்
 • பாபவிநாச தீர்த்தம்
 • கபி தீர்த்தம்
 • பைரவ தீர்த்தம்
 • சீதா தீர்த்தம்
 • வில் ஊன்றி தீர்த்தம்
 • மங்கள தீர்த்தம்
 • இரணவிமோசன தீர்த்தம்
 • அமுதவல்லி தீர்த்தம்
 • இலட்சுமண தீர்த்தம்
 • இராம தீர்த்தம்
 • தனுஷ்கோடி தீர்த்தம்
 • சடாமகுட தீர்த்தம்
 • சுக்ரீவ தீர்த்தம்
 • தரும தீர்த்தம்
 • பீம தீர்த்தம்
 • அர்ச்சுன தீர்த்தம்
 • நகுல தீர்த்தம்
 • சகாதேவ தீர்த்தம்
 • திரெளபதி தீர்த்தம்
 • பிரம்ம தீர்த்தம்
 • பரசுராம தீர்த்தம்
 • அனுமகுண்ட தீர்த்தம்
 • அகத்திய தீர்த்தம்
 • அக்னி தீர்த்தம்
 • நாக தீர்த்தம்
 • சக்கர தீர்த்தம் (திருப்புல்லாணி)

ஆகிய 29 தீர்த்தங்கள் இராமேஸ்வரத்தைச் சுற்றி உள்ள இடங்களிலும், கோவிலுக்கு வெளியேயும் அமைந்துள்ளன. 

தீர்த்தங்களில் குளிப்பதற்கு ஜாதி, மத தடைகள் ஏதுமில்லை என்ற போதும் அதற்கென சில நிபந்தனைகள் இருக்கின்றன. அவைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும். பெண்கள் மாத விலக்கு நாட்களிலும், ஆண், பெண் உடலுறவுக்குப் பின் தனியாக சுத்தம் செய்து கொள்வதற்கு முன்னும் புனிதத் தீர்த்தங்களில் நீராடக் கூடாது. அதேபோல, மனைவி கர்ப்பம் உள்ள காலத்தில் கணவனும், பிண்டம் வைக்காதவர்களும் தீர்த்தங்களில் குளிக்கக்கூடாது என புராணங்கள் கூறுகின்றன.

பயணமும், யாத்திரையும் எப்படி வெவ்வேறானதோ அவ்வாறே வெவ்வேறானது வீட்டின் குளியறையில், கிணற்றடியில், குளத்தங்கரையில் குளிப்பதும் புண்ணிய தீர்த்தங்களில் குளிப்பதும்! இரண்டும் ஒன்றல்ல. வீட்டில் குளிக்கும் போது அழுக்குத் தேய்த்து, சோப்புப் போட்டுக் குளிக்கலாம். ஆனால், புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் போது அப்படி செய்யக் கூடாது. உடல் அழுக்கை நீக்குவதற்குத் இவைகள் அவசியம். உள்ளத்து அழுக்கை நீக்க இவைகள் தேவையில்லை. குளிக்கிறோம் என்ற உணர்வின்றி உள்ளத்து (மன)  அழுக்குகளைக் கழுவுகிறோம் என்ற உணர்வே மேலோங்கி இருக்க வேண்டும். அதனால் தான் ஆண், பெண் பேதமின்றி தீர்த்தங்களில் எல்லோரும் ஓரிடத்தில் மூழ்கி எழுகின்றனர்.

எல்லா தீர்த்தங்களுமே தனித்தனி சிறப்பும், மகத்துவமும் உடையதாயினும் சில தீர்த்தங்களின் சிறப்பு குறித்து புராணங்கள், இலக்கியங்கள், தல வரலாறுகளில் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இலங்கையிலிருந்து திரும்பும் வழியில் தாகம் எடுத்து சீதை தண்ணீர் கேட்டதும் இராமர் அம்பை எடுத்து கடலில் எய்தார். அந்த இடத்தில் நல்ல தண்ணீர் ஊற்று ஒன்று தோன்றியது. கடலின் நடுவில் கிணறு வடிவில் உள்ள அந்த ஊற்று “வில் ஊன்றி தீர்த்தம்”

உயர்குலத்தைச் சேர்ந்த பிரம்மனுக்கும், தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவனுக்கும் ஒரே மாதிரியான முக்தி கொடுத்தது ”பாபவிநாச தீர்த்தம்”

மனோஜவ பாண்டியனுக்கு அரச மங்களமும், குடும்ப மங்களமும் இறுதியில் முக்தியும் கொடுத்தது “மங்கள தீர்த்தம்”

இந்திரனுக்கு பிரம்மஹத்தி நீக்கியதோடு சீதை அக்னியில் குளித்த நினைவுக்கு உரியதுமாய் விளங்குவது “சீதா தீர்த்தம்”

மகாபாரத போரில் துரோணரை கண்ணன் கூறியபடி “அசுவத்தாமா ஹத குந்தர” எனச் சொல்லி தந்திரமாக வீழ்த்திய தருமர் அந்த பாவம் தீர நீராடியது ”இராம தீர்த்தம்”

போரினால் சடாமகுடத்தில் (தலைகிரீடம்) பட்ட இரத்தக்கறையை இராம, இலட்சுமணர் கழுவிக்கொள்ள இறையருளால் தோன்றியது “சடாமகுட தீர்த்தம்”

கம்சனைக் கொன்ற பாவம் தீர கண்ணன் நீராடியது “கோடி தீர்த்தம்”

இப்படி பெருமையும், மகத்துவங்களும் நிறைந்த 51 தீர்த்தங்கள் அறியப்பட்டிருந்தாலும் அவைகளில் சில கடல் கொந்தளிப்புகளாலும், மணல் மேவியும் மூடப்பட்டு விட்டன. இன்று 24 தீர்த்தங்களில் மட்டும் நீராடப்பட்டு வருகின்றன. இதில் 22 தீர்த்தங்கள் கோவிலுக்குள்ளேயும், அக்னி, தனுஷ்கோடி ஆகிய இரு தீர்த்தங்கள் கோவிலுக்கு வெளியேயும் இருக்கின்றன. கோவிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கள் கிணறுகளாகவே அமைந்துள்ளன. கோயிலின் முன் இருக்கும் ஆலய வழிபாட்டிற்கான சீட்டுகள் விற்கும் இடத்தில் பணம் கட்டினால் அதற்கென உரியவர் நம்மோடு வந்து ஆலயத்திற்குள் இருக்கும் தீர்த்த நீரை நம்மீது இறைத்து கொட்டுவார். தீர்த்தங்களில் நீராடிய பின் பிரகாரங்களைக் கடந்து இராமநாதரை தரிசிக்கச் செல்ல வேண்டும்.

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்